இளங்கோ கிருஷ்ணன் அவர்களின் வியனுலகு வதியும் பெருமலர் தொகுப்பை முன் வைத்து,
தொகுப்பில் உள்ள கவிதைகளை வாசிக்கத் தொடங்குகையில் முதலில் மனதைக் கவர்வது கவிஞரின் ஆர்ப்பாட்டமான மொழி, நவீன கவிதைகளில் இத்தனை ஆர்ப்பாட்டம் பொருந்தாதது என்ற கருத்தும் ஏற்கத்தக்கதே, ஆனால் அதே நேரத்தில் பாடு பொருளின் தீவிரம் நிகழ்த்தும் பிரவாகம் இவை என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும், இந்த ஆர்ப்பாட்டத்தின், பிரவாகத்தின் ஓட்டத்தில் வாசகன் கண்டடைய நிறைவு பெறாத " தார்மீக பிரகடனங்கள்" , மௌடீகம் உடையும் "சொற் கோர்வைகள்", தீவிரமான "நிகழ்த்து உருவங்கள் " அமையப் பெற்ற கவிதைத் தொகுப்பாக மலர்ந்திருக்கிறது "வியனுலகு வதியும் பெருமலர் ".
தொகுப்பு ஐந்து பகுதிகளாக 1. பசியின் கதை 2. மரணத்தின் பாடல்கள் 3. பேரன்பின் வேட்டை நிலம் 4. எனும் சொற்கள் 5. நீர்மையின் பிரதிகள் என பிரிக்கப் பட்டுள்ளது. ஐந்து பகுதிகளையும் இணைத்து வாசிக்கையில், இத்தொகுதி ஒரு கவிஞனின் அல்லல் மிகு அகப்பயணத்தின் சாட்சியாகவும் அமைந்திருக்கிறது என்றே தோன்றுகிறது. அதே நேரத்தில் பெரும்பான்மையான கவிதைகள் "எதிரொலி " அல்லது "எதிர் வினை " அம்சம் கூடிய கவிதைகளாக இருக்கின்றன. கவிஞரின் எதிர்வினை என்றென்றும் இருக்கும் பசியின் மரணத்தின் போதாமையின் சொற்களாகவும் சமகால நிகழ்வுகளான கொரோனா பேரிடர் விளைவுகள் , தூத்துக்குடி குறித்த கொந்தளிப்பான வரிகளாகவும் அமைந்திருக்கின்றன. இயற்கையில் தவிர்க்க இயலாத பசி மற்றும் மரணம் குறித்த அடிப்படை தொனியில் இக்கவிதைகள் அமைந்துள்ளன.
பசியின் கதையில் "அவர்கள் செல்கிறார்கள்" கவிதையில்
"பசி போல்
துல்லியமான
ஒரு தத்துவத்தை
ரொட்டி போல்
கருணையுள்ள
ஒரு தலைவனை
உங்களால்
ஏன்
உருவாக்க
இயலவில்லை "
ஒரு பிரகடனத்தின் நீட்சியாக அதே நேரத்தில் மிக எளிமையான இக்காரியத்தை இவ்வளவு காலம் கடந்தும் நம்மால் ஏன் செய்து முடிக்க இயலவில்லை என்ற கேள்வியே கவிதையாக அமைந்திருக்கிறது - இங்கு நான் குறிப்பிட்டிருக்கும் "நம்மால் " கவிதையில் "உங்களால்" என்று அமைந்திருப்பதையும் துணுக்குற வைக்கும் இவ்வரிகளில் நாம் காண முடியும்.
----
மரணத்தின் பாடல்கள் மிகுந்த நேரடியாக உள்ளன. பாடுபொருளின் உள்ளார்ந்த தீவிரம் கவிதைகளில் வெளிப்படுகிறது -
மரணத்தின் நிமித்தம் குறித்த வரிகளாக
"கரு நீல வண்ண மாத்திரையை
ஒரு நாள் பிரிக்கும்போது
கட்டிலுக்கடியில் உருண்டோடிவிட்டது
இப்படித்தான்
இருண்டது ஒரு மரணம்" (இப்படித்தான்)
"பணிக்கு செல்லும் பரபரப்பில் .....
.......
மரணத்தின் லாரி
டீசல் நிரப்பிக் கொண்டிருக்கிறது " ( மரணத்தின் லாரி )
"அத்தனை
வாழ்த்துக்கள் கொஞ்சல்கள்
இருக்க இதுவா பலிக்க வேண்டும் " ('அன்னை இட்ட தீ' )
மரணம் நிகழ்வதின் சாஸ்வதம் குறித்த பதிவுகளாக,
“உதிர்ந்த இலையில்
தன் மரணத்தைப்
பார்த்துக்கொண்டிருக்கிறது
மரம்
குனிந்து
அந்த மரத்தைப்
பார்த்துக்கொண்டிருக்கிறது
வானம் “ ( 'பார்த்தல்' )
"அத்தனை துரிதமாய்
உன்னிடம்
நடந்து வருபவர் யார்
ஒரு கையிலிருந்து
இன்னொரு கைக்கு
மாறுவதற்குள்
ஒரு கனி காயாகி விடுகிறது
துரத்தி வரும் கண்கள்
கல்லாய் சமைய " (கனி )
என்னும் வரிகள் அமைந்திருக்கின்றன.
மரணப் பிரிவின் அரற்றலின் உணர்ச்சிகர சித்திரமாய்,
" வெறி கொண்ட ஆண் மந்தி
..............................
நீர் பாம்புகளைப் பிடித்து
படார் படாரென தரையில் அறைந்து கொல்கிறது " (யம கதை’)
அரற்றலின் பின் தொடரும் மரணம் குறித்த புரிதலும் தத்துவமும் அமைதியும் அமையப்பெற்ற வரிகளாக
" துக்க வீட்டில்
ஒவ்வொருவராய்
எழுந்து செல்கிறார்கள்
துக்க வீடும் இறுதியாய்
எழுந்து சென்றது
துக்கம் எழுந்து செல்லும் வரை
காத்திருக்கிறான் புத்தன் " ( புத்தன் )
".......
இவன் போன வாரம் தான் அங்க செத்துக் கிடந்தான்
வாராவாரம் இவனை யாராவது
கொன்னுடறாங்க என்ன கருமமோ என்றார் " (பிணம்)
"....
மோபியஸின் பாதை நீள்கிறது
இந்தப் பாதையில் ஊரும்
எத்தனையாவது
எறும்பு இது
என்கிறான் போதிச் சத்துவன்
இந்த எறும்பைச் சுமக்கும்
எத்தனையாவது பாதை
இது என்கிறான் புத்தன் " (மோபியஸ்)
மரணத்தின் இந்தப் பாடல்களில் தனிப்பட்ட மரணம் குறித்த பயங்களோ, அவகாசங்களோ பதிவாகவில்லை - மாறாக மரணம் என்னும் தொடர் நிகழ்வினை பொருள் கொள்ள முயலும் ஒரு விலகல் முயற்சியாக இக்கவிதைகள் இருக்கின்றன.
-------
'பேரன்பின் வேட்டை நிலம்' பகுதியின் இளங்கோ கிருஷ்ணன் அவர்களின் சென்னை நகரவாழ்வின் சித்திரமாகவும் அவரின் உள்ளார்ந்த செழுமையின் கற்றலின் கொந்தளிப்பான பயணமாகவும் அமைந்திருக்கிறது.
"கோயம்பேடு அல்லது கலாப்ரியா வரையாத ஓர் ஓவியம்" என்னும் கவிதை அளிப்பது இன்றைய கோயம்பேட்டின் சித்திரம் அதே நேரத்தில் எப்படியோ சில சொற்சேர்கைகளில் ஒரு புராதன சாயல் வந்து விடுகிறது, அதன் காரணம் " கொள்ளை காலம் இருக்கும்" என்று முணுமுணுக்கும் குறுங்காலீஸ்வரர்" ரா ? இல்லை வெளியே எட்டி பார்த்துவிட்டு மீண்டும் உள்ளே இறங்கி கொள்ளும் சாக்கடைப் பெருச்சாளி"யா என்று தெரியவில்லை.
பள்ளிகொண்டேஸ்வரம் , பேரன்பின் வேட்டை நிலம், காளிக்கு சொன்னது - இவை மூன்றும் நீண்ட கவிதைகள். பழைய நினைவுகளுடன் இன்றைய யதார்த்தத்தை பொருத்தும் அல்லது பொருத்தமின்மையை முன்னிறுத்தும் தீவிரமான கவிதைகள் - புராதனத்தின் கதைத் தன்மையும் இன்றைய நகரத்தின் அவல சித்திரத்தையும் அளிக்க முற்படும் கவிதை " காளிக்கு சொன்னது" - "
இது உனது நகரம் " "இது உனது நகரம்" என்று முடியும் "நகரம்" கவிதை சென்னைக்கு பயணப்பட்டு சென்னையை கவிஞர் மனதளவில் ஏற்றுக்கொண்டதன் பிரகடனம். " மகளுக்கு சொன்னது" தமிழின் நெடிய கவிஞர்களின் பன்முகப்பட்ட வரலாறாக நேரடி கவிதையாக அமைந்திருக்கிறது.
-----
எனும் சொற்கள்
இப்பகுதியில், 'தோற்றம்' என்னும் முதல் கவிதை தொடங்கி பொதுவாக கவிதைகள் எவ்வாறு நிகழ்கின்றன என்பதற்கான வரைபடம் போல் அடுத்தடுத்த கவிதைகள் வரிசை படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு தனி க் கவிதையின் வாசிப்பு இன்பத்தையும் தாண்டி இப்பகுதியின் கவிதைகள் உருவாக்கும் ஒட்டு மொத்த சித்திரம் மிகுந்த தெளிவாக அமைந்திருக்கிறது.
'தோற்றம்', 'நாளைய கவிதை'யில் அடிப்படையான சொற்களில் தொடங்கும் இந்த வரைப்படம், எதற்காக கவிதை எழுத வேண்டும் என்பது குறித்து 'கவிஞன்', கட்டுக்கு அடங்காத சொற்களின் பிரவாகம் குறித்த 'இரவின் சொற்கள்' , திடீரென பிரவாகம் நிற்க சொற்களுக்குக்கான காத்திருப்பு நீளுகையில் 'அம்மா வந்து விடு','கிணறு', பிறிதொரு கவியின் சொற்களின் இடம் வலம் அரசியலின் வருகையை தெரிவிக்கும் 'எறும்புகள்', நோய்மையின் விகாரம் காட்டும் 'நோய்மையின் சொற்கள்', எழுதப்படாத புதிய கவிதை குறித்த 'இடப்படா முத்தம்', பக்தி குறித்த 'விநோதக் கடவுளின் பக்தன்', பொருள்முதல்வாத கவிதைக்கான எதிரொலியாய் 'ஹோலுப்புக்கு ஒரு கடிதம்'மற்றும் 'உப்பு', தர்க்கத்தின் எதிரொலியாய் 'எறும்புகள், லௌகீகம் குறித்த 'மதிப்பீடு' , இதர படைப்பளிகளுக்கான எதிர் வினைகளாக அமைந்த 'போரும் அமைதியும்', 'ஆத்மநாமை கொலை செய்தவர்கள்', 'போதாதா' என்று நீண்டு கவிதை உருவாவத்தின் நிகழ்வதின் சித்திரத்தை அளிக்கிறது.
கவிதை உருவாவதன் வழி தவிர்க்க இயலாது கூடவே எழும் 'அழகிய குரூரம்', 'சிதைவுகள்' 'கடுமை', மீண்டும் மீண்டும் சொற்களுக்கான தேடல் நிகழும் 'எனும் சொற்கள்' , உயிர் பெரும் சொற்கள்', 'கல் எறியும் கலை', 'சொற்கள்' என்று விரிந்து 'மோசமான கவி'ஞனை 'மோசமான வாசகன்' குறித்து முத்தாய்ப்பாய் கூறி வரைபடம் நிறைவு பெறுகிறது.
'நீர்மையின் பிரதிகள்' பகுதி கவிஞர் அவரது அர்த்தமுள்ள அலைதலுக்கு பிறகு மெல்ல மீள்வதை கடப்பதை பதிவு செய்கிறது.இப்பகுதியில் தனிப்பட்ட தொனியிலான கவிதைகளே அதிகம் இருக்கின்றன - முன் பகுதிகளில் அமையாத மென் தருணங்கள், தனிப்பட்ட அனுபவ பதிவுகள் இப்பகுதியில் இடம் பெற துவங்குகின்றன.
"ஆழ்கடலின் ஒரு மீன்
மொத்த கடலையும் சுமந்து கொண்டிருப்பது
ஒரு பாவனையா
ஒரு பூ
மொத்த பிரபஞ்சத்தையும் சுமப்பது போல " ( ஆழ்கடல் மீன்கள்)
" பூத்தொடுக்கும் அந்தப்பெண்
சட்டென முகத்திலாடும் ஈயை
விரட்டிய கணம்
சிலையாகித் திரும்புகிறாள்” ( பழைய நூற்றாண்டு)
"தான் கொடுத்த ஆரஞ்சுச் சுளைகளை
உண்ணாத நாய்க்குட்டியை மிரட்டிக் கொண்டிருந்தாள் " ( குட்டி சிறுமி )
"ஒரு பூனைக்கு குட்டியிடம்
அதைக் கையளித்தேன்
ரகசியம்
இதை பத்திரமாய் வைத்துக்கொள் என்றேன்” ( ரகசியம்)
" புன்னகைத்தபோது தான் கவனித்தேன்
இரண்டு தங்கப் பற்கள்" ( சிங்கம் )
"உச்சி கிளைகளில்
சில பழுத்த இலைகள் உதிர்கின்றன
உயரத்தில்
மிக உயரத்தில்
இரண்டு விண்மீன்கள் உதிர்கின்றன
உதிரவா என்கிறது பூமி
ஆதூரமாய் அவன் தோளைத் தொடுகிறது
ஒரு கரம்
சட்டென எங்கும் பரவுகிறது நிம்மதி "( நிம்மதி)
இப்பகுதியில் வெறுப்பு புரிந்து கொள்ளப்படுகிறது, சிறிய தினப்படி விஷயங்கள் கண்ணில் தென்பட தொடங்குகின்றன, தத்துவங்கள், ஆவேசங்கள் குறைந்து சிறு சலிப்புடன் நாட்கள் நகருகின்றன, கேக்கின் ருசியற்ற பகுதி குறித்த ஆர்வம் அதிகரிக்கிறது. தினம் ஒரு விடியலின் பூங்கொத்தே போதுமானதாக இருக்கிறது
No comments:
Post a Comment