Friday, April 15, 2022

வாசிகள் - நாராணோ ஜெயராமன்

 1970களில் அமையப்பெற்ற சிறுகதைகள் இவை. நகரத்தை தனதாக்கத் தொடங்கிய தனி மனிதனின் நினைவுத் தடங்கள் என இக்கதைகளை கூறலாம். ஏறத்தாழ இன்று முடிவாகி விட்ட 'நகரப்பண்புகள்' குறித்த குறிப்புகளாகவும் இக்கதைகள் மலர்ந்துள்ளன. புற சூழலையும் விழிப்பு நிலை மனவோட்டங்களைத் தொடர்ந்து செல்லும் இக்கதைகள் முடிவான எதையும் முன் வைப்பதில்லை,  சூழலை அப்படியே முன் வைப்பதில் பெரு முனைப்பு கொண்டுள்ள இக்கதைகள்  'ஆழ உழல' முயல்வதில்லை.



கதைகளில், இவ்வாறு நகர சூழலின் இறுக்கம், தனிமை தாளாது அனைத்தையும் நுண்மையாக கவனிக்கத் தொடங்கி, ஒரு ராட்சத கேன்வாஸை உருவாக்கி, அதன் முன் எந்த ஒரு முடிவுக்கும் வர இயலாத ஒரு மௌன பார்வையாளனாக, அந்நியனாக,  அனைத்தையும் விட்டு ஓடத் துவங்க தயாராக இருப்பவன் போல, அதே நேரத்தில் இருக்கும் இடத்தை  துளி கூட விட்டுக் கொடுக்காதவனாக, அனைத்தை குறித்தும் அறிந்து கொள்ளும் ஆர்வம் உடையவனாக அதே நேரத்தில் ' அதனால் என்ன " என்னும் அலட்சிய போக்கை உடையவனாகவும்,  பொருள் வயின் லட்சியங்களை தியாகம் செய்பவனாகவும், கூட்டத்திலிருந்து வெளியேறிய தனி மனிதனாகவும் அவ்வாறு வெளியேறியதன் குற்றவுணர்வை சுமந்தவனாகவும், அனைத்து கண்களும் அவனையே நோக்குவதாக உணர்பவனும், சிறிய உதவிக்குக் கூட துணை இல்லாது இருப்பவனும்  இவ்வாறு ஒருவனே வெவ்வேறு சிறுகதைகளில் வரையறுக்க முடியாத வகையில் தோன்றி நகரத் தனி மனிதன் தடம் பதிக்கிறான். 

பகுப்பாய்வு, தானியங்குதல் (அடையாளமின்மை), வேக விழைவு, தக்க வைத்தல், லாப விழைவு , கண்காணிப்பு என்னும் அடிப்படைக் கூறுகள் இந்த தனி மனிதன் நகரத்தினோடு உறவாட தொடங்குகையில் தனிப்பட்ட அளவில் ஏற்பட்ட விஷயங்கள் -  இன்று இவை பெரும் முதலீடும் வாய்ப்பும் அளிக்கும் துறைகளாக நிறுவன அளவில் நிச்சயமின்மையை தவிர்க்க எதிர்கால நிச்சயத்தை உறுதி செய்ய இயங்கும் அடிப்படை விதிகளாக அமைந்திருப்பதை நாம் காண்கிறோம். இந்தச் சிறுகதைகள் மேற்சொன்ன விஷயங்களை புரிந்து கொள்ளும் வண்ணம் தனி மனித வாழ்க்கையின் எதிர்வினைகளாக அமைந்திருப்பதாக கருத வாய்ப்புள்ளது. 

கதைகள் வெளிப்படுத்தும் தலையாய பண்பாக நிச்சயமின்மை இருக்கிறது. நகர வாழ்வின் நிச்சயமின்மையை எதிர்கொள்ள நாம் கைகொள்ளும் திட்டமிடல், திட்டமிடலின் அயர்ச்சி, திட்டமிடல் இட்டு செல்லும் பகற்கனவுகள் , பகற்கனவுகள் அளிக்கும் மகிழ்ச்சிகள், அம்மகிழ்ச்சிகளின் நிச்சயமின்மை , அந்த நிச்சயமின்மை முன் பழக தொடங்குகையில் ஏற்படும் பரிச்சயம் அல்லது நிச்சயமின்மையின் சாஸ்வதத்தை உணர்ந்து Indifferent ஆக செயல்படும் ஒரு போக்கு என்று இணைத்து வாசித்து புரிந்துக் கொள்ள இக்கதைகள் ஒரு வாய்ப்பு. 

இக்கதைகளோடு கிட்டத்தட்ட பொருத்தப்பாடு உள்ள அசோகமித்திரன் அவர்களின் காலமும் ஐந்து குழந்தைகளும் சிறுகதையை வாசிக்கும் போது ஏற்படும் தீவிரத்தன்மையும் மன விகாசமும் நாரணோ ஜெயராமனின் கதைகளை வாசிக்கையில் ஏற்படுவது இல்லை - 'வாசிகள்' தொகுப்பு தொடும் தளங்கள் கிட்டத்தட்ட ஒரு மௌனமான முழுமையான ஒப்புக்கொடுத்தல் அமியின் கதையில் இருப்பது ஒப்பு கொடுக்க மறுக்கும் சீற்றமான தருணங்கள்- ஒளி பொருந்திய தருணங்கள். 

No comments: