Wednesday, February 23, 2022

ரெயினீஸ் ஐயர் தெரு - வண்ணநிலவன்

பெண்களின் அக உலகை அவர்களது மௌனம் மிகுந்த துயரங்களை நெருங்கி வாசிக்க முயலும் பிரதி, அதே நேரத்தில் பெண்களின் மனப் போராட்டங்களின் காரண காரியங்களுக்குள் புக விரும்பாத இலக்கிய ஆக்கமாகவும் அமைந்திருக்கிறது. அந்தப் பெண்களின் கதை வழி அவர்கள் வீட்டின் கதைகளும் நமக்கு கூறப்படுகின்றன. அனைத்து கதைகளையும் ஸ்தூலமாக புறத்தே இணைப்பது அம்மக்கள் வாழும் ரெயினீஸ் ஐயர் தெரு. அகத்தே  பால்யம் முதல் முதுமை வரையிலான பெண்களின் மன ஓட்டங்களை பதிவு செய்யும் நாவலாக ரெயினீஸ் ஐயர் தெரு அமைந்திருக்கிறது. 


சம்பவங்களின் கதை நிகழ்வுகளின் விவரிப்பிற்கோ பதைப்பிற்கோ ஓரளவுக்கு மேல் இடம் கொடுக்காது ஒரு வித கதைச்சுருக்கம் போல் வீடுகளின் கதைகளை வீட்டில் நடந்த சம்பவங்களை நினைவு கூர்ந்து படி நாவல் விரிகிறது. டாரதி என்னும் சிறுமி தொடங்கி, அற்புத மேரியின் முதல் சஞ்சலம், ஜீனோவின் பூப்பெய்திய காலங்கள், பிலோமியின் அக்கா மீதான பொறாமை, இருதய டீச்சர் சேசுராஜ் மண வாழ்வு கதை, அன்ன மேரி அக்காவும் அவரது விதவை கோலமும் அவர் மகன் தியோடரும், எஸ்தர் சித்தியும், மங்களவல்லி சித்தியும், ரோசம்மாள் ரெபேக்காள் முதுமைக்காலங்கள் என நாவல் பெண்களின் வெவ்வேறு வயதின் அக விழைவுகளை பதிவு செய்வதில் வெற்றி கண்டுள்ளது. ஏற்கனவே கூறியது போல் காரண காரிய ஆராய்ச்சியில் இறங்காது சிறிய ஓவியங்களை போல் நிகழ்வுகளை அளவான துல்லியத்துடன் நமக்கு படம் பிடித்து காட்டுகிறது. அந்த ஓவியங்களுக்கு ஒளியூட்ட காமம் மெல்லிய சுடராய் ஒளிர்கிறது. வழக்கம் போல் மாதங்களும் பருவங்களும் மாறியும் மாறாது இருக்கும் காலங்களும் வந்த வண்ணம் உள்ளன. 

அக்காம சுடரின் ஒளியில் டாரதி மழையில் நனைவதையும், ஜீனோ ராட்டினத்தில் சுற்றுவதையும், பிலோமி கடற்கரையில் குதிப்பதையும், இருதய டீச்சரின் மெல் அணைப்பையும், எஸ்தரின் அத்தனை குதூகலத்தையும் நீங்கள் காண முடியும். அந்த சுடரின் முன் தந்தை அண்ணன் கணவன் மகன் உறவு பேதங்கள் இல்லை, ஆணும் பெண்ணும் அவ்வொளியின் வெம்மையை சிறிது உணரும் தருணங்களின் மென் விவரிப்புகளே இந்நாவல். முற்றிலும் உடல் சார்ந்ததாக  என்று கேட்டால் இல்லை என்றே கூறத் தோன்றுகிறது. ஸ்பரிசத்தை விட அருகாமை சொற்களை விட மௌனம் மிக அழகாக அவ்வொளியில் மின்னுகிறது. மழை வருகையில் நாம் அமைதி அடைவது இதனால் தான் போலும், நாம் விழையும் ஒன்றின் அருகாமை நம்மை அறியாமல் நம்மை மகிழ்விக்கிறது நாம் மௌனித்து அதை உணர்கிறோம். 

No comments: