Tuesday, March 22, 2022

பூமராங் - சத்யானந்தன்

பூமராங் நாவலை முன் வைத்து, 2022 ல் நடக்கும் நாவல். அடையாளம் குறித்த  தனிமனிதனின் தேடல்கள், நிறுவனங்கள்  கொண்டுள்ள நிச்சயங்கள்,  அடையாளத்தின் உண்மை ரூபத்தின் முன் தனி மனிதனுக்கு எழும் மேலதிக கேள்விகள், அடையாள வேட்கையின் நீட்சியாக ஏற்பட்டிருக்க கூடிய வணிக சாத்தியங்கள் என அடையாளத்தின் பன்முக உருமாற்றங்கள் குறித்த இந்த நாவல்  சமகாலத்தை மேலும் சற்று புரிந்துக் கொள்ள உதவுகிறது. சம்பவங்களின் தொகுப்பாகவே அமைந்துள்ள இந்நூல்  குறிப்பிடத்தக்க நடையையோ வடிவத்தையோ கொண்டிருக்கவில்லை.கதையின் வீச்சோ கதையின்  முடிவோ நம்மை பெரிதாக  அசைத்துப் பார்க்கவில்லை. 


நாவலின் உட்பிரதி சமகால அரசியலை தொகுக்கும் வண்ணம் அமைந்திருப்பதால் சற்று கவனத்தைக் கோருகிறது. நாவல் முடிவாக கூர்மையாக எதையும் முன் வைப்பதில்லை,  படித்து முடிக்கையில் நம் மனத்தில் எழும் கேள்விகளை தொகுத்தால் மட்டுமே சமகாலம் குறித்த சில கேள்விகள், நம் கவனம் குவிய வேண்டிய இடங்கள் குறித்து அறிய முடியும். 

"இவர் இத்தொகுதியை வென்றார்" ,இவர் இந்நாட்டை வென்றார்",இவர் தான் இக்கட்சியின் "உண்மையான வாரிசு" , "இவர் அடுத்து ஆட்சியை பிடிப்பார்" என்கிற ரீதியான  ராஜா ராணி காலத்தின் சாயல் கொண்டபடி செய்திகளின் சமூக ஊடகங்களின் திவலை ஒன்று.

அரசியல் கட்சி நிறுவனமாக அடையாளத்தை பெற, தேட முயல்கையில் ஏற்படும் ஒற்றைப்படைத்தன்மை-  ஒரே தீர்வு ஒரே வரலாற்று நாயகன் ஒரேடியான மாற்றம் என்கிற திவலை இரண்டு.

தனி மனிதனாக ஏன் தினசரி அடையாளம் சார்ந்த விஷயங்கள் எக்காலத்திலும் இல்லாது நம்மை இப்படி அலைக்கழிக்கின்றன ?, நம் சிறிய வாழ்வில், ஏன் இவ்வளவு ஆர்வமாக  இத்தனை பழைய நாட்களை , இத்தனை பழைய சொற்களைச் சுமக்கத் தயாராக இருக்கிறோம்? இத்தனை அடையாள பிரக்ஞை ஏன் வருகிறது ? என்கிற திவலை மூன்று.

அடையாளத் தேடல் நம்மை கொண்டு சென்று நிறுத்தும் நாம் விரும்பத்தகாத உண்மையான இடங்கள், அவற்றிற்கான நமது எதிர்வினை என்ன ? நாம் வரலாற்றைப் புரட்டி நமக்கு வேண்டிய வீர தீரங்களை மட்டும் பொறுக்கி எடுக்க விரும்புகிறோம். தவறி கையோடு வரும் நம் சாதாரண வலுவில்லாத இருப்பிற்கும், வலி மிகுந்த ரணங்களை ஆற்றுவதற்கும் நமக்கு பரந்த நோக்கும் லட்சியமும் இருக்கிறதா ? அல்லது அடையாளத் தேடல் நம் ஆணவத்தை வீங்க வைக்கும் மற்றுமொரு சல்லிசான முயற்சியா? என்கிற திவலை நான்கு.

இவ்வாறு அனைத்து இடங்களிலும் வியாபித்து இருக்கும் அடையாள வேட்கை, அதன் தத்துவம், மெய்ம்மை, பொது நோக்கு அனைத்தையும் செரித்து ஏப்பம் விடும் வண்ணம் அமைந்திருக்கும் அடையாளம் சார்ந்த வணிகம் , அடையாளம் சார்ந்த ஸ்தூல பொருட்களின் வருகை குறித்து எவ்வளவு பிரக்ஞை பூர்வமாக நாம் உணர்ந்திருக்கிறோம் ? என்கிற திவலை ஐந்து.


176 பக்கங்கள், ஒரு நாளில் வாசித்து விடலாம், ஸீரோடிகிரி எழுத்து பிரசுரம். 

Tuesday, March 15, 2022

காந்தி ஸ்கொயர் - களத்தர கோபன்

காந்தி ஸ்கொயர் - களத்தர கோபன் அவர்கள் எழுதிய கவிதைத் தொகுப்பு , மலையாளத்தில் இருந்து தமிழுக்கு ராஜன் ஆத்தியப்பன் மொழிபெயர்த்திருக்கிறார் - புது எழுத்து வெளியீடு. 



இக்கவிதைகளின் ஒட்டுமொத்த  பார்வையை  "ஒன்று மற்றொன்று  போல ஆகுதல்" என்று கருத வாய்ப்பிருக்கிறது. ஸ்தூலமான ஒரு பொருள் இன்னொன்றாவதின் சித்திரம், சாதாரண நிகழ்வுகளின் விசித்திரமான கோணம், விசித்திரமான நிகழ்வுகள், தலைகீழாக்கம் என்னும் வகையில் அமைந்த கவிதைகள் இவை.

சமகாலத்தின் நிஜ வாழ்வின் எவ்வகையான விஷயங்களை இக்கவிதைகள் பிரதிபலிக்கின்றன என்பது குறித்து - கவிதைகளை மீண்டும் மீண்டும் வாசிக்கையில் துயரம்/ வலி / துர்சம்பவம் / இழப்பு  இவற்றின்  ரேகைகளே பெரும்பாலான கவிதைகளில் பதிந்திருக்கின்றன. தேடித் தேடி சலித்தாலும் ஆறுதல் அளிக்கும் வரிகளை இக்கவிதைகளிலிருந்து காண்பது கடினம். ஆறுதல் அளிக்காத வலி மிகுந்த வரிகள்  ஆர்ப்பாட்டம் இல்லாத மொழியில் அமைந்திருக்கின்றன.  மாபெரும் துயரங்கள் முதல் சின்ன சலிப்புகள் வரை இக்கவிதைகளின் வரிகளில் விரவிக்  கிடக்கின்றன. ஏன் இவ்வாறு - நம்மை சூழ்ந்துள்ள புற உலகம் இத்தனை வேதனையானதா ? வேடிக்கைச் சம்பவங்கள் போல் வரும் வரிகளில் ஏன் இத்தனை சோகம் ? 

"நல்லதொரு குடும்பம்" , "ஒன்றின் வெளிப்படல் ", "ரேசன் கார்டு" , "ஆமையும் முயலும்" ஆகிய கவிதைகள் அதன் அறிவார்த்தத்தால் முழுமை பெறுகின்றன.  "கெட்ட வாழ்வு", "நீர்க் குழந்தை" - ஆகிய கவிதைகளில் அதன் அறிவார்த்தத்தையும் மீறிய ஆசிரியரின் தனித்துவம் கூறும் கவிதைகளாக , அறிவை மீறிய உணர்நிலைகளை தொட்டு செல்கின்றன. இரு  துருவ உணர்வுநிலைகளின் எல்லையில் உள்ளவை இவ்விரண்டு கவிதைகள்.

அநேக கவிதைகள் சம்பவங்களின் கோர்வையாக இருக்கின்றன. நல்ல சில முழுமையான  கவிதைகளைத்  தாண்டி அநேக கவிதைகளில் சம்பவ விவரிப்பின் விஸ்தாரமான  வரிகளின் ஊடே நன்கு அமைந்த சில வரிகள் ஒளிந்திருக்கின்றன. ஒரு சில இடங்களில் மொத்த கவிதையின் சித்திரத்தை நன்கு அமைந்த அந்த சில வரிகள்  மட்டுமே  அளிக்கவல்லதாக இருக்கின்றன. சம்பவங்களின் விஸ்தாரமான விவரிப்பு வாசக அனுபவத்தின்  அமைதியை குலைப்பதாகவே உள்ளது. தாண்டித்தாண்டி இடைவெளிகளை நிரப்ப வல்ல வாசகனுக்கு இவ்வகையான விஸ்தாரமான விவரிப்புகள் தடையாகவே இருக்கிறது. அவ்வாறு அமைந்த அந்த சில வரிகள் தன்னளவிலேயே மிகுந்த அமைதியை சூடிக்கொண்டிருக்கின்றன. 

"காலகாலமாய்   

மரத்தடிகளில் எத்தனையோ பேர் 

அமர்ந்திருக்க 

ஒருவன் மட்டும் 

புத்தனாகி எழுகிறான்" 


"ஊடே ஒன்று சொல்கிறேன் 

உடன்படாதவர்களின் உதிரம்தான் 

இந்த பூட்சின் மினுமினுப்பை 

தொடர்ந்து தக்கவைப்பது" 


"வளர்ந்த பின்னும் 

எதற்காக 

இந்த நினைவுகள் 

பாழ்வெளியில் மீன்பிடிக்கின்றன "  


"மதிய வெயில் வந்து 

மரத்தை பலவித நிழலாக்கி 

தரையில் எழுதி விளையாடும் 

மரம் அதை  ரசிக்கும்" 


"ஆற்றில் ஒருபுறம் பசிய வெளி 

மறுபுறம் வீடுகள் 

நீலவானம் அல்லது மழை மூண்ட 

சூழலில் அது ஒரு ராட்சத கான்வாஸ்"


"தன்மையின் மாய விரலால் 

வரையும் நதிக்கு ஓவியனின் லாவகம்" 


"அதோ அவனே தான் 

இறங்கி ஓடுகிறான் 

முடிந்தவரை அனைவரும் அழைத்தபின்னும் 

திரும்பிப் பார்க்காமல் 

மரங்களிடேயே ஓடுகிறான் 

..............

காலகாலமாய் 

நம்மிலிருந்து ஒருவன் 

காடு புகுவது வழக்கமே 

என்று எண்ணினால் மட்டும் போதும் " 


"இரவும் பகலும் 

அதனதன் 

அர்த்தத்திற்கு வெளிய 

சென்றுவிட்டன"

நகரங்களின் அவல புறத்தோற்றம், ஒன்றை  இன்னொன்றாக்கும் இன்னொன்றாக பார்க்கும் மனநிலை , ஒரு விஷயத்தின் மாறுபட்ட கோணங்கள் அல்லது பகுப்பாயும் மனநிலை , சூழலில் நிரம்பியுள்ள துயரங்களின் குரல்கள் அளிக்கும் ஆறுதலின்மை, வேடிக்கையுடன் அனைத்தையும் கடக்க முயலும் எத்தனம் என நம் சூழலின் ஒரு பிடி இக்கவிதைகளில் உள்ளன. களத்தர கோபன் அவர்களுக்கும் ராஜன் ஆத்தியப்பனுக்கும் நன்றி.  

Friday, March 11, 2022

நாரத ராமாயணம் - புதுமைப்பித்தன்

 ராமாயண கதை நிகழ்வுகளையும்  மற்றும் கதாப்பாத்திரங்களையும் பகடி செய்யும் விதமாக தொடங்கும் இந்தப் புதினம் இந்திய தேசத்தின் சமூக வரலாற்றின் அவல சித்திரமாக,  இந்தியாவில் காலனியாதிக்க வரலாற்றின், வணிக அரசுகளின் ஆளுகையின் விமர்சனமாக விரிந்து , புதுமைப்பித்தனின் சமகாலத்தவராக கருதக் கூடிய காந்தியின் வருகையுடன் முடிகிறது.


வருண அவருண அமைப்புகளை பொருத்தி பார்க்க வல்ல பாத்திர படைப்புகளாக குகன், சுக்ரீவன், விபீஷணன், பரதன் கதாப்பாத்திரங்கள் அமைந்துள்ளன.பாத்திரங்களின் மைய அச்சு மட்டுமே ராமாயணத்தை தழுவி வருகிறது, இப்புதினத்தின் கதை ராமாயணத்தை விட முற்றிலும் வேறானது. இந்நூல் தழுவலோ மறுகூறலோ மொழியாக்கமோ இல்லை. அதே நேரத்தில் வரலாற்றுடன் தொடர்பு படுத்தி பார்க்கையில் மட்டுமே முழு பொருள் கொள்வதாக அமைகிறது. வரிக்கு வரி வரும் எள்ளலும் பகடியும் பிரவாகிக்க நிறுத்தி நிறுத்தி தான் வாசிக்கவே முடிகிறது. 

ஒரு தேசத்தின் வீழ்ச்சியின் கதையாகவும் நாரத ராமாயணம் அமைந்துள்ளது.  இந்நாவல் எழுதப்பட்ட ஆண்டு குறித்த தகவல் இல்லை. 1955 ல் முதலில்  வெளியாகியுள்ளது , இன்று வாசிக்கையில், நாம் பழம் பெருமை என்று புரிந்தும் புரியாமலும் பேசி மணி ஆட்டிக்கொண்டிருக்கும் அபாண்டங்கள், விஷயங்கள், மாறவே விரும்பாத சோம்பல் போதை மற்றும் பொறுப்பற்றத்தன்மை, விஷயத்தை நேரடியாக சந்திக்காது விலகி ஓடும் குணம், உழைப்பே வாழ்க்கையாகிவிட்ட சாமான்ய  மக்களின் அவல நிலை , மக்களுக்காக பட்சணம் என்பது போய் பட்சணத்துக்காக மக்கள்  என்று நாம்  இன்று வந்து சேர்ந்திருக்கும் நிலை, இவை குறித்து நாம் மீண்டும் சிந்தித்துப் பார்க்கும் வாய்ப்பாக இந்நூல் வாசிப்பு அமைந்தது. 

72 பக்கங்கள் கொண்ட இந்த நூலை அழிசி வெளியிட்டுள்ளது.

Monday, March 07, 2022

கைம்மண் - சுதாகர் கத்தக்

சுதாகர் கத்தக் எழுதிய பன்னிரெண்டு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு.

முற்றிலும் கைவிடப்பட்டவர்களின் கதைகளாக, எளிய மனிதர்கள் அவர்களின் எளிய  இருக்கப்பட்ட நிலையில் இருந்து, மெல்ல, மீட்பே இல்லாத முற்றிலும் கை விடப்படும் நிலைக்கு செல்லும் சித்திரத்தை அளிக்கும் கதைகள் இவை. பள்ளிகளில் மேஜிக் செய்பவர், கழைக்கூத்து ஆடுபவர், பாலியல் தொழிலாளி, திருநங்கை, ஆடு மேய்ப்பவர்கள் , குயவர், கம்பக்காரர், கை விடப்பட்ட பெண்கள் , மரம் வெட்டுபவர், பூட்டுக்காரர்  என்கிற கதாப்பாத்திரங்களை மையமாகவோ, கிளையாகவோ கொண்டு அமைந்த கதைகள் இவை. இக்கதைகளில் மனிதர்கள், மனிதர்களை  கைவிடுகிறார்கள்,  மனிதர்களை இயற்கை கைவிடுகிறது - துயர் மிகு இச்சித்திரங்களை மிகுந்த அமைதியான மொழி நடையிலேயே நமக்கு கடத்திவிடுகிறார் சுதாகர் கத்தக். கதைகளில் வரும் சம்பவங்கள், எப்பொழுதும் இப்பொழுதும்  நடைப்பெற்றுக்கொண்டே இருக்கிறது என்பதான தொனி இந்த "அமைதியான நடை" தேர்வின் மூலம் நமக்கு புலனாகிறது - தொகுப்பின், எந்த ஒரு கதையும் அவல சித்திரத்தை முன் வைத்து வாசகனிடம் இறைஞ்சுவதில்லை. இந்த எளிய மனிதர்களின் இருப்பை அத்தனை அழகுடனும் அவர்களின் இருத்தலிலிருந்து இல்லாது செல்லும் பயணத்தை, அப்பயணம் அளிக்கும்  வலியை அத்துணை கண்ணியத்துடனும் பதிவு செய்திருக்கும் கதைகள் இவை. 



ஒரு தொல் கதையின் நாடோடிக் கதையின் சாயலுடன் எழுதப்பட்டிருக்கும் நவீன கதைளாக " வரைவு" , " நட்சத்திரங்களுடன் பேசுபவள்" , "மருமகளும் மாமன்மார்களும் " மற்றும் " பயணம்" கதைகள் அமைந்திருக்கின்றன. "ஒன்றுக்கும் மேற்பட்டவர்க்கு இவ்வாறு நிகழ்ந்திருக்கிறது "அல்லது "காலம் காலமாக தொடரும் அவலம் இது"என்ற தொனியை  இக்கதைகளுக்கு இந்நாடோடி அம்சம் வழங்குகிறது, அதே நேரத்தில், இன்றைய காலகட்டத்தை இணைக்கும் வண்ணம், கதையில் ஒரு சில விஷயங்கள் அமையப்பெற்று நாடோடி கதைகள் அளிக்கும் " என்றோ நடந்தது" என்பதான அம்சங்களையும்  தாண்டி இன்று நடந்து கொண்டிருக்கும்  நவீனகதைகளாகவும் இவை அமைந்திருக்கின்றன. இக்கதைகளின் சில பகுதிகளில்  கூடி வந்திருக்கும் கவித்துவம், மறக்க முடியாத "நிகழ் சித்திரங்களை" நமக்கு அளிக்கிறது.  

"வரைவு" மற்றும்  "கைம்மண்" கதைகளின் உட்பிரதிகள் மிகவும்  நுட்பமானவை - ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் சரி நிலைகள் மதங்களின் சரி நிலைகள் குறித்த வாசிப்பாக அமைந்த கதைகள் இவை - இயற்கை பொய்த்து, நீர் முற்றிலும் வற்றி பாறைகள் வெடிக்கத் தொடங்கும் உலர்ந்த கதைகளாக " கறுகுதல் ", "திருமணஞ்சேரி" அமைந்திருக்கின்றன."உயிர் வித்தை", " கழைக்கூத்து" ,"நாட்கள்" , "மழை" மற்றும் "சாபம்" என்னும் முதல் ஐந்து கதைகள் சுதாகர் அவர்களின் துவக்க கால கதைகள். காலத்தால் பிந்தைய  ஏழு கதைகள் 

கூடுதல் செறிவுடன் அமைதியுடன் அமைந்துள்ளன. அனைத்து கதைகளிலும்  பாலியல் சம்பந்தப்பட்ட உரையாடல்கள் மிகவும் நேரடியாக குறுகுறுப்பின் குற்றவுணர்வின் சாயல்கள் அறவே இல்லாத யதார்த்த நடையில் தொனியில் அமைந்துள்ளன. 

கதைகளின் மைய உரையாடல் போக இக்கதைகள் மனதில் எழுப்பிய சலனங்கள் குறித்து - சுதாகர் அவர்களின் பிற்கால கதைகள் மிகுந்த செறிவுடன் அளிக்கும் சித்திரங்கள் மனதில் ஒரு "கனவை " விதைக்கிறது. இயற்கையை நிதானமாக அமர்ந்து கண்டுக்கொண்டே மெதுவாக எந்த வித அவசரமும் இல்லாத ஒரு வாழ்வியல் முறை  நிச்சயம் இருக்கிறது என்னும் அந்தக் கனவு - அந்தப் பழைய கனவின், மனிதன் கண்ட  அக்கனவின் "நனவுப் பிரதி" மெச்சும்படியாக இல்லை.   நனவுப் பிரதியின் முகத்தில் உள்ள காலத்தின் வடுக்களாக  இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் உள்ளன.  அறிந்தும் அறியாமலும் மனிதன் கடந்து வந்துக் கொண்டிருக்கும் பாதச்சுவடுகள் இக்கதைகள். இவ்வடுக்களை, இத்துயரங்களை நீக்கியவாறே அப்புதிய கனவினை நோக்கி மீண்டும் நடக்க நவீன மனிதன் விழைகிறான்.  

Tuesday, March 01, 2022

வியனுலகு வதியும் பெருமலர் - இளங்கோ கிருஷ்ணன்

இளங்கோ கிருஷ்ணன் அவர்களின் வியனுலகு வதியும் பெருமலர் தொகுப்பை முன் வைத்து, 


தொகுப்பில் உள்ள கவிதைகளை வாசிக்கத்  தொடங்குகையில் முதலில் மனதைக்  கவர்வது கவிஞரின் ஆர்ப்பாட்டமான மொழிநவீன கவிதைகளில் இத்தனை ஆர்ப்பாட்டம் பொருந்தாதது என்ற கருத்தும் ஏற்கத்தக்கதேஆனால் அதே நேரத்தில் பாடு பொருளின் தீவிரம் நிகழ்த்தும் பிரவாகம் இவை என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்இந்த ஆர்ப்பாட்டத்தின்பிரவாகத்தின்  ஓட்டத்தில் வாசகன் கண்டடைய நிறைவு பெறாத " தார்மீக பிரகடனங்கள்" , மௌடீகம் உடையும் "சொற் கோர்வைகள்", தீவிரமான "நிகழ்த்து உருவங்கள்  " அமையப் பெற்ற கவிதைத் தொகுப்பாக மலர்ந்திருக்கிறது "வியனுலகு வதியும் பெருமலர் ".  

தொகுப்பு ஐந்து பகுதிகளாக 1. பசியின் கதை 2. மரணத்தின் பாடல்கள் 3. பேரன்பின் வேட்டை நிலம் 4. எனும் சொற்கள் 5. நீர்மையின் பிரதிகள் என  பிரிக்கப் பட்டுள்ளதுஐந்து பகுதிகளையும் இணைத்து வாசிக்கையில்,   இத்தொகுதி ஒரு கவிஞனின் அல்லல் மிகு அகப்பயணத்தின் சாட்சியாகவும் அமைந்திருக்கிறது என்றே தோன்றுகிறதுஅதே நேரத்தில் பெரும்பான்மையான கவிதைகள் "எதிரொலி " அல்லது "எதிர் வினை " அம்சம் கூடிய கவிதைகளாக இருக்கின்றனகவிஞரின் எதிர்வினை என்றென்றும் இருக்கும் பசியின் மரணத்தின் போதாமையின் சொற்களாகவும் சமகால நிகழ்வுகளான கொரோனா பேரிடர் விளைவுகள் , தூத்துக்குடி குறித்த கொந்தளிப்பான வரிகளாகவும் அமைந்திருக்கின்றனஇயற்கையில் தவிர்க்க இயலாத பசி மற்றும் மரணம் குறித்த அடிப்படை தொனியில் இக்கவிதைகள் அமைந்துள்ளன.

 

பசியின் கதையில் "அவர்கள் செல்கிறார்கள்" கவிதையில்

"பசி போல்

துல்லியமான

ஒரு தத்துவத்தை

ரொட்டி போல்

கருணையுள்ள

ஒரு தலைவனை

உங்களால்

ஏன்

உருவாக்க

இயலவில்லை " 

ஒரு பிரகடனத்தின் நீட்சியாக அதே நேரத்தில்  மிக எளிமையான இக்காரியத்தை இவ்வளவு காலம் கடந்தும்  நம்மால் ஏன் செய்து முடிக்க இயலவில்லை என்ற கேள்வியே கவிதையாக அமைந்திருக்கிறது  -  இங்கு நான் குறிப்பிட்டிருக்கும் "நம்மால் " கவிதையில் "உங்களால்" என்று அமைந்திருப்பதையும் துணுக்குற வைக்கும் இவ்வரிகளில் நாம் காண முடியும்.


----

மரணத்தின் பாடல்கள் மிகுந்த நேரடியாக உள்ளன. பாடுபொருளின் உள்ளார்ந்த தீவிரம் கவிதைகளில் வெளிப்படுகிறது -

மரணத்தின் நிமித்தம் குறித்த வரிகளாக

"கரு நீல வண்ண மாத்திரையை

ஒரு நாள் பிரிக்கும்போது

கட்டிலுக்கடியில் உருண்டோடிவிட்டது

இப்படித்தான்

இருண்டது ஒரு மரணம்"  (இப்படித்தான்)

 

"பணிக்கு செல்லும் பரபரப்பில் .....

.......

மரணத்தின் லாரி

டீசல் நிரப்பிக் கொண்டிருக்கிறது " ( மரணத்தின் லாரி )

 

"அத்தனை

வாழ்த்துக்கள் கொஞ்சல்கள்

இருக்க இதுவா பலிக்க வேண்டும் " ('அன்னை இட்ட தீ' )

 

மரணம் நிகழ்வதின் சாஸ்வதம் குறித்த பதிவுகளாக, 

“உதிர்ந்த இலையில்

தன் மரணத்தைப்

பார்த்துக்கொண்டிருக்கிறது

மரம்

குனிந்து

அந்த மரத்தைப்

பார்த்துக்கொண்டிருக்கிறது

வானம் “ ( 'பார்த்தல்' )

  

"அத்தனை துரிதமாய்

உன்னிடம்

நடந்து வருபவர் யார்

ஒரு கையிலிருந்து

இன்னொரு கைக்கு

மாறுவதற்குள்

ஒரு கனி காயாகி விடுகிறது

துரத்தி வரும் கண்கள்

கல்லாய் சமைய " (கனி )

என்னும் வரிகள் அமைந்திருக்கின்றன.

 

மரணப் பிரிவின் அரற்றலின் உணர்ச்சிகர சித்திரமாய்,

" வெறி கொண்ட ஆண் மந்தி 

.......................................................................

நீர் பாம்புகளைப் பிடித்து

படார் படாரென தரையில் அறைந்து கொல்கிறது " (யம கதை’)

 

அரற்றலின் பின் தொடரும் மரணம் குறித்த புரிதலும் தத்துவமும் அமைதியும் அமையப்பெற்ற வரிகளாக

 

" துக்க வீட்டில்

 ஒவ்வொருவராய்

எழுந்து செல்கிறார்கள்

துக்க வீடும் இறுதியாய்

எழுந்து சென்றது

துக்கம் எழுந்து செல்லும் வரை

காத்திருக்கிறான் புத்தன் " ( புத்தன் )

  

".......

இவன் போன வாரம் தான் அங்க செத்துக்  கிடந்தான்

வாராவாரம் இவனை யாராவது

கொன்னுடறாங்க என்ன கருமமோ என்றார் " (பிணம்)

 

"....

மோபியஸின் பாதை நீள்கிறது

இந்தப் பாதையில் ஊரும்

எத்தனையாவது

எறும்பு இது

என்கிறான் போதிச் சத்துவன்

இந்த எறும்பைச் சுமக்கும்

எத்தனையாவது பாதை

இது என்கிறான் புத்தன் " (மோபியஸ்)

மரணத்தின் இந்தப் பாடல்களில் தனிப்பட்ட மரணம் குறித்த பயங்களோ, அவகாசங்களோ பதிவாகவில்லை - மாறாக மரணம் என்னும் தொடர் நிகழ்வினை பொருள் கொள்ள முயலும் ஒரு விலகல் முயற்சியாக இக்கவிதைகள் இருக்கின்றன.  

-------

 'பேரன்பின் வேட்டை நிலம்' பகுதியின் இளங்கோ கிருஷ்ணன் அவர்களின் சென்னை நகரவாழ்வின்  சித்திரமாகவும் அவரின் உள்ளார்ந்த செழுமையின்  கற்றலின் கொந்தளிப்பான பயணமாகவும்  அமைந்திருக்கிறது.

"கோயம்பேடு அல்லது கலாப்ரியா வரையாத ஓர் ஓவியம்"  என்னும் கவிதை அளிப்பது  இன்றைய கோயம்பேட்டின் சித்திரம் அதே நேரத்தில் எப்படியோ சில சொற்சேர்கைகளில் ஒரு புராதன சாயல் வந்து விடுகிறதுஅதன் காரணம் " கொள்ளை காலம் இருக்கும்என்று முணுமுணுக்கும் குறுங்காலீஸ்வரர்ரா ? இல்லை  வெளியே எட்டி பார்த்துவிட்டு மீண்டும் உள்ளே இறங்கி கொள்ளும் சாக்கடைப் பெருச்சாளி"யா  என்று தெரியவில்லை.

பள்ளிகொண்டேஸ்வரம் , பேரன்பின் வேட்டை நிலம்காளிக்கு சொன்னது - இவை மூன்றும் நீண்ட கவிதைகள். பழைய நினைவுகளுடன் இன்றைய யதார்த்தத்தை பொருத்தும்  அல்லது பொருத்தமின்மையை முன்னிறுத்தும் தீவிரமான கவிதைகள் - புராதனத்தின் கதைத் தன்மையும்  இன்றைய நகரத்தின் அவல சித்திரத்தையும் அளிக்க முற்படும் கவிதை " காளிக்கு சொன்னது" - " 

இது உனது நகரம் " "இது உனது நகரம்என்று முடியும் "நகரம்கவிதை சென்னைக்கு பயணப்பட்டு சென்னையை கவிஞர் மனதளவில் ஏற்றுக்கொண்டதன் பிரகடனம். " மகளுக்கு சொன்னதுதமிழின் நெடிய கவிஞர்களின் பன்முகப்பட்ட வரலாறாக நேரடி கவிதையாக அமைந்திருக்கிறது.

-----

 

எனும் சொற்கள்

இப்பகுதியில், 'தோற்றம்என்னும் முதல் கவிதை தொடங்கி  பொதுவாக கவிதைகள் எவ்வாறு நிகழ்கின்றன என்பதற்கான வரைபடம் போல் அடுத்தடுத்த கவிதைகள் வரிசை படுத்தப்பட்டுள்ளனஒவ்வொரு தனி க் கவிதையின் வாசிப்பு இன்பத்தையும் தாண்டி இப்பகுதியின் கவிதைகள் உருவாக்கும் ஒட்டு மொத்த சித்திரம் மிகுந்த தெளிவாக அமைந்திருக்கிறது.

'தோற்றம்', 'நாளைய கவிதை'யில் அடிப்படையான சொற்களில் தொடங்கும் இந்த வரைப்படம்எதற்காக கவிதை எழுத வேண்டும் என்பது குறித்து 'கவிஞன்',  கட்டுக்கு அடங்காத சொற்களின் பிரவாகம் குறித்த 'இரவின் சொற்கள்' , திடீரென பிரவாகம் நிற்க சொற்களுக்குக்கான காத்திருப்பு நீளுகையில் 'அம்மா வந்து விடு','கிணறு', பிறிதொரு கவியின் சொற்களின் இடம் வலம் அரசியலின் வருகையை தெரிவிக்கும் 'எறும்புகள்', நோய்மையின் விகாரம் காட்டும்  'நோய்மையின் சொற்கள்', எழுதப்படாத புதிய கவிதை குறித்த 'இடப்படா முத்தம்', பக்தி குறித்த 'விநோதக் கடவுளின் பக்தன்', பொருள்முதல்வாத கவிதைக்கான எதிரொலியாய் 'ஹோலுப்புக்கு ஒரு கடிதம்'மற்றும் 'உப்பு', தர்க்கத்தின் எதிரொலியாய் 'எறும்புகள்லௌகீகம் குறித்த 'மதிப்பீடு' , இதர படைப்பளிகளுக்கான எதிர் வினைகளாக அமைந்த 'போரும் அமைதியும்', 'ஆத்மநாமை கொலை செய்தவர்கள்', 'போதாதாஎன்று நீண்டு கவிதை உருவாவத்தின் நிகழ்வதின் சித்திரத்தை அளிக்கிறது.

கவிதை உருவாவதன் வழி தவிர்க்க இயலாது கூடவே எழும் 'அழகிய குரூரம்', 'சிதைவுகள்'  'கடுமை', மீண்டும் மீண்டும் சொற்களுக்கான தேடல் நிகழும் 'எனும் சொற்கள்' , உயிர் பெரும் சொற்கள்', 'கல் எறியும் கலை', 'சொற்கள்என்று விரிந்து 'மோசமான கவி'ஞனை 'மோசமான வாசகன்குறித்து முத்தாய்ப்பாய் கூறி வரைபடம் நிறைவு பெறுகிறது.

 

'நீர்மையின் பிரதிகள்' பகுதி கவிஞர் அவரது அர்த்தமுள்ள அலைதலுக்கு பிறகு மெல்ல மீள்வதை கடப்பதை பதிவு செய்கிறது.இப்பகுதியில் தனிப்பட்ட தொனியிலான கவிதைகளே அதிகம் இருக்கின்றன - முன் பகுதிகளில் அமையாத மென் தருணங்கள்தனிப்பட்ட அனுபவ பதிவுகள் இப்பகுதியில் இடம் பெற துவங்குகின்றன.

"ஆழ்கடலின் ஒரு மீன்

மொத்த கடலையும் சுமந்து கொண்டிருப்பது

ஒரு பாவனையா

ஒரு பூ

மொத்த பிரபஞ்சத்தையும் சுமப்பது போல "  ( ஆழ்கடல் மீன்கள்)

 

 பூத்தொடுக்கும் அந்தப்பெண்

சட்டென முகத்திலாடும் ஈயை

விரட்டிய கணம்

சிலையாகித் திரும்புகிறாள்”  ( பழைய நூற்றாண்டு)

 

"தான் கொடுத்த ஆரஞ்சுச்  சுளைகளை

உண்ணாத நாய்க்குட்டியை மிரட்டிக் கொண்டிருந்தாள் " ( குட்டி சிறுமி )

 

"ஒரு பூனைக்கு குட்டியிடம்

அதைக்  கையளித்தேன்

ரகசியம்

இதை பத்திரமாய் வைத்துக்கொள் என்றேன்” ( ரகசியம்)

 

புன்னகைத்தபோது தான் கவனித்தேன்

இரண்டு தங்கப் பற்கள்" ( சிங்கம் )

 

"உச்சி கிளைகளில்

சில பழுத்த இலைகள் உதிர்கின்றன

உயரத்தில்

மிக உயரத்தில்

இரண்டு விண்மீன்கள் உதிர்கின்றன

உதிரவா என்கிறது பூமி

ஆதூரமாய் அவன் தோளைத் தொடுகிறது

ஒரு கரம்

சட்டென எங்கும் பரவுகிறது நிம்மதி "( நிம்மதி)

 இப்பகுதியில் வெறுப்பு புரிந்து கொள்ளப்படுகிறதுசிறிய தினப்படி விஷயங்கள் கண்ணில் தென்பட தொடங்குகின்றனதத்துவங்கள்ஆவேசங்கள் குறைந்து சிறு சலிப்புடன் நாட்கள் நகருகின்றனகேக்கின் ருசியற்ற பகுதி குறித்த ஆர்வம் அதிகரிக்கிறதுதினம் ஒரு விடியலின் பூங்கொத்தே போதுமானதாக இருக்கிறது