Saturday, June 13, 2020

இரண்டு தந்தையர்

அன்புள்ள சுந்தர் சருக்கை அவர்களுக்கு,

அன்புள்ள சீனிவாச ராமாநுஜம் அவர்களுக்கு,

வணக்கங்கள்

இரண்டு தந்தையர் நல்லதொரு வாசிப்பு அனுபவமாக இருந்தது ,நன்றி.

மூன்று நாடகங்களையும் இருமைகளின் நடனம் என குறிப்பிட விரும்புகிறேன்  - அறிவுஜீவி Vs சாமான்யர் , கிழக்கு Vs மேற்கு ,வெள்ளையர் vs  ஏனையர், குடும்பம் Vs தனிமனிதன் , அன்பு Vs கட்டுப்பாடு , பழைமை Vs புதுமை , தந்தை vs மகன் , அறிவியல் vs ஆன்மிகம், கூர்மை vs முழுமை , உண்மைகள் vs  பாவனைகள் , அழகு vs அசிங்கம் , பிம்பம் vs நிழல் , லட்சியம் / கனவு   vs செயல்பாடு என வாசகனை ஊஞ்சலாட அழைக்கிறது.

ஹார்ட்டியின் மன்னிப்பு என்பது ஹார்டியின் நியாயப்பாடு என்று மாறியிருக்கிறது.
இது ஹார்டியின் உலகப் பார்வையின் இறுக்கத்தை தெளிவுபடுத்துகிறது.

எல்லா உண்மைகளையும் அறிந்தவராக ஹார்டி இருக்கிறார் 
ஐன்ஸ்டீன்  உண்மையை உணர்ந்திருந்தாலும் ஒப்பு கொள்ள மனம் இல்லாதவராக மாறி விட்டிருந்தார். காந்தி மீண்டும் மீண்டும் மறுபரிசீலனை செய்து சுற்றியிருப்பவர்களை திகைக்க வைக்கிறார். 

ஜானகி தனக்கு எந்தக் குறையும் இல்லை எனக்  கூறுகிறார்
லீசர்ல் தொடர்ந்து தன் தந்தையை குற்றம் சுமத்தியபடியே இருக்கிறாள்
ஹரிலால் தனது பாவனைகளை தானே முன் வந்து களைகிறான்.

மனதுக்கு நெருக்கமானதும் மிகுந்த தத்தளிப்புக்கு உள்ளானது ராமானுஜம் அவர்கள் தான் - தனது மேதைமையை உணர்ந்திருந்தார் - மேதைமை குறித்த அலட்டல் இல்லை - மனைவியின் அன்பிற்காக ஏங்கினார் - தாய் சொல்லை தட்டவில்லை - ஹார்டியின் உறவை மதித்தார் - சாமானியர்களை குறித்து அறிந்திருந்தார் ஆனால் காழ்ப்பு இல்லை - தன் ஆளுமையையும் விட்டுக் கொடுக்காது தான் மனம் பிறழந்தவன் இல்லை எனவும் அதே நேரத்தில் ஹார்டியின் மீது எந்தப்  பழியும் வரவேண்டாம் எனவும் நினைத்தார் - நிறவெறியை கூட தன் தோற்றத்தின் மீதான ஒரு விமர்சனமாக மாற்ற முயன்றார் - இருமைகளின் நடனத்தை அவர் சுமந்தார் - அது தாங்க முடியாததாக இருந்தது.

காந்தி குறித்து ராமானுஜம் அவர்கள் என்ன அபிப்ராயம் வைத்திருந்தார் என்று தெரியவில்லை - இதே போலத் தானே ரயிலிருந்து கீழே தள்ளி விடப்பட்டிருப்பார் காந்தி - அது வரலாற்றை  மாற்றியதை நாம் அறிவோம். நவீனத்தின் எல்லா தத்தளிப்பிற்கும் காந்தியிடம் விடை உள்ளது - நசுக்க முடியாத ஒரு மன எறும்பு. நடந்து கொண்டே இருப்பது ,உள்ளே  ஊர்ந்தபடி அவ்வப்போது சுருக் என்று கடித்தபடி தற்சுட்டி திகைக்க வைப்பது.

 அன்புடன்
மணிகண்டன்

No comments: