Monday, March 07, 2022

கைம்மண் - சுதாகர் கத்தக்

சுதாகர் கத்தக் எழுதிய பன்னிரெண்டு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு.

முற்றிலும் கைவிடப்பட்டவர்களின் கதைகளாக, எளிய மனிதர்கள் அவர்களின் எளிய  இருக்கப்பட்ட நிலையில் இருந்து, மெல்ல, மீட்பே இல்லாத முற்றிலும் கை விடப்படும் நிலைக்கு செல்லும் சித்திரத்தை அளிக்கும் கதைகள் இவை. பள்ளிகளில் மேஜிக் செய்பவர், கழைக்கூத்து ஆடுபவர், பாலியல் தொழிலாளி, திருநங்கை, ஆடு மேய்ப்பவர்கள் , குயவர், கம்பக்காரர், கை விடப்பட்ட பெண்கள் , மரம் வெட்டுபவர், பூட்டுக்காரர்  என்கிற கதாப்பாத்திரங்களை மையமாகவோ, கிளையாகவோ கொண்டு அமைந்த கதைகள் இவை. இக்கதைகளில் மனிதர்கள், மனிதர்களை  கைவிடுகிறார்கள்,  மனிதர்களை இயற்கை கைவிடுகிறது - துயர் மிகு இச்சித்திரங்களை மிகுந்த அமைதியான மொழி நடையிலேயே நமக்கு கடத்திவிடுகிறார் சுதாகர் கத்தக். கதைகளில் வரும் சம்பவங்கள், எப்பொழுதும் இப்பொழுதும்  நடைப்பெற்றுக்கொண்டே இருக்கிறது என்பதான தொனி இந்த "அமைதியான நடை" தேர்வின் மூலம் நமக்கு புலனாகிறது - தொகுப்பின், எந்த ஒரு கதையும் அவல சித்திரத்தை முன் வைத்து வாசகனிடம் இறைஞ்சுவதில்லை. இந்த எளிய மனிதர்களின் இருப்பை அத்தனை அழகுடனும் அவர்களின் இருத்தலிலிருந்து இல்லாது செல்லும் பயணத்தை, அப்பயணம் அளிக்கும்  வலியை அத்துணை கண்ணியத்துடனும் பதிவு செய்திருக்கும் கதைகள் இவை. 



ஒரு தொல் கதையின் நாடோடிக் கதையின் சாயலுடன் எழுதப்பட்டிருக்கும் நவீன கதைளாக " வரைவு" , " நட்சத்திரங்களுடன் பேசுபவள்" , "மருமகளும் மாமன்மார்களும் " மற்றும் " பயணம்" கதைகள் அமைந்திருக்கின்றன. "ஒன்றுக்கும் மேற்பட்டவர்க்கு இவ்வாறு நிகழ்ந்திருக்கிறது "அல்லது "காலம் காலமாக தொடரும் அவலம் இது"என்ற தொனியை  இக்கதைகளுக்கு இந்நாடோடி அம்சம் வழங்குகிறது, அதே நேரத்தில், இன்றைய காலகட்டத்தை இணைக்கும் வண்ணம், கதையில் ஒரு சில விஷயங்கள் அமையப்பெற்று நாடோடி கதைகள் அளிக்கும் " என்றோ நடந்தது" என்பதான அம்சங்களையும்  தாண்டி இன்று நடந்து கொண்டிருக்கும்  நவீனகதைகளாகவும் இவை அமைந்திருக்கின்றன. இக்கதைகளின் சில பகுதிகளில்  கூடி வந்திருக்கும் கவித்துவம், மறக்க முடியாத "நிகழ் சித்திரங்களை" நமக்கு அளிக்கிறது.  

"வரைவு" மற்றும்  "கைம்மண்" கதைகளின் உட்பிரதிகள் மிகவும்  நுட்பமானவை - ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் சரி நிலைகள் மதங்களின் சரி நிலைகள் குறித்த வாசிப்பாக அமைந்த கதைகள் இவை - இயற்கை பொய்த்து, நீர் முற்றிலும் வற்றி பாறைகள் வெடிக்கத் தொடங்கும் உலர்ந்த கதைகளாக " கறுகுதல் ", "திருமணஞ்சேரி" அமைந்திருக்கின்றன."உயிர் வித்தை", " கழைக்கூத்து" ,"நாட்கள்" , "மழை" மற்றும் "சாபம்" என்னும் முதல் ஐந்து கதைகள் சுதாகர் அவர்களின் துவக்க கால கதைகள். காலத்தால் பிந்தைய  ஏழு கதைகள் 

கூடுதல் செறிவுடன் அமைதியுடன் அமைந்துள்ளன. அனைத்து கதைகளிலும்  பாலியல் சம்பந்தப்பட்ட உரையாடல்கள் மிகவும் நேரடியாக குறுகுறுப்பின் குற்றவுணர்வின் சாயல்கள் அறவே இல்லாத யதார்த்த நடையில் தொனியில் அமைந்துள்ளன. 

கதைகளின் மைய உரையாடல் போக இக்கதைகள் மனதில் எழுப்பிய சலனங்கள் குறித்து - சுதாகர் அவர்களின் பிற்கால கதைகள் மிகுந்த செறிவுடன் அளிக்கும் சித்திரங்கள் மனதில் ஒரு "கனவை " விதைக்கிறது. இயற்கையை நிதானமாக அமர்ந்து கண்டுக்கொண்டே மெதுவாக எந்த வித அவசரமும் இல்லாத ஒரு வாழ்வியல் முறை  நிச்சயம் இருக்கிறது என்னும் அந்தக் கனவு - அந்தப் பழைய கனவின், மனிதன் கண்ட  அக்கனவின் "நனவுப் பிரதி" மெச்சும்படியாக இல்லை.   நனவுப் பிரதியின் முகத்தில் உள்ள காலத்தின் வடுக்களாக  இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் உள்ளன.  அறிந்தும் அறியாமலும் மனிதன் கடந்து வந்துக் கொண்டிருக்கும் பாதச்சுவடுகள் இக்கதைகள். இவ்வடுக்களை, இத்துயரங்களை நீக்கியவாறே அப்புதிய கனவினை நோக்கி மீண்டும் நடக்க நவீன மனிதன் விழைகிறான்.  

No comments: