Sunday, April 24, 2022

பீடி - தக்க்ஷிலா ஸ்வர்ணமாலி

பீடி - தக்க்ஷிலா ஸ்வர்ணமாலி - தமிழில் எம் ரிஷான் ஷெரிப்


கதை நாயகன் நயனாநந்த நாம் முன் பின் அறியாத நபர். இருப்பினும் மிக இயல்பாக நமக்கு அவனது கதையை கூறத் தொடங்குகிறான், தன் சொந்தக் கதையை துவங்கும் முன் விமர்சகர்களுக்கும் தீவிர வாசகர்களுக்கும் கதைக்குள் அணுகி வர  சிறியதொரு பீடிகை போடுகிறான். "அசர மாட்டோம்" - அந்தப்பக்க பதில். பீடிகை பின்னோடே தனது கதையை கோர்வையாக சொல்லத் தொடங்குகிறான் - இரண்டு அருமையான காதல் கதைகள், ஒரு காத்திரமான குடும்பக் கதை , நண்பன் குறித்த சிறிய கிளைக்கதை என கோர்த்து முழு கதையை கூறி முடிக்கிறான். பீட்சா டாப்பின் போல அரசியல் தத்துவம் உண்டு - அவை முக்கியமில்லை - செறிவான இரு காதல் கதைகளும் நல்லதொரு குடும்பம் உருவாகும் கதையும் தான் மனதைத் தொட்டது.

காதல் கதைகள் இரண்டிலுமே,  பெருக்கெடுத்து செல்லும் மௌனமும் இயற்கையுடன் இயைந்த உடல் உழைப்புமே காதல் மலர, தழைக்க போதுமானதாக  இருக்கின்றது. வேறெந்த சொல்லோ ஸ்தூலமான பொருளோ தேவைப் படாத பிரபஞ்சத்துள் காதலர்கள் சஞ்சரிக்கின்றனர். பரஸ்பரம் காதலை சொல்லக் கூட தேவை இல்லாது இயல்பாய் ஒரு நாள் பொழுது நிலவோ சூரியனோ எழுவது போல் அமைந்த காதல் கதைகள் இவை. அதிக பிரயத்தனம் இன்றி அமைந்த காதல்கள் குறித்த கதைகள் இவை, மௌனமும் அருகாமையும் அலங்காரம் செய்யும் காதல்கள் இவை. 

குடும்பக் கதையில் எனக்கு தெளிந்தவை - இரு வேறு குடும்பங்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் கலந்து முற்றிலும் புதியதொரு குடும்பத்தை நிர்மாணிக்கிறது. இப்புதிய குடும்பம் மேற்சொன்ன காதல்களைப் போலவே மிகக்குறைந்த எதிர்பார்ப்பினை தன் அமைப்பில் கொண்டதாக தன்னை நிர்மாணித்துக் கொள்கிறது.  நெடுநேர மௌனமும் குறைந்த தேவைகளும் இயற்கை சார்ந்த  உடல் உழைப்பும் இக்குடும்பத்தை அலங்கரிக்கின்றன. 

எதிர்பார்பில்லாத காதல் எதிர்பார்பில்லாத குடும்பம் 

நடுவில் நாயகன் நயனாநந்தவிற்கு வேஷங்கள் கட்ட வரும் அழைப்பும் அவ்வேஷங்களின் வியர்த்தம் அவனுக்கு பிடிபடுவதும் சுவாரஸ்யமான  இடை அத்தியாயங்கள். 

நயனாநந்த, காதல் வழியும் குடும்பத்தின் வழியும் குறிப்பிடத்தக்க விடுதலை மனநிலைக்கு செல்கிறான். அவன் சென்று அடைந்திருக்கும் இடம் கவர்ச்சிகரமான ஒன்று, அவன் செய்ய வேலை எதுவும் பெரிதாக இல்லை, தேவையும் குறைவு, அன்பிற்கு பஞ்சமில்லை, தீயவற்றிடம் இருந்து அது சொந்த தாயே ஆயினும் மெல்ல விலக அவன் பழகி இருந்தான், யோசிக்க பல மணி நேரங்கள் அவனுக்கு இருந்தன.  வெளி செய்திகளை அவன் செவிமடுக்க நிறுத்தி கொஞ்சம் காலமாகியிருந்தது, அவன்  நண்பன் வஜ்ரவுடன் பேசியபடியும் காதலியின் அருகாமையிலும் காலத்தைக் கழித்தபடி இருந்து வந்தான். சில நாட்களில் அவன் ஒன்றுமே செய்வது இல்லை. 

எதிர்பார்பில்லாத காதல் எதிர்பார்பில்லாத குடும்பம் எதிர்பார்பில்லாத தனிமனிதன் 

இது சாத்தியமே இல்லாத விஷயம் என்று கூறுபவர்களுக்கு என்னிடம் பதில் இல்லை. நயனாநந்த சிறுவயதில் ஒருமுறை ஊர் மாறியதோடு சரி, சொந்த ஊரிலேயே தான் இருந்து வருகிறான். இது அவனை செயலின்மையின் மதுவிற்கு அடிமையாக்கி விட்டது எனக்கருத வாய்ப்புண்டு,

நயனாநந்த விற்கு சில கஷ்டங்கள் உண்டு ,ஆனால் அவன் சிறு வயதிலிருந்தே தீமையிடம்  நேரடியாக மோதாது தப்பிக்க தெரிந்தவன். மெல்ல கஷ்டங்களை செரிக்கத் தெரிந்தவன். தானாகவும் அவனாகவும் அமைத்ததே இம்மூன்றும்

எதிர்பார்பில்லாத காதல் எதிர்பார்பில்லாத குடும்பம் எதிர்பார்பில்லாத தனிமனிதன் 

நல்ல நாவல். சிங்களத்திலிருந்து தமிழுக்கு ரிஷான் ஷெரிப் நன்றாக மொழிபெயர்ப்பு  செய்துள்ளார். 

Saturday, April 23, 2022

மாஸ்டர் ஒரு சாதா டீ ! - வா.மு. கோமு

மாஸ்டர் ஒரு சாதா டீ ! - வா.மு.கோமு



நான்கைந்து பக்கங்கள் கொண்ட முப்பது கதைகளின் தொகுப்பு, வாசகசாலை வெளியிட்டுள்ளது. கதைகள் முப்பதையும் சாராம்ச படுத்திப் பார்க்கையில், நல்விழுமியங்களுக்கும் வாழ்க்கை அவ்விழுமியங்களை தழைக்க, விடுக்கும் சவால்களுக்கும் இடையேயான ஒரு போட்டியாக அமைந்துள்ளதை உணர முடிகிறது. பெரும்பாலும் நல்விழுமியம் வெற்றிப் பெற்று விடுகிறது, அல்லது இந்தக் கதைகள் அப்படி முடிகின்றன, சில கதைகளில் விழுமியம் சற்று பிழையான பழைய ஒன்றாக தோன்றுவதால் தூக்கி வீசப்படும்படி  யாகி விடுகிறது. இக்கட்டான சூழ்நிலையின் உடனடி முடிவுகள் அதிர்ச்சியாகவும் சிரிக்கும்படியாகவும் நியாயமானதாகவும் அமைந்திருக்கின்றன. சிரிப்பது நியாயமா என இலக்கிய வாசகன் கேட்கக் கூடும்,வேறு வழி இல்லை,அப்பட்டமாக எழுதப்படும் வாழ்க்கைக் குறிப்புகள் சிரிப்பை வர வைத்தால் யார் என்ன செய்ய முடியும், சிரிப்பை தாண்டி சம்பந்தபட்டவர்களின் துயரம், அடி, அலைச்சல் நம் கவனத்தில் இருப்பதாகவே கதைகள்  அமைந்துள்ளன, வெறும் சிரிப்பு மூட்ட மட்டும் இக்கதைகள் எழுதப்படவில்லை - கதைக்களனும் கதைமாந்தரும் பொருளாதாரத்தில் கிடை மட்டத்தில்  உள்ளவர்கள், விளையாட்டாக இக்கதைகள் தொடும் இடங்கள் கனமானானவை, கதை மாந்தரின் ஆசை, காதல், லட்சியம், சுதந்திரம், கிறுக்குத்தனம், அவசரம், தியாகம், பக்குவம், சாமர்த்தியம், பயம்,  கதைகளாகி இருக்கின்றன, ஆசிரியரே பின்னட்டையில் குறிப்பிடுவது போல எந்த யுக்திகளையும் பயன்படுத்தாத நேரடிக் கதைகள் இவை. 

Friday, April 15, 2022

வாசிகள் - நாராணோ ஜெயராமன்

 1970களில் அமையப்பெற்ற சிறுகதைகள் இவை. நகரத்தை தனதாக்கத் தொடங்கிய தனி மனிதனின் நினைவுத் தடங்கள் என இக்கதைகளை கூறலாம். ஏறத்தாழ இன்று முடிவாகி விட்ட 'நகரப்பண்புகள்' குறித்த குறிப்புகளாகவும் இக்கதைகள் மலர்ந்துள்ளன. புற சூழலையும் விழிப்பு நிலை மனவோட்டங்களைத் தொடர்ந்து செல்லும் இக்கதைகள் முடிவான எதையும் முன் வைப்பதில்லை,  சூழலை அப்படியே முன் வைப்பதில் பெரு முனைப்பு கொண்டுள்ள இக்கதைகள்  'ஆழ உழல' முயல்வதில்லை.



கதைகளில், இவ்வாறு நகர சூழலின் இறுக்கம், தனிமை தாளாது அனைத்தையும் நுண்மையாக கவனிக்கத் தொடங்கி, ஒரு ராட்சத கேன்வாஸை உருவாக்கி, அதன் முன் எந்த ஒரு முடிவுக்கும் வர இயலாத ஒரு மௌன பார்வையாளனாக, அந்நியனாக,  அனைத்தையும் விட்டு ஓடத் துவங்க தயாராக இருப்பவன் போல, அதே நேரத்தில் இருக்கும் இடத்தை  துளி கூட விட்டுக் கொடுக்காதவனாக, அனைத்தை குறித்தும் அறிந்து கொள்ளும் ஆர்வம் உடையவனாக அதே நேரத்தில் ' அதனால் என்ன " என்னும் அலட்சிய போக்கை உடையவனாகவும்,  பொருள் வயின் லட்சியங்களை தியாகம் செய்பவனாகவும், கூட்டத்திலிருந்து வெளியேறிய தனி மனிதனாகவும் அவ்வாறு வெளியேறியதன் குற்றவுணர்வை சுமந்தவனாகவும், அனைத்து கண்களும் அவனையே நோக்குவதாக உணர்பவனும், சிறிய உதவிக்குக் கூட துணை இல்லாது இருப்பவனும்  இவ்வாறு ஒருவனே வெவ்வேறு சிறுகதைகளில் வரையறுக்க முடியாத வகையில் தோன்றி நகரத் தனி மனிதன் தடம் பதிக்கிறான். 

பகுப்பாய்வு, தானியங்குதல் (அடையாளமின்மை), வேக விழைவு, தக்க வைத்தல், லாப விழைவு , கண்காணிப்பு என்னும் அடிப்படைக் கூறுகள் இந்த தனி மனிதன் நகரத்தினோடு உறவாட தொடங்குகையில் தனிப்பட்ட அளவில் ஏற்பட்ட விஷயங்கள் -  இன்று இவை பெரும் முதலீடும் வாய்ப்பும் அளிக்கும் துறைகளாக நிறுவன அளவில் நிச்சயமின்மையை தவிர்க்க எதிர்கால நிச்சயத்தை உறுதி செய்ய இயங்கும் அடிப்படை விதிகளாக அமைந்திருப்பதை நாம் காண்கிறோம். இந்தச் சிறுகதைகள் மேற்சொன்ன விஷயங்களை புரிந்து கொள்ளும் வண்ணம் தனி மனித வாழ்க்கையின் எதிர்வினைகளாக அமைந்திருப்பதாக கருத வாய்ப்புள்ளது. 

கதைகள் வெளிப்படுத்தும் தலையாய பண்பாக நிச்சயமின்மை இருக்கிறது. நகர வாழ்வின் நிச்சயமின்மையை எதிர்கொள்ள நாம் கைகொள்ளும் திட்டமிடல், திட்டமிடலின் அயர்ச்சி, திட்டமிடல் இட்டு செல்லும் பகற்கனவுகள் , பகற்கனவுகள் அளிக்கும் மகிழ்ச்சிகள், அம்மகிழ்ச்சிகளின் நிச்சயமின்மை , அந்த நிச்சயமின்மை முன் பழக தொடங்குகையில் ஏற்படும் பரிச்சயம் அல்லது நிச்சயமின்மையின் சாஸ்வதத்தை உணர்ந்து Indifferent ஆக செயல்படும் ஒரு போக்கு என்று இணைத்து வாசித்து புரிந்துக் கொள்ள இக்கதைகள் ஒரு வாய்ப்பு. 

இக்கதைகளோடு கிட்டத்தட்ட பொருத்தப்பாடு உள்ள அசோகமித்திரன் அவர்களின் காலமும் ஐந்து குழந்தைகளும் சிறுகதையை வாசிக்கும் போது ஏற்படும் தீவிரத்தன்மையும் மன விகாசமும் நாரணோ ஜெயராமனின் கதைகளை வாசிக்கையில் ஏற்படுவது இல்லை - 'வாசிகள்' தொகுப்பு தொடும் தளங்கள் கிட்டத்தட்ட ஒரு மௌனமான முழுமையான ஒப்புக்கொடுத்தல் அமியின் கதையில் இருப்பது ஒப்பு கொடுக்க மறுக்கும் சீற்றமான தருணங்கள்- ஒளி பொருந்திய தருணங்கள். 

Tuesday, April 05, 2022

மாயவரம் - சந்தியா நடராஜன்

மாயவரத்தில் பிறந்த, வாழ்ந்த ஆளுமைகள் குறித்த கட்டுரைகள், நினைவுப் பதிவுகள் கொண்ட தொகுப்பு - சந்தியா நடராஜன் எழுதியுள்ளார். 


கட்டுரைகளை வாசிக்கையில் தோன்றிய விஷயங்கள் குறித்து, 


ஒரு ஊருக்கு எது பெருமை சேர்க்கிறது ? இன்று பெருமையாக சாதனையாக பார்க்கப்படும் விஷயங்கள் துவங்கிய விதம், அதற்கான தனி மனித முயற்சிகளை, தியாகங்களை நாம் இன்று எவ்வாறு புரிந்து கொள்கிறோம்? ஒரு தேசத்தின் வரலாற்றை ஊரின் வரலாற்றோடு பொருத்திப் பார்க்க வாய்ப்பாக இருக்கும் விஷயங்கள் குறித்தும் சில வரிகள் இந்தப் பதிவு


புத்தகத்தில் இடம் பெற்றுள்ள குறிப்பிடத்தக்க ஆளுமைகள் குறித்து, 


காவிரி

மாயூரநாதர் 

பரிமள ரங்கநாதர் 

தேரெழுந்தூரில் கம்பர்

தரங்கம்பாடி சீகன்பால்குவின்

மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை

உவேசா அவர்களின் தமிழ் கல்வி 

மாயூரம் வேதநாயகம் பிள்ளை 

மு அருணாச்சலம்

மூவலூர் ராமமிருதம் அம்மையார்

ஜி நாராயணசாமி நாயுடு

கல்கி கிருஷ்ணமூர்த்தி


கட்டுரைகளை வாசிக்கையில் இந்த ஆளுமைகள் குறித்து மேலும் அறிந்து கொள்ள ஆர்வம் எழுகிறது.

இவர்கள் தவிர மாயவரம் அளவில்  அரசியல், இலக்கிய, சமூக இயக்கங்களுக்காக வாழ்வின் பெரும் பகுதியை அர்ப்பணித்த ஆளுமைகள் குறித்த நினைவுக் குறிப்புகளும் இந்நூலில் உள்ளன. 

இந்திய தேசத்தின் சுதந்திர போராட்ட வரலாற்று நிகழ்வுகளின் எதிரொலி மாயவரத்திலும் இருந்தது. மாயவரம் சேர்ந்த தமிழர்கள் காந்தியுடன் தென்னாபிரிக்காவில் உரிமை போராட்டங்களில் பங்கெடுத்துள்ளனர். அதன் நினைவாக இந்தியா வந்தவுடன் காந்தி, தில்லையாடி வந்திறங்கி, தில்லையாடி மண் எடுத்து கும்பிட்டார். சுதந்திர போராட்டம் வலு பெற்ற அதே வேளையில்  விடுதலை வேட்கையையும் தாண்டி,  கள், அந்நியமோகம் - கதர், பெண்ணடிமை, சாதி ஒழிப்பு  என்னும் இன்ன பிற தளங்களில் மாயவரம் நெடுக நடைபெற்ற சீர்திருத்தங்கள், போராட்டங்கள்  குறித்த குறிப்புக்கள் அடங்கிய நூல் இது. குறிப்பாக ஜி நாராயணசாமி நாயுடு அவர்களின் ஆர்ப்பாட்டம் இல்லாத அப்பட்டமான வரிகள், ரத்தம் சிந்தி பெற்ற சுதந்திர வெற்றியை மறக்காமல் இருக்கச் செய்வது. சின்ன அண்ணாமலை அவர்களின் "சொன்னால் நம்ப மாட்டீர்கள்" புத்தகத்திலும் இது போன்ற, சுதந்திர போராட்ட காலம் குறித்த நேரடியான குறிப்புகள் இடம் பெற்றிருக்கும்.  சுதந்திரம் கிடைத்த பின் பல்வேறு சமூக தரப்பின் குரல்களாக சுதந்திர இந்தியாவை வடிவமைத்ததில் திராவிட, கம்யூனிஸ்ட் கட்சிகளின் பங்களிப்பை இக்கட்டுரைகள் வாயிலாக புரிந்து கொள்ளலாம். 

எது பெருமை 

ஒரு ஊருக்கு எது பெருமை ? ஒரு ஆறு,  நீடித்த பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து வரும் பண்பாட்டு விஷயங்கள், முதன் முதலில் நடந்தவை, ஆளுமைகளின் தனிப்பட்ட சாதனைகள் மற்றும் தியாகங்கள், வரலாற்று மனிதர்களின் தடம் அவ்வூரில் பதிந்த விதங்கள், அந்த ஊர்களின் விவசாய வியாபார செழிப்பு, வழிப்பாட்டு தளங்களின் தனித்துவம் - என பொதுவாக இவ்விஷயங்களை கூறலாம் - இவை பெரும்பாலும் நேற்றைய விஷயங்கள் -  அவற்றில் இன்றும் நீடிக்கும் சில விஷயங்கள் நாளைக்கும் எடுத்துச் செல்லக் கூடியதாக அமைந்தவை எவை ? 

---

மாயவரம்

இவ்வளவு பெருமை மிக்க ஊர்களிலிருந்து ஏன் வெளியேறினார்கள் 

ஏன் நினைவுகளை வெளியிருந்து தூண்டியபடி ?

நிலவுடைமை பெருமை சுடரின் மையக்கருமையில் சாதியும் தாசிகளும்,

நறும்புனல் காணா  காவிரியைக் கண்டு சிறு முக சுளிப்புடன் செய்யத் தவறியவற்றிற்கு மாமூலான ஒரு முகமன் 

மீண்டும் ஊர் திரும்பி வா என்றும்  வேண்டாம் என்றும் கை அசைக்கும்  உள்ளூர்வாசிகள்

பல கால சுடரின் கருமையை நூற்றாண்டு அரசியல் காந்தி திராவிடம் பொதுவுடைமை இன்னும் சிலர் கண்டு சொன்னவர்களுக்கு நாம் உறுதி அளித்த விஷயங்கள்.

மணிக்கு 120 ல் இரு ஐந்து மணி நேர பாய்ச்சலில் நாம் தொட்டு விட்டு திரும்பும் நம் குல தெய்வங்கள் 

இங்கிலாதது அங்கு அங்கிலாதது இங்கு என்று நாக்கை சுழற்றியபடி புலன்களை விரித்து நாம் அலைபாயும் நேரங்கள் பல நூற்றாண்டு வரும் என்றொரு கணக்குண்டு. நாம் இந்த பெருமை மிக்க  அலைச்சலை நிறுத்த ஒரு வழியுண்டா ? 

நில உடைமை சுடரில் தஞ்சம் புகவா இத்தனை நவீன வேடங்கள் என்று யார் அவர் கேட்பது ? 

கோபுரம் வேண்டாம் பிரகாரம் வேண்டும் என்று நீ கேட்பதில் ஏதோ அர்த்தம் 

சுற்றுப் பிரகாரத்தில் அமர்ந்து இருக்கையில் கேட்கும் நாதஸ்வர நாதம் உன் வீட்டு ஸ்பீக்கரில் குழறும் ரேடியோஹெட் 

தமிழ் வளர்த்த பண்டிதர்கள் கேட்கிறார்கள் எவ்வளவு தமிழ் youtube டைனோசர்கள் 

குந்தேரா " Slowness" என்றார்

இந்த "மெதுவா" வஸ்து அரிதினும் அரிதான ஒரு விடை , ஒரு சாளரம்.

மாயவரம் குறித்து அவர் எழுதிய நாவலா அது என்று இலக்கிய வாசகர் கேட்கிறார். எந்த ஜானர் ?

பழையதையும் புதிதையும் வெட்டி

நம் சோற்றுப் பருக்கைகளால் அட்டைக் கோட்டைகளில் ஒட்டும் எதிர் கால கனவு எனில் "சயின்ஸ் பிக்க்ஷன்"

காலமேனும் மரங்களில் கிளை தோறும் தாவித் தாவி பெருமை  பழங்கள் பறிக்கும் விளையாட்டு எனில் "வரலாற்றுப் படம் "

இப்போதைக்கு, "நடை சாற்றி விடுவார்களாம்" என பைபாஸில் விரையும் மனதின் "இருத்தலிய நாடகம்".

நீங்கள் செல்லும் கோயில் பிரகாரத்தில் "தேமே" என்று ஒருவன் அமர்ந்திருப்பான். நூற்றாண்டு சுற்றிய குழப்பத்தில் இருக்கும் அவனிடம் எதுவும்  கேட்காதீர்கள். அவனுள் உறையும் அத்தனை கேள்விகளுக்கும் மெதுவாய் தான் விடை வரும்.