Friday, March 11, 2022

நாரத ராமாயணம் - புதுமைப்பித்தன்

 ராமாயண கதை நிகழ்வுகளையும்  மற்றும் கதாப்பாத்திரங்களையும் பகடி செய்யும் விதமாக தொடங்கும் இந்தப் புதினம் இந்திய தேசத்தின் சமூக வரலாற்றின் அவல சித்திரமாக,  இந்தியாவில் காலனியாதிக்க வரலாற்றின், வணிக அரசுகளின் ஆளுகையின் விமர்சனமாக விரிந்து , புதுமைப்பித்தனின் சமகாலத்தவராக கருதக் கூடிய காந்தியின் வருகையுடன் முடிகிறது.


வருண அவருண அமைப்புகளை பொருத்தி பார்க்க வல்ல பாத்திர படைப்புகளாக குகன், சுக்ரீவன், விபீஷணன், பரதன் கதாப்பாத்திரங்கள் அமைந்துள்ளன.பாத்திரங்களின் மைய அச்சு மட்டுமே ராமாயணத்தை தழுவி வருகிறது, இப்புதினத்தின் கதை ராமாயணத்தை விட முற்றிலும் வேறானது. இந்நூல் தழுவலோ மறுகூறலோ மொழியாக்கமோ இல்லை. அதே நேரத்தில் வரலாற்றுடன் தொடர்பு படுத்தி பார்க்கையில் மட்டுமே முழு பொருள் கொள்வதாக அமைகிறது. வரிக்கு வரி வரும் எள்ளலும் பகடியும் பிரவாகிக்க நிறுத்தி நிறுத்தி தான் வாசிக்கவே முடிகிறது. 

ஒரு தேசத்தின் வீழ்ச்சியின் கதையாகவும் நாரத ராமாயணம் அமைந்துள்ளது.  இந்நாவல் எழுதப்பட்ட ஆண்டு குறித்த தகவல் இல்லை. 1955 ல் முதலில்  வெளியாகியுள்ளது , இன்று வாசிக்கையில், நாம் பழம் பெருமை என்று புரிந்தும் புரியாமலும் பேசி மணி ஆட்டிக்கொண்டிருக்கும் அபாண்டங்கள், விஷயங்கள், மாறவே விரும்பாத சோம்பல் போதை மற்றும் பொறுப்பற்றத்தன்மை, விஷயத்தை நேரடியாக சந்திக்காது விலகி ஓடும் குணம், உழைப்பே வாழ்க்கையாகிவிட்ட சாமான்ய  மக்களின் அவல நிலை , மக்களுக்காக பட்சணம் என்பது போய் பட்சணத்துக்காக மக்கள்  என்று நாம்  இன்று வந்து சேர்ந்திருக்கும் நிலை, இவை குறித்து நாம் மீண்டும் சிந்தித்துப் பார்க்கும் வாய்ப்பாக இந்நூல் வாசிப்பு அமைந்தது. 

72 பக்கங்கள் கொண்ட இந்த நூலை அழிசி வெளியிட்டுள்ளது.

No comments: