சயன் சகோதரர்களின் 'இக்கதை தொடங்காமலே முடிகிறது' "இழந்த சொர்க்கம்" குறித்த நேர்மறையான கனவுகளுடன் வந்திருக்கும் பிரதி, இங்கு சொர்க்கம், 'தூய' 'கறைபடாத' 'கலப்படம்' இல்லாத 'குழப்பங்கள்' இல்லாத ஒரு 'அன்பான', 'பூச்சு' இல்லாத 'முகமூடிகள்' அற்ற, 'மனிதஅறிவு' தலையிடாத பழைய காலம் என்ற பொருளில் வருகிறது.
ரொமான்டிக் என்று கூறலாமா என்று தெரியவில்லை, ஆனால் உணர்வு பூர்வமான ஒரு கனவின் வெளிப்படாக இந்த கதை அ கதைகள் இருக்கின்றன.
கதையின் பிரயத்தனம் முதலில் களைய வேண்டிய பிரிவுகள் அ வேற்றுமைகள் குறித்த ஆற்றாமையை வெளிப்படுத்துகின்றன, மேலும் முன்னகர்ந்து இத்தனை கால சிலந்தி அடைசல்களையும் களைந்து இயற்கையுடன் இணையும் ஒரு முயற்சியாக நம் உடலையும் உடல் குறித்த எவ்வித பேதமற்ற பிரக்ஞையையும் இக்கதை முன்வைக்கிறன. உடல் குறித்த நேர்மறை பிரதியாக , உடலின் மீது படர்ந்து செல்கிறது இந்தக் கதை. உடல்களின் இணைவை, கலவியை ஆதி ஆற்றலின் செயலூக்கத்தின் ஆவேசத்தின் இயலாமையின் அதிகாரத்தின் ஒரு பகுதியாக, வடிகாலாக காணாது அன்பின் விதைப்பாக காண்கிறது. என்றோ தொடங்கிய இந்த இருமையே இக்கதையின் அடிநாதமாக இருக்கிறது. அன்பின் விதைப்பிற்கும், பிரிவின் விதைப்பிற்கும் காரணமான இயற்கை கீற்று அமிலத்தின் (DNA)கதை தானா மனித வரலாறு ?. DNA என்பதன் இந்த மொழியாக்கம் ஆசிரியர்கள் செய்திருப்பது, நன்றாக அமைந்த ஒன்று.கணியன் கூறிய புணை போல் ஆருயிர் இந்த இயற்கை கீற்று அமிலமோ?
கதையின் உச்சப்புள்ளியாக இந்த அன்பின் விதைப்பை இணைவை நாம் கண்டுகொண்டால் மேலதிக கேள்விகளுடன் பிரதியை தாண்டி நாம் இன்றைய நாகரீகத்துக்குள் இறங்கலாம். கொல்லும் நோக்கம் இல்லை எனினும், எல்லை காப்பதற்கும், உணவிற்கும் நடக்கும் கானுயிர் இயக்கம் நமக்கு சொல்ல வருவது என்ன ? எறும்பு முதல் சிங்கம் வரை , பாசி முதல் ஆகாயத்தாமரை வரை, கள்ளி முதல் ஆலம் வரை உயிர்களை இயக்குவது எது ? கதை விவரிக்கும் நீர் துளிகளின் காதல் என்ற கவிமனம் அருகே மெர்வின் ஹாரிஸ் எழுதியுள்ள "The Naked Ape" என்கிற விலங்கியல் புத்தகத்தை வைத்தல் அபாண்டம் எனினும் நாம் முயல்வோம். உடற்கூறியல் மற்றும் மரபணு கதைகளின் படி மனிதன் கானுயிர் வரிசையின் முடிசூடா நாயகன். கலாச்சார வெற்றி அல்லது தோல்வி வெகு பின்னே வருகிறது, உடல் கூறு அமைந்த விதத்திலேயே மரபணு அமைந்த விதத்திலேயே தன் உடல் தவிர்த்த பொருட்களை உபயோகித்து தன் இருப்பை நிலைநாட்டியவன் மனிதன்.கலாச்சார நடவடிக்கைகள் மிக சொற்பமான அளவே அவனை மட்டுப்படுத்திறது என்கிறார் மெர்வின். அதே நேரத்தில் போர்களின் trauma தாக்கம் மரபணுக்களில் பதிகிறது என்றும் நாம் காண்கிறோம்.இலக்கிய பிரதியான இந்த கலாச்சார முயற்சியும் அவ்வகையே, இழந்த சொர்க்கம் பற்றி பேசும் கதை எனினும், அது தன் விழைவை, வேற்றுமைகள் நீங்கிய எதிர்காலத்தை நோக்கியே வைப்பதான எத்தனிப்பை கொண்டுள்ளது. இதே கனவை நாம் தத்துவங்களிலும் சமூக இயங்கியல் தளங்களிலும் கண்டிருக்கிறோம். இன்னும் வரும்.
No comments:
Post a Comment