Monday, August 02, 2021

கொனஷ்டை படைப்புகள்

கவிஞர் ராணி திலக் தொகுத்து எழுத்து பிரசுரம் வெளியீடாக வந்திருக்கும் மணிக்கொடி காலத்து எழுத்தாளரான கொனஷ்டை அவர்களின் கதை கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு "கொனஷ்டை படைப்புகள் ".  அதிக பிரசங்கி , சந்நியாசி, ஈசுவர லீலை, தெய்வச்செயல் ஆகிய கதைகளும், 'ஊருக்குள்ள யாத்திரை' மற்றும் 'எங்கள் ஊர்' கட்டுரைகளும் பிடித்ததாகவும் நன்கு அமைந்து வந்ததாகவும் படுகிறது. 


முக்கால் நூற்றாண்டுக்கு முன்னர் எழுதப்பட்டுள்ள இக்கதைகள் "இவற்றை மதிப்பிடுவதும் எடை போடுவதும் அவசியமற்றது, அவை அந்த காலத்தின் நவீன எழுத்துக்கள்" என்று எழுத்தாளர் சாரு நிவேதிதா அவர்கள் கூறியதாக முன்னுரையில் கவிஞர் ராணி திலக் குறிப்பிடுகிறார், இதை அப்படியே ஏற்றுக் கொள்ள கடினமாக இருந்தாலும் பெரியவர்கள் கூறுவதில் விஷயம் இருக்கும் என்றே புரிந்துக்கொள்கிறேன்

எனக்கு பிடித்த மேற்சொன்ன குறிப்பிட்ட கதைகளும் கட்டுரைகளும் இன்றளவும் புதுமை குன்றாது அமைந்திருக்கின்றன. இந்த சில கதைகளின் வடிவமும் உள்ளடக்கத்தின் பாய்ச்சலும் நவீன கதை கட்டுரைகளுக்கு சளைத்தது அல்ல, ஏனைய கதைகள் மெலிதான ஹாஸ்யத்தின் துணை கொண்டு புராணம் , துப்பறிவு, காதல், அச்சு இதழ , சினிமா நட்சத்திர மோகம் ஆகிய தளங்களில் நிற்க முயல்பவை. சில கதைகள் வடிவ அல்லது வாசகர் மனதுடனான ஒரு சீட்டு விளையாட்டு எனக் கொள்ளலாம். இம்மதிப்பீடுகள் ஒரு வாசிப்பு கணத்திற்காகவே, கதைகளில்  அமைந்த தயவு தாட்சண்யம் இல்லாது அனைத்தையும் கிண்டல் செய்யும் இடங்களை ஹாஸ்யங்களை நவீன வாசகன் ரசிக்கவே வாய்ப்பிருக்கிறது. 

இந்நூல் வெளி வந்த விதம் குறித்து ராணி திலக் குறிப்பிடும் விதம்  சுவாரஸ்யம், மூத்தோர் வாக்கும் , தேடலும் , கடவுளின் ஆசியும், எதேச்சையும் கலந்து நம் கைகளில் புத்தகமாக வந்தமைந்திருக்கிறது "கொனஷ்டை படைப்புகள்".  முதல் புத்தகம் வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வாசிப்போம். 

No comments: