Tuesday, March 15, 2022

காந்தி ஸ்கொயர் - களத்தர கோபன்

காந்தி ஸ்கொயர் - களத்தர கோபன் அவர்கள் எழுதிய கவிதைத் தொகுப்பு , மலையாளத்தில் இருந்து தமிழுக்கு ராஜன் ஆத்தியப்பன் மொழிபெயர்த்திருக்கிறார் - புது எழுத்து வெளியீடு. 



இக்கவிதைகளின் ஒட்டுமொத்த  பார்வையை  "ஒன்று மற்றொன்று  போல ஆகுதல்" என்று கருத வாய்ப்பிருக்கிறது. ஸ்தூலமான ஒரு பொருள் இன்னொன்றாவதின் சித்திரம், சாதாரண நிகழ்வுகளின் விசித்திரமான கோணம், விசித்திரமான நிகழ்வுகள், தலைகீழாக்கம் என்னும் வகையில் அமைந்த கவிதைகள் இவை.

சமகாலத்தின் நிஜ வாழ்வின் எவ்வகையான விஷயங்களை இக்கவிதைகள் பிரதிபலிக்கின்றன என்பது குறித்து - கவிதைகளை மீண்டும் மீண்டும் வாசிக்கையில் துயரம்/ வலி / துர்சம்பவம் / இழப்பு  இவற்றின்  ரேகைகளே பெரும்பாலான கவிதைகளில் பதிந்திருக்கின்றன. தேடித் தேடி சலித்தாலும் ஆறுதல் அளிக்கும் வரிகளை இக்கவிதைகளிலிருந்து காண்பது கடினம். ஆறுதல் அளிக்காத வலி மிகுந்த வரிகள்  ஆர்ப்பாட்டம் இல்லாத மொழியில் அமைந்திருக்கின்றன.  மாபெரும் துயரங்கள் முதல் சின்ன சலிப்புகள் வரை இக்கவிதைகளின் வரிகளில் விரவிக்  கிடக்கின்றன. ஏன் இவ்வாறு - நம்மை சூழ்ந்துள்ள புற உலகம் இத்தனை வேதனையானதா ? வேடிக்கைச் சம்பவங்கள் போல் வரும் வரிகளில் ஏன் இத்தனை சோகம் ? 

"நல்லதொரு குடும்பம்" , "ஒன்றின் வெளிப்படல் ", "ரேசன் கார்டு" , "ஆமையும் முயலும்" ஆகிய கவிதைகள் அதன் அறிவார்த்தத்தால் முழுமை பெறுகின்றன.  "கெட்ட வாழ்வு", "நீர்க் குழந்தை" - ஆகிய கவிதைகளில் அதன் அறிவார்த்தத்தையும் மீறிய ஆசிரியரின் தனித்துவம் கூறும் கவிதைகளாக , அறிவை மீறிய உணர்நிலைகளை தொட்டு செல்கின்றன. இரு  துருவ உணர்வுநிலைகளின் எல்லையில் உள்ளவை இவ்விரண்டு கவிதைகள்.

அநேக கவிதைகள் சம்பவங்களின் கோர்வையாக இருக்கின்றன. நல்ல சில முழுமையான  கவிதைகளைத்  தாண்டி அநேக கவிதைகளில் சம்பவ விவரிப்பின் விஸ்தாரமான  வரிகளின் ஊடே நன்கு அமைந்த சில வரிகள் ஒளிந்திருக்கின்றன. ஒரு சில இடங்களில் மொத்த கவிதையின் சித்திரத்தை நன்கு அமைந்த அந்த சில வரிகள்  மட்டுமே  அளிக்கவல்லதாக இருக்கின்றன. சம்பவங்களின் விஸ்தாரமான விவரிப்பு வாசக அனுபவத்தின்  அமைதியை குலைப்பதாகவே உள்ளது. தாண்டித்தாண்டி இடைவெளிகளை நிரப்ப வல்ல வாசகனுக்கு இவ்வகையான விஸ்தாரமான விவரிப்புகள் தடையாகவே இருக்கிறது. அவ்வாறு அமைந்த அந்த சில வரிகள் தன்னளவிலேயே மிகுந்த அமைதியை சூடிக்கொண்டிருக்கின்றன. 

"காலகாலமாய்   

மரத்தடிகளில் எத்தனையோ பேர் 

அமர்ந்திருக்க 

ஒருவன் மட்டும் 

புத்தனாகி எழுகிறான்" 


"ஊடே ஒன்று சொல்கிறேன் 

உடன்படாதவர்களின் உதிரம்தான் 

இந்த பூட்சின் மினுமினுப்பை 

தொடர்ந்து தக்கவைப்பது" 


"வளர்ந்த பின்னும் 

எதற்காக 

இந்த நினைவுகள் 

பாழ்வெளியில் மீன்பிடிக்கின்றன "  


"மதிய வெயில் வந்து 

மரத்தை பலவித நிழலாக்கி 

தரையில் எழுதி விளையாடும் 

மரம் அதை  ரசிக்கும்" 


"ஆற்றில் ஒருபுறம் பசிய வெளி 

மறுபுறம் வீடுகள் 

நீலவானம் அல்லது மழை மூண்ட 

சூழலில் அது ஒரு ராட்சத கான்வாஸ்"


"தன்மையின் மாய விரலால் 

வரையும் நதிக்கு ஓவியனின் லாவகம்" 


"அதோ அவனே தான் 

இறங்கி ஓடுகிறான் 

முடிந்தவரை அனைவரும் அழைத்தபின்னும் 

திரும்பிப் பார்க்காமல் 

மரங்களிடேயே ஓடுகிறான் 

..............

காலகாலமாய் 

நம்மிலிருந்து ஒருவன் 

காடு புகுவது வழக்கமே 

என்று எண்ணினால் மட்டும் போதும் " 


"இரவும் பகலும் 

அதனதன் 

அர்த்தத்திற்கு வெளிய 

சென்றுவிட்டன"

நகரங்களின் அவல புறத்தோற்றம், ஒன்றை  இன்னொன்றாக்கும் இன்னொன்றாக பார்க்கும் மனநிலை , ஒரு விஷயத்தின் மாறுபட்ட கோணங்கள் அல்லது பகுப்பாயும் மனநிலை , சூழலில் நிரம்பியுள்ள துயரங்களின் குரல்கள் அளிக்கும் ஆறுதலின்மை, வேடிக்கையுடன் அனைத்தையும் கடக்க முயலும் எத்தனம் என நம் சூழலின் ஒரு பிடி இக்கவிதைகளில் உள்ளன. களத்தர கோபன் அவர்களுக்கும் ராஜன் ஆத்தியப்பனுக்கும் நன்றி.  

No comments: