Sunday, September 26, 2021

குண சித்தர்கள் - க சீ சிவகுமார்

நிஜ வாழ்வில் நாம் அதிகம் கவனித்திராத , மறக்கப்பட்ட, அதிகம்  விஷயங்களுக்கு ஒளியூட்ட இலக்கியங்கள் முயல்கின்றன. நல்ல இலக்கியம் விதிவிலக்குகளை கொண்டே பொதுவான நியாயமான விஷயங்கள் குறித்த கேள்விகளை வாசகனிடத்தே வைக்கின்றன, நல்ல இலக்கியம் வாழ்வின் அத்தனை இறுக்கங்களையும் பரிச்சயப்படுத்துகின்றன. இதன் காரணமாகவே பெரும்பாலானோர் இலக்கியத்தை ஒரு சோக பாவனை யாக கருத முயல்கின்றனர். இத்தனை இறுக்கங்களையும் மற்றொரு வாசல் வழி நாம் காணத் தொடங்குகையில் நாம் சிரிக்கத் தொடங்குகிறோம். முதல் வகை நேரடி "போஸ்" என்றால் பின்னது "சைடு போஸ்". பகடி என்னும் சைடு போஸ்.



32 கட்டுரைகள் கொண்ட தொகுதி. ஒவ்வொரு கட்டுரையும் அதிக பட்சம் நான்கு அல்லது ஐந்து பக்கங்கள், இப்படைப்புகளை கட்டுரைகள் என்று வகைமை படுத்துவது கூட ஒரு வசதிக்காக தான், கட்டுரை என்றுமே ஆய்வாளர்களின் விமர்சகர்களின் அறிவுஜீவிகளின் தளம், வாழ்வின் யதார்த்தம் நிறுவனமயப்படும் இடம் கட்டுரைகள்,ஒரு மிகைக்காக இதை கூறுகிறேன். குண சித்தர்கள் படைப்புகளில் சித்தாந்த சாயலோ நிறுவன சாயலோ அறவே இல்லை நாம் தினப்படி காணும் மனிதர்களின் வாழ்விலிருந்து எடுக்கப்பட்டவை, ஒவ்வொரு கதையிலும் ஒரு மனிதனின் குறிப்பிட்ட குணாதிசய உலகில் நாம் அமிழ்கிறோம். சிறுகதைக்கான உயிர்ப்புடன் நிகழும் அதே நேரத்தில் கவித்துவம் மிளிரும் பல வரிகளை கொண்ட படைப்புகள் குண சித்தர்கள். 

அந்த மனிதனின் ஒட்டுமொத்த சாராம்சமே அந்த குணாதிசயம் தான் என்று ஆசிரியர் நம்மை நம்ப வைத்து அந்த மனிதனை வைத்தே ஊர் சுற்றி, அவன் சுற்றம் படும் பாடுகளை அல்லது அவன் அல்லல்களை காண்பித்து, நடக்கும் விஷயங்களை கண்டு நாம் சிரித்து சிரித்து ஓய்கிறோம். மீள யோசிக்கையில் அனைத்து நிகழ்வுகளின் உள்ளடக்கம் கொண்டு நேர் போஸில் இறுக்கமான கதைகளை அமைக்க இருக்கும் சாத்தியங்களைக் கண்டுகொள்கிறோம். 

கேள்வியின் நாயகன் - "கோழி ஏன் உலகத்தில் வந்தது ? அந்த இனத்தின் நோக்கமென்ன ? " என்று வினவுகையில் நம் அத்தனை நிறுவன ஆசைகளும் குப்புற கவிழ்கின்றன. மேகவண்ணன் - கண்டக்டர் ஒருவர் பேருந்தில் ஏற வரும் ஒருவர் குறித்த சித்திரம் "சரியான பாதையில் வருகிற அவர் சரியான போதையில் வருகிறவராகவும் இருந்தார் " என்ற வரியை விரித்து புரிந்து கொள்ள எவ்வளவு சாத்தியங்கள். எளிமையான வார்த்தைகளின் வரிசை பகடியாகும் மாயம். வரிசை சிறிது மாறினாலும் பகடி காணாமல் போகிறது . பிறவிகவிராயன் - "வேலு , நிஜமாகவே மலர்ந்து விட்ட பொழுது அது, சருகெடுத்து நுகர முடியாது என அறிகிற பொழுது " 

எந்தக் கதையிலும் வசையோ சாடலோ கேலிசித்திரமாகவோ இக் குணாதிசயங்கள் பதிவாகவில்லை. அத்தனை அக்கறையுடன் ஒவ்வொரு குணாதிசயங்களுடன் உரையாடி இருக்கிறார். மீண்டும் மீண்டும் வாசித்து சிரிக்கிறேன். 


No comments: