சமூக அமைப்பில், பல்வேறுபட்ட மனிதர்களின் உடல் சார்ந்த விழைவுகள், சிக்கல்கள் மற்றும் புரிதல்களை பேசும் சிறுகதைகளை கொண்ட தொகுப்பு "உடல்". பெரும்பாலான கதைகளில் ஒரு பாலியல் சிக்கலோ நெருக்கடியோ மையமாக இருக்கிறது . அனைத்து கதைகளின் பிரயத்தனம் , வெளி கண்ணோட்டத்தின் பார்வையில் "சரி" களை முன்வைத்தே அமைந்திருக்கிறது - இந்த "சரிகள்" நமக்கு முன்பே மிகவும் பரிச்சயமானவை - கட்டுரைகள் , விவாதங்கள் வழி இலக்கிய வாசகன் முன்னரே அடைந்துள்ள புரிதல்களே இந்த "அரசியல் சரிகள்"- கதைகள் அனைத்தும் கதையின் நிகழ்த்து அம்சத்திற்க்கு முக்கியத்துவம் கொடுக்காது, இவ்வரசியல் சரிகளை அடைய மட்டுமே பயணப்படுகிறது - நன்கு தேர்ந்த உரையாடல், மொழியின் அழகான கொச்சை வழக்கில் ஆசிரியரால் பல இடங்களில் கையாளப்பட்டிருந்தாலும் அவை கதையின் இந்த அரசியல் சரி வீச்சில் எடுபடாமல் போகின்றது. இது ஆசிரியர் கதாப்பாத்திரத்தின் மனோபாவத்தை விளக்கும் இடங்களில் சற்றே நீட்டித்து மொத்த சூழலின் கருத்தை கூறுகையில் வாசகனின் பங்களிப்பிற்கு இடமே இல்லாது போகிறது. சரளமானதெளிந்த உரைநடை அநேக இடங்களில் ஆசிரியரின் தெளிவை பறைசாற்றினாலும் வாசகன் பார்வையில் கதை உயிர் பெறும் இடங்கள் நிகழ்த்து அம்சம் அமைந்துள்ள இடங்களே.
பொருள் வயின் பிரிவால் ஏற்படும் சிக்கல்களை மையப்படுத்தி உடல், ஒலிக்குறிப்புகள், காமுறுதல்,முத்தம், கூண்டுக்கு வெளியே கதைகளும், இயற்கை விலகலை மையப்படுத்தி பைனரி மழை கதையும், முகம் சிறு பிறழ்வை மையப்படுத்தியும், மாகாளி, அம்மா கதையில் இயற்கையில் அமைந்த திரிபுகள் குறித்தும் அரிசங்கர் எழுதியுள்ளார். - உடல், மாகாளி, அம்மா, ஒலிக்குறிப்புகள் கதைகளின் சாத்தியங்கள் ஏராளம் . தற்போதைய அளவில் அவரது மொத்த புரிதலையும் தேய் வழக்குகளையும் அரசியல் சரிகளையும் கதையில் அமைக்கையில் உட்பிரதிகளுக்கும் மேலதிக வாசிப்பிற்கும் இடம் இல்லாது போகிறது .