Monday, February 14, 2022

கல் மண்டபம் - வழக்கறிஞர் சுமதி

கல் மண்டபம் - வழக்கறிஞர் சுமதி. 2001ல் வெளிவந்த நாவல், 2009ல் ஒரு பதிப்பும், 2022 ல்  சிறுவாணி வாசகர் மையம் சார்பாக இப்போது மீண்டும் வெளியிடப்பட்டிருக்கிறது.


தேசு என்கிற வேதாந்த தேசிகன் என்னும் கதாப்பாத்திரத்தின் முப்பதாண்டு கால வாழ்க்கைப் போராட்டம்  நாவலாக அமைந்திருக்கிறது. தேசுவின் தாய், தந்தை, உறவு, சுற்றம் குறித்த எண்ணற்ற கிளைக்கதைகள் வழி ஒரு சமூகத்தின் மன ஓட்டத்தையும் அவர்கள் சந்திக்கும் அக மற்றும் புற சவால்கள் குறித்த குறிப்புகளும் நிறைந்த நாவல் கல்மண்டபம். 

வேதவிற்பன்னம் , தளிகை , ஈம சடங்குகள் - இம்மூன்று  விஷயங்கள் குறித்த சமூக உளவியல் சார்ந்த பார்வையாக நாவலை பார்க்காலம். தேசுவின் தந்தை ராமான்ஜி கற்றறிந்த வேதங்களை விடுத்து தளிகைக்கு வருகிறார் - காலம் அவர் மகனை ஈம சடங்குகள் செய்து வைக்கும் இடத்திற்கு தள்ளுகிறது. ஒப்புக்கொள்ளாவிடினும் வேத பாராயணம் விற்பன்னம் தளிகையை விட உயர்ந்த ஒன்றாகவும் , ஈமச்சடங்குகள் செய்வது இவ்விரண்டையும் விட சற்றே தாழ்ந்ததாய் சமூகத்தின் பார்வையில் இருப்பதான சித்திரம் நாவலில் வருகிறது. காலத்தால் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்ட தேசு மனம் உவந்து ஈம காரியங்கள் செய்யும் இடத்திற்கு வரவில்லை. வேறு வழி இன்றி அவன் தஞ்சம் அடைந்த இடம் , அவனை விட தனித்துவம் மிக்க கோம்ஸ் , மிக நிதானமான சௌமியா  கூட அவ்விடத்திற்க்கு வந்து சேர்கிறார்கள்  - மன நிறைவு என்று கூற முடியாவிடினும் ஒரு வித நிதானமான ஏற்போடு தங்களுக்கு விதிக்கப்பட்டதை ஏற்றுக் கொண்டு வாழ்கிறார்கள் - தேசுவின் தவிப்பு அல்லது மனத்தாங்கல் தன்னால் இவ்விதியின் போக்கை மீறி எதுவும் செய்ய முடியவில்லை என்பதே  - அல்லது அதற்கான தன்முனைப்பு தன்னிடம் இல்லை - தன்னை விதியின் சூழலிலிருந்து மீட்கும் கல்யாணியின் கரங்களை பற்ற அவனுக்கு ரொம்ப காலம் ஆகிறது - தன் சுற்றங்களிடம் இருந்தே நல்லதையும் கெட்டதையும் தேசு பெறுகிறான். நல்லதை கண்டுக்கொள்ள அவனுக்கு நாள் எடுக்கிறது.  

பிறர் துக்கத்தையும் தம் துக்கமாக சுமப்பவனே உண்மையான வைஷ்ணவன் என்கிறார் தேசுவின் மாமா மது. தன் பாட்டையே சரியாக பார்த்து கொள்ள தெரியாத தேசுவிற்கு லட்சிய வைஷ்ணவன் ஆவது எட்டாக்கனி -இவ்விடத்தில் தேசு சுந்தரேசன் மாமாவையும்  , ஹோட்டல் மணி ஐயரும் வைத்துப்  பார்க்கிறான் - இவ்விடத்தில் இவர்கள் இருவரும் தனது பாட்டையும் பார்த்துக்கொண்டு பிறரது சுமையை சிறிது முணுமுணுப்பும் இல்லாது  சுமக்கின்றனர். தேசுவின் தேம்பல் ஒரு நேர்கோட்டில் சென்றபடி இருக்க சுற்றி அமைந்துள்ள கிளைக்கதைகள் தேசுவிற்கு ஆறுதல் கூறியபடி அவனை தேற்றியபடி அவனை கரை சேர்க்க முயல்கின்றன - கிட்டுவின்  மாதவ் ராவின் விஸ்வநாதனின் அட்டுழியங்கள் சடகோபனை சௌமியாவை மணி ஐயரை ஓரளவுக்கு மேல் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதையும் டைகரின் அராஜகம் ஒரளவு தேசு போன்ற ஆட்களுக்கு தேவைப்படுகிறது என்பதையும் நாவலை வாசித்து முடிக்கையில் உணர்கிறோம். 

இறைவன் இருக்குமிடத்தில் இருந்து விலகி வந்ததை சௌந்தரம் ராமான்ஜியிடம் சுட்டிக் காட்டுகிறாள். இறைவனிடத்தில் இருந்து விலகிய ராமான்ஜி வேதத்திலிருந்தும் விலகி பொருள் நோக்கி ஒரு ஓட்டம் எடுக்கிறான் - பொருள் மட்டுமே நினைவாக கொண்ட அந்த ஓட்டத்தின் முடிவு மிகவும் கோரமான ஒன்றாக மாறி தேசுவை நிர்கதியாக்குகிறது -  இறைவனிடமும்  அறத்திலிருந்தும்  விலகிய  பொருள் ஓட்டத்தின் கோரம் பரத்தைமை நாவலின் முக்கியமான இழை - இறுதியில் தேசு தனது கடைசி வாய்ப்பை  அவனது தந்தையின் பூர்வ செயல்கள் வழி அடைகிறான். 

தேசு தனது வாரிசுகளுக்கு எந்த ஒரு விஷயத்தை விட்டு செல்லப் போகிறான் ? காலம் தோறும் மாறாத பிறப்பு நடப்பு இறப்பு சட்டகத்தை குறித்த பரிச்சியம் அடைந்திருக்கும் தேசு, இம்மூன்றை குறித்த தனது பார்வையை பொது சமூக கண்ணாடி வழியே இனியும் தொடர்ந்து பார்க்கப் போகிறானா ? இறப்போர்,  முக்தி வேண்டிய பயணத்திற்கு முடிந்த  தன் பங்கை சஞ்சலத்துடன் செய்து கொண்டிருக்கும் தேசுவிற்கு "முக்தி ரதம்" வேன், அவனது புறத்தேவையை தற்போதைக்கு தீர்க்கும் ஒரு வாய்ப்பு  -ஆனால் அவன் முதலிருந்து பங்கு கொள்ளும் முக்தி பயணத்தை சௌமியா போல் சடகோபன் போல் ஏற்புடன் அமைத்துக் அப்பயணத்தில் தன் பங்கை உணர்ந்து, தன்னை உணரும் வாய்ப்பை காலம் அவனுக்கு அருளுமா ? திடீரென சீற்றமாகி கணவனை இழந்த மாமியின் கூடையை பற்றியபடி பஸ் வரை நடந்து சென்று அவள் அளித்த நாலணாவை மறுத்து  " நான் கூலியும் இல்லை கிராதகனும் இல்லை"  என்று கூறியவன் அல்லவா தேசு. 

No comments: