Saturday, February 12, 2022

கடைசி விவசாயி - ம. மணிகண்டன்

கடைசி விவசாயி- பார்க்க வேண்டிய படம். நல்ல படம். 


பொற்காலம் திரும்புகிறது

மெதுவாக நிதானமாக நொடி நொடியாக காலம் நகர்கிறது, நீங்கள் அவசரமாக எங்கும் செல்ல வேண்டியத் தேவை இல்லை . யாரிடமும் அவசர அவசரமாக பேசத்தேவையில்லை. மொத்தத்தில் குறைவாக, மெதுவாக கூற ஒரு சில வார்த்தைகளே உங்களுக்கு போதுமானதாக இருக்கும். 

பொற்காலம் திரும்புகிறது,

தினமும் நீங்கள் செய்வதற்கு ஒன்றிரண்டு வேலைகளே இருக்கும். அவ்வேலைகளே உங்கள் தேவைகளுக்கு போதுமானதாக இருக்கும் ஏனென்றால் உங்கள் தேவைகளே மிகக் குறைவாக இருக்கும்.நீங்கள் அவ்வேலைகளை மீண்டும் மீண்டும் செய்வதன் மூலம் சலிப்படையாமலும் இருப்பீர்கள். 

பொற்காலம் திரும்புகிறது,

நீங்கள் யார்? எந்தப் பிரிவை சேர்ந்தவர் ? உங்கள் கடமைகள் என்ன என்கிற வரலாற்று பளுக்களை யாரோ அகற்றி விட்டனர் , நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் மண்ணை சற்று கீறி விதைகளை சற்றே தூவி காத்திருப்பது மட்டும் தான். நீங்கள் எவரிடமும் செய்ய வேண்டியதை பற்றி மிக எளிதாக விளக்கிக் கூறுவீர்கள். உங்களிடம் ரகசியங்கள் இல்லை. தர்மசங்கடமான சாத்திரங்கள் இல்லை, கடினமான சூத்திரங்கள் இல்லை, தத்துவ சிக்கல்கள் இல்லை, அனைத்தையும் விளக்க உங்களுக்கு கைப்பிடி மண் மட்டுமே போதுமானதாக இருக்கும். இதையும் மீறிய வானம் பொய்க்கும் கடின காலங்களில் இறைஞ்சுவதற்கு கல் போன்ற ஒரு கடவுளும் நம் முன்னோர்களும் துணை இருப்பர். 

பொற்காலம் திரும்புகிறது,

உங்களின், உலக நடப்புகளை அறிந்து கொள்ளும் வேட்கை, தணிந்திருக்கும். நீங்கள் மென்மேலும் அறிவை விசாலம் செய்ய மேலும் புத்தகங்களை நாடுவதை நிறுத்தி விட்டு வெகு நாட்களாகி இருக்கும். சூர்யோதயமும் அஸ்தமனமும் , நிலவு நிரம்பிய இரவுகளுமே உங்களை இளைப்பாற்றும்.  தாவரங்களின் பூச்சிகளின் வண்டுகளின் பறவைகளின் மிருகங்களின் உலகிற்கு மிகவும் அருகில் நீங்கள் இருப்பீர்கள்.நீங்கள் பிறந்த ஊரை விட்டு வெளியே செல்ல அவசியம் இருக்காது,  காட்டு வழி உலகை சுற்றும் மயில் சித்தன் ஒருவன் வருடத்தில் இருமுறை வந்து கடவுளின் ஆட்சியை குறித்த புகார்களை, கடவுளின் வருத்தங்களை உங்களிடம் தெரிவிப்பான். 

பொற்காலம் திரும்புகிறது,

என்றுமே இருந்தது போல் காலம் உறைந்திருக்கும், புதிய இரும்பையோ புதிய தங்கத்தையோ புதிய எண்ணெய்யையோ நாடி பூமியின் அடியில் பயணப்பட மாட்டார்கள். பூமியின் மேல் நாகரிகம் உறைந்திருக்கும். இப்படியானதால் அப்படியானது, அப்படியானதால் இப்படியானது என்ற கதையாடல்கள் பழங்கதையாய் மாறிவிட்டிருக்கும். நீங்களும், அடிவானமும், காணி நிலமும், மயில் அகவும் பாறை மலைகளும், சூரியனாலும் சந்திரனாலும்  மழையாலும் நிரம்பி தளும்பும் வெளியும், பிரித்தறிய முடியாதவாறு வரும் மாலை நேரங்கள் மாறாது வந்தபடியே இருக்கும். 

No comments: