எழுத்தாளர் தேவகாந்தன் அவர்களின் பால்ய காலங்களின் நினைவோடை. 1947 ல் இலங்கையின் வட மாகாணத்தில்பிறந்தவர். பல முதல் அனுபவங்களில் "அன்று எவ்வாறு உணர்ந்தோம் என்று இன்று நினைவுகளை" மீட்டி சிறு நிகழ்வுகளின் கோர்ப்பாக எழுதப்பட்டுள்ள நினைவோடை.
வாசிக்கையில் முதலில் உணர்ந்தது அதன் நிதானமான நடை , மிகை தவிர்த்து சுவையான பால்யத்தை காலத்தின் முதிர்ச்சியின் துணை கொண்டு நினைவுகளை மீட்டுகையில் எழும் நிதானம் எழுத்தில் நன்கு வெளிப்படுகிறது , நாற்பது ஆண்டுகளாக இயங்கி வரும் படைப்பாளியின் மொழி ஆளுமையும் ஒரு காரணம்.
பெரும்பாலும் ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு "முதல்" அறிதலாக பதிவாகி இருக்கிறது, நினைவோடையின் ஒருமைக்கு கலைத்தன்மைக்கு இந்த "முதல்" சரடு வலு சேர்க்கிறது. முதற் கனவு, முதல் பிரார்த்தனை, முதல் மரணம், முதல் இழப்பு, முதல் தனிமை, முதல் காதல், முதல் பயம், முதல் காதல், முதல் கடல், முதல் பீடி, முதல் அக்கா, முதல் வெற்றி, முதல் கலவி, முதல் வாசிப்பு..முதல் தவறு என வாசகனை மகிழ்விக்க பிரயத்தன படாது எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாது, முன்பே கூறியது போல், ஒரு கனிந்த நிதானத்துடன் பால்யத்தை மீட்டுகிற திகம்பர நினைவுகள்.
நிதான நடையில் இருந்தாலும் நினைவோடையின் நிகழ்த்திக் காட்டும் தன்மையில் குறைவில்லை, ஆசிரியரோடு நாமும் சேர்ந்து நினைவுகளில் உயிர்ப்புடன் பங்கு கொள்ள முடிகிறது.பிறிதொரு நாளில் நினைவோடையில் அமைந்துள்ள புதிய சொற்களை கண்டடைய, மென் உணர்வுகளை உணர இன்னும் ஒரு முறை வாசிக்க வேண்டும்.
No comments:
Post a Comment