Wednesday, August 11, 2021

உப்பு வேலி - ராய் மாக்ஸம்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கம் முதல் இறுதி வரை தொடர்ந்த , சிறுக சிறுக அமைக்கப்பட்டு உறுதியான வேலியாக மாறி மக்களை சுரண்டி மாபெரும் பஞ்சங்களின் கோர பிடியில் தவிக்க விட்ட ஆங்கிலேயர் அமைத்த சுங்க வேலி குறித்து வரலாற்றாய்வாளர் ராய் மாக்ஸம் எழுதியுள்ள ஆதாரபூர்வமான நூலான "The Great Hedge of India " வின் தமிழாக்கம் இந்நூல், மொழிபெயர்த்தவர் சிறில் அலெக்ஸ், தன்னறம் வெளியீடு


ஆங்கிலேய ஜெனரல் ஒருவரின் நினைவலைகள் நூலின் அடிக்குறிப்பில் தொடங்கி (Bakewar) பகெவார் வரை நீண்ட பயணம் இந்த நூல். அந்த அடிகுறிப்பிலிருந்து ஆங்கிலேய அரசு ஆவணங்களின் வழி, புவியியல் துறை வரைபடங்கள் வழி, இந்திய நண்பர்கள் துணையோடு gps கருவியின் எண்ணற்ற எண்களின் வழிகாட்டுதலில், வழிபோக்கர்களின் நண்பர்களின் உற்சாகமும் கேலியும் உந்தி தள்ள ராய் அவர்கள் கண்டடைந்தது என்ன என்பதை என் வாசிப்பில் தொகுத்துக் கொள்கிறேன்

கிஞ்சித்தும் இரக்கம் இல்லாத ஒரு அமைப்பு எவ்வாறு உருவாகிறது என்பதற்கான சாத்தியங்களை ராயின் சொற்களில் நாம் அறிந்து கொள்கிறோம், தனி நபரின் பேராசையாக தொடங்கி பின்னர்  கம்பெனியின் ஒப்புதலோடு குறிப்பிட பங்குதாரர்கள் சூறையாடும் களமாகி அதையும் தாண்டி ஆங்கிலேய அரசின் ஒப்புதலோடு  சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சூறையாடும் அமைப்பாக படிப்படியாக மாறுகிறது 

1857 க்கு பிறகான நேரடி  கட்டுப்பாட்டிலும் இந்த அமைப்பு தன் நாச வேலையை செவ்வனே செய்தது  குறிப்பிடத்தக்கது, தானியங்கள் பதுக்கல் , நிலவரி போக உப்பின் மீதான வரி, பதுக்கல் பாமரமக்களின் உயிர்களை சிறுக சிறுக உறிஞ்சி, தாது வருஷ பஞ்சங்களின் போதும் உப்பு வரியை கடுமையாக வசூலித்து ஒரு மானுடத்தன்மையற்ற சுங்கவேலியை தனது வருவாய் ஈட்டும் எந்திரம் ஆக்கியது ஆங்கிலேய அரசு.  இதை ஆங்கிலேய அரசின் அதிகாரிகளின் வருடாந்திர குறிப்புகளிருந்தே நிறுவுகிறார் ராய், இன்னொரு நம்ப முடியாத தகவலாக AO Hume அவர்கள் சுங்க ஆணையராக இவ்வேலியை பராமரிப்பதிலும் நீட்டிப்பதிலும் பெரும் பங்கு வகிக்கிறார், ஏனைய மாகாணங்களை விட வங்கம் பெருமளவு உப்பு வேலியால் பாதிக்கப்பட்டிருந்தது.

ஏனைய நாடுகளில் இருந்த உப்பு வரிகள் குறித்த பார்வையும் , உடல் நலத்திற்கு தேவையான இன்றியமையாத ஒரு பொருளாக உப்பு இருப்பதையும் நிறுவுகிறார், வேலியின் எச்சங்களை காண இந்திய கிராமங்களில் நடையாக நடக்கிறார், ஒருவருக்கும் இது குறித்து எதுவும் தெரிவதில்லை, ஒரு சில முதியவர்கள் "பர்மத் லயின்" என்ற அளவிலேயே அதை அறிந்து கொண்டுள்ளனர், 90களின் இறுதியில் ராய் தன் கள ஆய்வை மேற்கொண்டார், 150 ஆண்டுகளுக்குளாகவே மக்கள் பிரக்ஞைலிருந்து இவ்வேலி மறைந்து விட்டதை நம்ப முடியவில்லை, வேலி கைவிடப்பட்ட 50 வருடங்கள் தாண்டி காந்தி தண்டியில் உப்பு சத்தியாகிரகம் செய்ததை ஒத்துழையாமை குறித்தே நாம் இணைத்துப் பார்த்தாலும், உப்புவேலி குறித்து ஏதேனும் ஒரு வகையில் காந்தி அறிந்திருப்பார் என்றெபடுகிறது. நம் பாட புத்தகங்களிலும் இவ்வேலி குறித்து எந்த முக்கிய இடங்களும் இல்லை , இது வருந்தத்தக்க விஷயம். 

ஆங்கிலேய மேலாதிக்கத்தின் ஒரு அலகான இந்த உப்புவேலி குறித்தே ராய் வரும் வரை நமக்கு தெரியவில்லை என்றால் ஏனைய துறைகளின் வேலிகளை கண்டறிய நாம் இன்னொரு ராயின் வருகைக்காக காத்திருக்கிறோமோ என்று எண்ணத் தோன்றுகிறது. 

மரபை குறித்த தாழ்வுணர்ச்சி ஒரு எல்லை என்றால் அப்பட்டமான சுரண்டல் அமைப்பை குறித்த நேர்மையான பார்வையை கூட வைக்க இயலாத மலட்டுதன்மை இன்னொரு எல்லை, ஜெயமோகன் அவர்கள் முன்னுரையில் கூறுவது போல் நம் சம கால உளவியலை தீர்மானிக்கும் சக்திகளாக இப்பெரும் பஞ்சங்கள் அமைந்தன. 

பகெவாரின் கருவேல மரங்களும் இலந்தை முள் செடிகளும் பின்னிய இந்த வேலி பெரிதும் கவனப்படுத்த படாத பல்லாயிர மைல்கள் நீண்ட உப்பு வேலியின் எஞ்சிய கள சாட்சி.

No comments: