Friday, August 20, 2021

மனிதர்கள் - நா கிருஷ்ணமூர்த்தி

சிறிய சிறிய திரிபுகள், கோணல்கள் அமைந்த கணங்கள், மனிதர்கள் பற்றிய கதைகள் இவை . இந்த கோணல்களின் வார்ப்பில் கூட ஒரு முழுமை இருக்கிறது . அவசர கோலத்தில் மட்டுமே வருகிற கோணல்கள் அல்ல நின்று நிதானித்து வரும் திரிபுகள் மாதிரிகள்.


அவற்றின் அழகே ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு ரூபங்கள் எடுப்பது தான் . "மனிதர்கள்" கதையில் அபாண்டாமாகவும், "உதிரும் மலர்கள்" கதையில் லௌகீகமாகவும், "ஒர் இரவின் பிற்பகுதி" கதையில் திகைக்க வைக்கும் அழகாகவும் அதட்டலாகவும, "வருகை" கதையில் லட்சிய முகமாகவும், "நிழல் மரத்தில்" புகழின் நிழலாகவும் இந்தத் திரிபுகள் வண்ணம் காட்டுகின்றன. இவ்வகை கதைகள் திரிபுக்கான காரண காரிய ஆராய்ச்சிகளில் இறங்காது கோணல்களின் முழு சொரூபத்தை நமக்கு காட்ட முயல்கின்றன. இருந்தும் துளி கூட அவநம்பிக்கை ஊட்டாத வகையில் கதை சம்பவங்கள் யதார்த்த பாணியில் நடந்து முடிகின்றன.

ஒப்பு நோக்குகையில் தொகுப்பில் உள்ள "காலமேனும் தூரம்" கதை சற்றே விலகி வேறொரு பின்புலத்தில் நிகழ்கிறது. அனைத்து கதைகளும் அறுபதுகளில் "நடை" மற்றும் "கோணல்கள்" தொகுப்பிலும், "வருகை" கதை 1971 ல் "கசடதபற" விலும் வெளிவந்துள்ளன.

இந்நூலிற்கு உஷாதீபன் அவர்கள் எழுதிய விமர்சனமும் (ஜெயமோகன் அவர்கள் தளத்தில்), மாமல்லன் அவர்கள் கொடுத்த "நண்பர்கள்" கதை சுட்டியும் ( தினமணி) புத்தகம் வாங்கத் தூண்டியது, இக்கதைகளை வாசிக்கையில் நம் வாழ்வில் நாம் கண்ட திரிபுகளை அசை போட ஒரு சந்தர்ப்பம் வாய்க்கும்.

No comments: