Wednesday, September 29, 2021

இயல்பு நிலை - யூ ஜி கிருஷ்ணமூர்த்தி

இயல்பு நிலை  - யூ ஜி கிருஷ்ணமூர்த்தி 

பொதுவாக நாம் ஆன்மீக ஆசிரியர்களை வாசிக்கையில் எவ்வளவு தான் என்னை தொடராதே என அவர்கள் அடித்து விரட்டினாலும் "குரு ஸ்தானம்" இயல்பாக அமைந்து விடுகிறது, அவர்கள் அளிக்கும் விளக்கங்கள் அல்லது விளக்கங்கள் மாதிரியானவை, விஷயங்கள் குறித்து explanatory தொனியில் இல்லாமல் விடை அறிய வந்தவனை நேர் பாதையில் செலுத்த ஒரு leading into தொனியில் இருப்பதைக் காணலாம். இந்த நூல் அப்படி ஒன்றாக இருக்குமோ என்ற சந்தேகம், ஏனெனில் யூஜி அனைத்து ஆன்மீக தேடல் கட்டமைப்புகளை நிராகரித்து கூறுவது போல் இருப்பினும் பல இடங்களில் காலம்காலமாக தொடர்ந்து வரும் ஆன்மீக தேடலின் கூறுகள் யூஜி யின் அனுபவங்களிலும் விளக்கங்களிலும் இருப்பதை காண முடிகிறது. 


புலனடக்கம் என்பதை ஒருங்கிணைப்பாளர் இல்லாத புலன் செயல்பாடு என்றும், ஆன்மீக சக்கரங்களை உடல் ரீதியான சுரப்பிகளின் செயல்பாடாகவும், சாம்பல் என்னும் உருவகம் மூலம் எண்ணங்கள் பொசுங்கி உடலெங்கும் சூடு பரவும் விதமாகவும், மாயை என்பதை எண்ணங்கள் உருவாக்க நினைக்கும் தொடர்ச்சியான "நீ" என்றும்,  நான் அழிவதை கேள்வி மறைந்து duality மறையும் இயற்கை நிலை இடமாகவும்  இறுதி பேரின்ப நிலையை மிகுந்த உடல் வலி மிகுந்த  இயல்பு நிலை என மரபான விஷயங்களுடன் தொடர்புப்படுத்தி பொருள் கொள்ள வாய்ப்பிருக்கிறது.

யூஜி ரமணர் சந்திப்பில், ரமணர் "என்னால் அளிக்க முடியும் உன்னால் வாங்கிக்கொள்ள முடியுமா ?என்று யூஜி யை பார்த்து கேட்கிறார். "படிநிலைகள் இல்லை என்றும் ஒன்று விடுபட்டவர் அல்லது விடுபட வில்லை" எனவும் ரமணர் கூறுகிறார், இது கிட்டத்தட்ட மீள முடியாத உடல் அணுக்களின் மாற்றம் என்று யூஜி கூறுவதற்கு ஒப்பானதாக இருக்கிறது, ஜெகே உடனான சந்திப்பில் ஜெகே வின் போதனைகள் "செயலின்மை"க்கு இட்டு செல்வதாக சுட்டிக் காட்டுகிறார் யூஜி, இது ஜேகே மீது மரபான ஆன்மீக தேடல் உள்ளவர்கள் வைக்கும் விமர்சனத்தை ஒத்து இருக்கிறது.

விடுபட்ட நிலை என்ற ஒன்றை இருக்கிறது என்று ஒப்புக்கொள்ளும் யூஜி அந்நிலை அடைய சாதங்கங்களும், படி நிலைகளும், சிந்தனையும் பயன் தராது என்றும் கூறுகிறார்,  சிறுவயதிலேயே மரபான நூல்கள் பயிற்சியும், யோக பயிற்சியும் பெற்றவர் யூஜி, இயல்பு நிலை அமைகையில் பாறங்கல் தாக்குவது போல் ஒரேடியாக நிகழும் என்றும் அவரது சொந்த அனுபவத்தை பகுத்து சொல்கையில் Will அ விருப்பம் உதிர்தல், incubation(ஒரு வித மௌனம்) , Calamity (உடல் மாற்றங்கள்) என்று விளக்குகிறார். மரபின் தொடர்ச்சியாக தன்னை ஒரு போதும் அறிவித்துக் கொள்ளாத யூஜி ஆயிரக்கணக்கான ஆண்டுகளின்  எண்ணங்களின் ஓட்டத்தின் முன்பான நம் ஆதரவற்ற நிலையை சுட்டி காண்பிக்கிறார். 

யூஜி மனித சிந்தனையே ஒரு நரம்பு சார்ந்த குறைப்பாட்டால் உருவானது என்றும், எண்ணம் உடற்செயற் பாட்டிற்கு  விரோதமானது என்று கூறும் இடங்கள் அதிர்ச்சி அளிப்பவை, ஆனால் நாம் குரு கட்டத்தின் உள்ளே தான் leading into zone ல் தான் இருக்கிறோம் என்பதுவும் உண்மை. யூஜி ஒப்பு க்கொள்ள மாட்டார் என்றாலும் நூலை வாசித்து முடிக்கையில் ஒரு வித அமைதி வந்தது உண்மை, அது வெறும் சாராம்ச புரிதல் comprehension கொடுத்த இன்பம் அல்லது கற்பிதம் என்று அழைக்கப்படுமோ? சாதகம் இல்லை என்றால் இவ்வித பரிச்சயங்கள் வெறும் சொற்குவியல்களோ ? 


No comments: