பூமராங் நாவலை முன் வைத்து, 2022 ல் நடக்கும் நாவல். அடையாளம் குறித்த தனிமனிதனின் தேடல்கள், நிறுவனங்கள் கொண்டுள்ள நிச்சயங்கள், அடையாளத்தின் உண்மை ரூபத்தின் முன் தனி மனிதனுக்கு எழும் மேலதிக கேள்விகள், அடையாள வேட்கையின் நீட்சியாக ஏற்பட்டிருக்க கூடிய வணிக சாத்தியங்கள் என அடையாளத்தின் பன்முக உருமாற்றங்கள் குறித்த இந்த நாவல் சமகாலத்தை மேலும் சற்று புரிந்துக் கொள்ள உதவுகிறது. சம்பவங்களின் தொகுப்பாகவே அமைந்துள்ள இந்நூல் குறிப்பிடத்தக்க நடையையோ வடிவத்தையோ கொண்டிருக்கவில்லை.கதையின் வீச்சோ கதையின் முடிவோ நம்மை பெரிதாக அசைத்துப் பார்க்கவில்லை.
நாவலின் உட்பிரதி சமகால அரசியலை தொகுக்கும் வண்ணம் அமைந்திருப்பதால் சற்று கவனத்தைக் கோருகிறது. நாவல் முடிவாக கூர்மையாக எதையும் முன் வைப்பதில்லை, படித்து முடிக்கையில் நம் மனத்தில் எழும் கேள்விகளை தொகுத்தால் மட்டுமே சமகாலம் குறித்த சில கேள்விகள், நம் கவனம் குவிய வேண்டிய இடங்கள் குறித்து அறிய முடியும்.
"இவர் இத்தொகுதியை வென்றார்" ,இவர் இந்நாட்டை வென்றார்",இவர் தான் இக்கட்சியின் "உண்மையான வாரிசு" , "இவர் அடுத்து ஆட்சியை பிடிப்பார்" என்கிற ரீதியான ராஜா ராணி காலத்தின் சாயல் கொண்டபடி செய்திகளின் சமூக ஊடகங்களின் திவலை ஒன்று.
அரசியல் கட்சி நிறுவனமாக அடையாளத்தை பெற, தேட முயல்கையில் ஏற்படும் ஒற்றைப்படைத்தன்மை- ஒரே தீர்வு ஒரே வரலாற்று நாயகன் ஒரேடியான மாற்றம் என்கிற திவலை இரண்டு.
தனி மனிதனாக ஏன் தினசரி அடையாளம் சார்ந்த விஷயங்கள் எக்காலத்திலும் இல்லாது நம்மை இப்படி அலைக்கழிக்கின்றன ?, நம் சிறிய வாழ்வில், ஏன் இவ்வளவு ஆர்வமாக இத்தனை பழைய நாட்களை , இத்தனை பழைய சொற்களைச் சுமக்கத் தயாராக இருக்கிறோம்? இத்தனை அடையாள பிரக்ஞை ஏன் வருகிறது ? என்கிற திவலை மூன்று.
அடையாளத் தேடல் நம்மை கொண்டு சென்று நிறுத்தும் நாம் விரும்பத்தகாத உண்மையான இடங்கள், அவற்றிற்கான நமது எதிர்வினை என்ன ? நாம் வரலாற்றைப் புரட்டி நமக்கு வேண்டிய வீர தீரங்களை மட்டும் பொறுக்கி எடுக்க விரும்புகிறோம். தவறி கையோடு வரும் நம் சாதாரண வலுவில்லாத இருப்பிற்கும், வலி மிகுந்த ரணங்களை ஆற்றுவதற்கும் நமக்கு பரந்த நோக்கும் லட்சியமும் இருக்கிறதா ? அல்லது அடையாளத் தேடல் நம் ஆணவத்தை வீங்க வைக்கும் மற்றுமொரு சல்லிசான முயற்சியா? என்கிற திவலை நான்கு.
இவ்வாறு அனைத்து இடங்களிலும் வியாபித்து இருக்கும் அடையாள வேட்கை, அதன் தத்துவம், மெய்ம்மை, பொது நோக்கு அனைத்தையும் செரித்து ஏப்பம் விடும் வண்ணம் அமைந்திருக்கும் அடையாளம் சார்ந்த வணிகம் , அடையாளம் சார்ந்த ஸ்தூல பொருட்களின் வருகை குறித்து எவ்வளவு பிரக்ஞை பூர்வமாக நாம் உணர்ந்திருக்கிறோம் ? என்கிற திவலை ஐந்து.
176 பக்கங்கள், ஒரு நாளில் வாசித்து விடலாம், ஸீரோடிகிரி எழுத்து பிரசுரம்.
No comments:
Post a Comment