Friday, December 31, 2021

Three Floors - Nanni Moretti

You don't have only three Choices

Happy about being  Rich Virtuous and  Discplined  but fuelling a secret desire to break out

Happy about chasing milestones and meeting deadlines to get educated but constantly bask in guilt and redemption

Happy living through hard labour only to exhaust  yourself fully and attempt to run away

You had those three choices 

Now You can Dance 



Wednesday, December 22, 2021

முறையிட ஒரு கடவுள் - சர்வோத்தமன் சடகோபன்

முறையிட ஒரு கடவுள் - சர்வோத்தமன் சடகோபன் அவர்கள் எழுதிய 14  சிறுகதைகளின் தொகுப்பு. முதல் புத்தகம்.


தஸ்தாயெவ்ஸ்கியின் புத்தக சாலை - ஆசிரியரே முதல் வரியிலேயே தானாகவே போட்டுடைத்து குறிப்பிடும்  கரமசோவ் சகோதரர்கள் கத்ரீனா - டிமிட்ரி சாயலில் அமைந்த ஒரு சிறுகதை,  தலைப்பே நன்றாக அமைந்து விட்டதே மேலதிக நாவல் அல்லது ஆசிரியர் சம்பந்தப்பட்ட குறிப்புக்கள் சிறுகதையின் வீச்சை குறைக்கிறது என்பதே உண்மை. நாவலில் வருவது போன்ற சம்பவம் எனினும் இது முற்றிலும் வேறு நூற்றாண்டில் வேறு ஒரு சூழலில் நடக்கிறது -  எண்ணூறு பக்க நாவலின் ஒரு பகுதியை சிறுகதையின் பத்து பக்க குறிப்புகளில் காண்பது ஒரே நேரத்தில் சுவாரஸ்யம் ஆனால் கடினம். 

ஷெனாய் கசிந்து கொண்டிருக்கிறது , உலவ ஒரு வெளி , பிளவு  -  தேர்ந்தெடுத்த  ஒரு பிரகடனமோ அல்லது முன்னமே பொது வெளியில் உள்ள பிரகடனங்கள் குறித்த கச்சிதமான எதிர்வினையாக அமைந்துள்ளன. சிறுகதைகளாக  அல்ல . தமாஷ் சும்மா எழுதிப் பார்த்த கதை -  Monologue ஆ அமைந்ததால் இருக்கலாம்.

ஜனனம், நீலம், பிம்பம் - நன்றாய் அமைந்திருக்கும் கதைகள் - தந்தை மகன் உறவுகளை நாம் இன்னும் விரித்துப் பேச வாய்ப்பை வழங்குகிறது - மகனிற்கு மூன்று வாய்ப்புகள் அவன் முன்னே உள்ளன - ஜனனம் கதையில் வருவது போல்  தந்தையை நிராகரித்தல் அல்லது நீலம் கதையில் அமைந்தது போல் ஒரு விலகலு டன் எட்ட நிற்பது , அல்லது பிம்பம் கதையில் வருவது போல் தந்தை மகன் ஒருவரோடு ஒருவர் கரையும் நிலை. இவை கட்ட சட்டமான விதி அல்ல. தன் தந்தையை கூர்ந்து கவனித்து வந்ததாக தனது வலைப்பதிவில் சர்வோத்தமன் குறிப்பிட்ட்டிருக்கிறார் - இக்கதைகள் அவற்றின் பிரதிபலிப்பாக இருக்கலாம்.

பூதக்கண்ணாடி, சவரக்கத்தி, உதவி, டிராகன், நடிகர் - மனதுக்கு மிகவும் நெருக்கமாக அமைந்த கதைகள் - சமகாலத்தின் பொதுக் கண்ணோட்டத்தை பிரதிபலிப்பதாக அமைந்துள்ள கதைகள் - ஒட்டுமொத்தமாக தொகுத்து வாசிக்க ஏற்ற கதைகளும் கூட , கதைகளின் உட்ப்ரதி அல்லது அக்கதையின் கண்ணோட்டம் பின் வரும் எல்லைகளில் அமைந்துள்ளது - 

பூதக்கண்ணாடி - நண்பர்கள் இருவருக்குமான வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஆனால் செயல்களாலும் நிகழ்வுகளாலும் புரிந்துக்கொள்ளப்படும் ஊடாட்டம் குறித்து பேசுகிறது - சிறிது ஆசிரியர் பார்வையும் கதையை விளக்க முயல்ககையில் கதையின் கலைத்தன்மை குறைந்ந்தாலும் பேச பொருள் மூலம் மிக முக்கியமான இடத்தை தொட்டிருக்கிறது. நட்பை மீறிய எதோ ஒன்று வாழ்வில் அடைய இருப்பது போலவும் இல்லாதது போலவும் உள்ளதாகவும் மனதில் பதிந்தது -  முப்பதை  நெருங்கும் நண்பர்களிடேயே பேசுபொருளாக உள்ள " செட்டில் " ஆகும் அம்சம் குறித்த ஊடாட்டம் இந்தக் கதை, நண்பனே ஒருவனுக்கு  போட்டியாளன் ஆகும் பரவலான நிலையும் , ஒருவனை விட தாழ்ந்த நிலையில் ? இருக்கும் இன்னொருவனின் அண்மையை நாடும் இடங்களின் உண்மை இக்கதையின் பலம். முன்னே கூறியது போல் ஆசிரியர் சற்று தேவைக்கு அதிகமாகவே இப்புள்ளியை விளக்குகையில் கதையின் கலைத்தன்மை குறைகிறது.  

சவரக்கத்தி , நடிகர் - கதைகள் - நாம் தற்காலங்களில்  எல்லா விஷயங்களிலும் ஊடுருவி அறிய விரும்பும் போக்கை குறித்து - ஏன் எப்படி எவ்வாறு என்று நுண் தகவல்களால், நிச்சயத்தன்மையை  முடிவிலி வரை அறிய விரும்பும் நவீன மனிதனின் ஆராயும் போக்கை பிரதிபலிக்கின்றன - சில விஷயங்களை ஊடுருவாமல் ஆராயாமல் நம்மால் இன்று இருக்க முடியுமா என்பது சந்தேகமே, நடிகர் கதை பாரதிமணி அவர்களின் பாதிப்பில் உருவானதாக வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளார் 

உதவி - ஒரு விஷயத்திற்கு தகுதி ஏற்படும் முன்னரே நம் பேராசையின் காரணமாக நாம் அதை அடைய நினைக்கையில்  நாமே உருவாக்கி கொள்ளும் பாவனைகள் பரிதாபங்கள் குறித்த கதை இது, பிம்பம்கதையிலும் இது வெளிப்படுகிறது - நம் சராசரி தன்மையை எல்லையற்ற பாவனைகளால் நாம் மறைக்க முயல்கிறோம். என்றோ திரை விலகுகையில் நாம் தலை குனிகிறோம். இருப்பினும் விடாது நாம் மேலதிக பாவனைகள் கொண்டு நம்மை நாமே திசைதிருப்பிக்  கொள்கிறோம். சினிமா ஆசை சம்பந்தப்பட்ட பின்னணி கொண்டது இக்கதை . 

டிராகன் - மிகவும் நுட்பமான கதை - நாம் "சமரசம்" "Adjustment"  என்று எங்கோ வேடிக்கைப் பார்த்துக் கூறிக்கொண்டிருக்கையில் சட்டென கத்தி நம் பக்கம் திரும்புவதான கதை - எதிர்பாராத கண்ணோட்டத்தில் முடியும் கதை 

தனிப்பெருங்கருணை - காகிதக் கூடு நிகழ்வுக்காக முன்னமே வாசித்தது - , நம் மரபின் அத்தனை ஆன்மீக பார்வைகளும் பின் புலமாகவும் செயலின்மை முதல் அதீதம் வரை , அனைத்தையும் இணைக்க வல்ல மைய தரிசனமான பேரொளியை அறிய ஒரு குறியீட்டு கதையாக  அமைந்தது இக்கதை , மரபான இன்னொரு கதையான பிள்ளையார் முருகன் உமை சிவன் குடும்ப கதையும் பிரித்தளிக்க முடியாத ஞானப்பழத்தை குறித்தும் இணைத்து வாசித்தேன். 

அட்டைப்படம் அருமை - கல்மனிதன் கணினி நிரல் வழி அவனது பிரித்து வைக்கப்பட்ட பாகங்கள்  இணைக்கப்பட்டு  தன்னை வெளிப்படுத்தத்  துவங்குவது போல.

சர்வோத்தமனின் அடுத்த புத்தகத்தை கண்டிப்பாக வாசிப்பேன். 

Tuesday, December 21, 2021

ஆறுமுகசாமியின் ஆடுகள் - சா கந்தசாமி

நற்றிணை யுகன் மற்றும் சா கந்தசாமி அவர்களின் தேர்வில் 2011 ல் நற்றிணை வெளியீடாக வந்துள்ள 18 கதைகளின் தொகுப்பு.



பெரும்பாலான கதைகள் vignettes போல கதாப்பாத்திர சம்பாஷனைகள் வழி  நகர்கின்றன.  எளிதான உரையாடல் போல தோன்றினாலும் உறவுகளுக்கு இடையே உள்ள நுட்பமான, அபத்தமான,  உணர்வுப்பூர்வமான இடங்களை தொட்டுச் செல்கிறது. கதைகளின் போக்கு,பொதுவான உட்பிரதி, தத்துவம் என்று கருதினால் நுட்பம், உணர்வெழுச்சி, அபத்தம் என்று இந்தக் கதைகளை வரையறை செய்யலாம்.

தக்கையின் மீது நான்கு கண்கள், சாந்தகுமாரி கதைகளை நுட்ப வரிசை கதைகளில் தலையாயன எனச் சொல்லலாம். உறவுகளுக்கிடையேயான நுட்பமான எல்லையை எந்த வித அலட்டலுமின்றி சொல்லும் கதைகள், கதைகளின் இறுதியில் வாசகன் கண்டடையும் இடங்கள் ஒரு ஆர்பாட்டம் இல்லாத அதிர்ச்சி தரும் இடங்கள். 

வான்கூவர்,உயிர்கள் மற்றும் அப்பா கதைகள் காட்டும் உறவுகளின் உணர்ச்சி கொந்தளிப்புகள் மிகவும் உண்மையாக மனதுக்கு நெருக்கமாக அமைந்தன. குறிப்பாக "வான்கூவர்" கதையில் பாட்டியின் மடியில் கதை கேட்கும் சிறுவன் பறக்க துவங்குவதாக நினைத்து கொள்ளும் இடங்கள் - உறவுகள் பரஸ்பரம் ஏற்படுத்தும் உணர்வு நிலையே பொருந்த சொல்ல மிகவும் நல்லதொரு உருவகமாக இந்த இடம் இருக்கிறது. 

கதைகளில் தீடீரென ஒரு கை தோன்றி மொத்த ஆட்டத்தையும் தெளிந்த நீரோடையை கலைக்க முயலும், அந்தக் கையை நாம் சா கந்தசாமியின் கதைள் வழி அபத்தம் என்று வரையறைப்படுத்த முயலலாம். இன்னதென்று வரையறுக்க முயல்கையில் அவற்றினின்று தப்பி நிகழும் இடங்களும் இவர் கதை உலகில் உள்ளன, தீராத வலி பற்றிய "மாய வலி "கதையும் , நான் மிகவும் ரசித்த "எதிர்முனை" கதையும் நாம் இன்னும் வரையறுத்து கொள்ளாத இடங்களை பற்றி பேசுகின்றன. 

அமி தனது கதைகளின் முக்கிய போக்காக evasion தப்பித்தல் என்று குறிப்பிடுகிறார், சா கந்தசாமி அவர்களின் கதை உலகத்தின் பிரதானம் "acceptance" என்று கருத வாய்ப்புள்ளது.

சா கந்தசாமி,முன்னுரையில் பின்வருமாறு கூறுகிறார் "இலக்கிய படிப்பு அப்படியொன்றும் வாழ்கைக்குத் தேவையானது இல்லை. வாழ்வது தான் முக்கியம். பணம் சம்பாதிப்பது தான் அவசியம் .பணம் சம்பாதிக்க ஆளாய் பறக்கும் மனிதர்களால் இலக்கியம் படிக்க முடியாது தான்.எல்லாருக்கும் எல்லாம் என்பது கிடையாது.எல்லாரும் ஒன்று என்பது உயர்ந்த இலட்சியந்தான். ஆனால் ஒன்றில்லை என்பது நிதர்சனம். அக்கறை கொண்டவர்கள் ஈடுபாடு கொண்டவர்கள் படிக்கிறார்கள்.அதன் பயனை அடைகிறார்கள். இலக்கியத்தில் பயன் என்று அறிந்து இருப்பதும் அறியாமல் வாழ்வதும் ஒன்று தான்.அது நல்வாழ்க்கை. ஆனால் நல்வாழ்க்கை என்பது தனியானது இல்லை. எத்தனையோ பிரச்சினைகளுக்கு இடையில், வாழும் ஒரு நல்வாழ்க்கை வாழ இலக்கியம் தன்னளவில் துணை செய்கிறது. ஆனால் இலக்கியத்தைப் படித்து அனுபவிக்க உள்ள ஒரே வழி அதனை படிப்பது தான். படிக்கிறவர்கள் பாக்கியசாலிகள் என்று அதன் காரணமாக சொல்லப்படுகிறார்கள்".

Monday, December 20, 2021

ஜெயகாந்தனின் ராஜபாட்டை

ஒர் இலக்கியவாதியின் ஆன்மீக அனுபவங்கள் பகுதி 1 முன் வைத்து - 


இந்தியா விடுதலை பெற்றபின் நாடெங்கும் எழுந்த லட்சிய எழுச்சியின் ஒரு முகம் கல்வி கற்றவர்கள் எண்ணிக்கையின் அசுர வளர்ச்சி, அந்த பின்னணியிலேயே அவரின் எழுத்தின் வெற்றியை அவர் பார்க்கிறார் இந்தப் பெருந்தன்மை நலம். அரசியல் சினிமா இலக்கியம் இம்மூன்றிலும் முத்திரை பதித்தாலும் அமைப்பு சாரா "பொதுக்குரல்" ஜெயகாந்தன். பல்வகை மனிதர்களின் அனுபவங்களின் மனசாட்சியின் திரட்டு இந்தப் "பொதுக்குரல்". பெரு நெறி என்னும் தனிமத சுதந்திரத்தை வலுவாக முன்வைத்த இந்தப் "பொதுக்குரல்", இதன் நீட்சியாக அவர் தனக்காக வகுத்தது  "லௌகீகத்திற்கான எல்லை ". இவ்விரண்டு விஷயங்களும் இன்று எழுத்தாளர்களுக்கு மட்டுமல்லாது வாசகனுக்கும் அவர் விட்டுச் சென்ற ராஜபாட்டை.

Tuesday, December 14, 2021

காலக்கண்ணாடி - அசோகமித்திரன்

கணையாழி தொடங்கியது முதல் 1988 வரையிலான அசோகமித்திரனின் கட்டுரைகள்,  அவரது பொறுப்பாசிரியர் குறிப்புகள் அடங்கிய நூல், 1965 ல் தொடங்கும் முதல் கட்டுரை கால வரிசைப்படி 1988 வரை அமைந்துள்ளது , 1996 ல் எழுதப்பட்ட கணையாழி தொடர்பான குறிப்புகள் கடைசி அத்தியாயமாக,  நூல் நிறைவு பெறுகிறது. நூலின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ள, பக்க எண்ணுடன் கூடிய  பொருள் பெயரகராதி  சிறப்பு. 


ஏறத்தாழ இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளின் இலக்கிய, சமூக ,அரசியல் நிகழ்வுகளை பிரதிபலிக்கும் கட்டுரைகள் கொண்ட நூல் இது, அந்த நாளைய பரபரப்பின் உடனடி எதிர்வினைகள்  தொடங்கி படைப்பிலக்கியத்தின் தத்துவம் குறித்த குறிப்புகள் வரை கொண்ட நூல். வெவ்வேறு நூல்கள் ஆளுமைகள் குறித்த அறிமுக நூலாகவும் இப்புத்தகம் அமைந்திருக்கிறது. நூலின் உள்ளடக்கத்தை குறிப்புகளாக எழுதவும் , பிடித்த பகுதிகளை சற்று விரிவாக தொகுக்கவுமே இந்தப் பதிவு 

நூலின் உள்ளடக்கம் குறித்த தேர்ந்தெடுத்த குறிப்புகள் 

டால்ஸ்டாய் எழுதிய தொடர்கதை (1965)

ஒரே மொழியால் பிரிக்கப்பட்ட நாடுகள் - இங்கிலாந்து அமெரிக்க இலக்கியம்  தொடங்கி , இலங்கை தமிழ் இலக்கியம் அவற்றிற்கு  தமிழ்நாடு வாசக மற்றும் பதிப்புலகம் அளிக்கும் இடம் குறித்த விரிவான குறிப்புகள். (1969) , இவ்வாறான ஒரு கட்டுரையின் தலைப்பு "சேதுவின் இரு கரைகள்" (1978).

சமீக் க்ஷா என்றொரு மலையாள இதழ் குறித்த குறிப்பு - மூன்று இதழ்கள் வெளிவந்துள்ளன  1) இந்திய இலக்கியம் 2) மறுமலர்ச்சி 3) புதியன - இவற்றில் மலையாள எழுத்தாளர் ஆனந்த் எழுதிய நூல் பற்றிய குறிப்பு வருகிறது ,  - இத்தொகுப்பிற்கு இணையாக தமிழில் அமி குறிப்பிடும் நூல்  " குருஷேத்ரம்" (1972 )

தஞ்சை மறு விஜயம் - ஆடுதுறை விவசாய ஆராய்ச்சி நிறுவனம் IR8 பசுமை புரட்சி  - கீழ்வெண்மணி என்ற இரு விஷயங்கள் ஒரே கட்டுரையில் அமைந்துள்ளது - கட்டுரையின் தலைப்பின் கீழ் அமைந்துள்ள குறிப்பு - " An Army marches on its stomach ....."  (1972) 

பாபு ராவ் படேல் குறித்த குறிப்புகள் - தன்னை மிகவும் பாதித்த ஆளுமையாக இவரை குறிப்பிடுகிறார் அமி.இசை ஆளுமை எம் பி ஸ்ரீனிவாசன் அவர்கள் குறித்து மிகுந்த மதிப்புடன் குறிப்பிடுகிறார், இளையராஜாவின் " எப்படி பெயரிட" நிகழ்ச்சிக்கு பெரும்பாலான கர்னாடக சங்கீத பிரமுகர்கள் வரவில்லை என்றும், இளையராஜாவின் சங்கீத கனவுகள் நூலை மிகவும் மதிப்புடன் குறிப்பிடுகிறார் 

சி சு செல்லப்பா குறித்த கட்டுரையில் சுதந்திரம் , காந்தியவாதம் குறித்த குறிப்புகளில் பின் வருமாறு கூறுகிறார்-  " சுதந்திரம் என்பதற்கு எவ்வளவு முயன்று பார்த்தாலும் திட்டவட்டமான இலக்கணம் எல்லைக்கோடுகள் தர முடியாது , இந்த அரூப தெளிவு காண முடியாத தன்மை தான், ஸ்தூல செயலால் அடைந்த ஒரு நடைமுறைச்  சுதந்திரம் ஏமாற்றத்திலும் விரக்தியிலும் இட்டு செல்லும் காரணம்" - " காந்தியத்தின் சில அம்சங்களை மட்டுமே கணக்கில் எடுத்துக்கு கொண்டு அவர் காலத்தில் கடைபிடிக்கப்பட்டது போல் இன்று கடைபிடிக்கப்படவில்லை என்று மேல் பூச்சான காரணம் சொல்லி  மீண்டும் ஒரு அலுப்பு -  " 

அக்காலத்திய நவீன நாடகங்கள், பரீக்க்ஷா , கோமல் , மெட்ராஸ் PLAYERS  குறித்த தனது குறிப்புகளில் " ALLEGORICAL அல்லது குறியீட்டு கதாப்பாத்திரங்கள் எவ்வாறு அந்தந்த  சமூக பிரிவின் சின்னங்களாக மட்டுமே நின்று விடுகின்றன , தனி உணர்ச்சிகள் ஆசாபாசங்கள் இல்லாத காரணத்தால் நாடகம் பார்ப்பவர்களுக்கு தட்டையான அனுபவங்களே கிடைக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார் , உத்தி குறித்து பல்வேறு இடங்களில் மீண்டும் மீண்டும் "உத்தி கலையாகாது"  என்று வலியுறுத்துகிறார்.  

அமி பரிந்துரைக்கும்  சில புத்தகங்கள் " விடுதலை போரில் தமிழகம் - மபொசி" , " மார்க்சியமும் இலக்கியமும் - ஏ ஜே கனகரட்ணா , " Theory of the Film : - Bela Balazs , Hungary 

********

படைப்பிலக்கிய வெற்றி குறித்து "  முதல் மரியாதை படத்தில் - " அழகில்லாத எளிமையான கிராமத்துப் பெண்ணை கதாநாயகியாக அப்படத்தில் கற்பனை செய்து பார்த்தால் படம் இவ்வளவு வெற்றி படைத்திருக்குமோ ? ஆதலால் இந்த சந்தேகம் நூற்றாண்டு படைப்பிலக்கிய காரர்களுக்கு ஒரு வினாவை எழுப்பும் , அவர்கள் வெற்றி படைப்புக்காகவா அல்லது தகவல் பரிமாற்றுச் சாதனங்கள் பொது மக்களிடையே ஏற்படுத்தும் மனத்தத்துவ பாதிப்பை நுண்ணிய வழியில் கையாளத் தெரியும் சாமர்த்தியத்திற்காகவா ? (1978) 

நிறுவனமையமாதல் குறித்து - இந்தக் குறிப்பு  பிச்சையிடுவதன் தர்மம் காலம் காலமாக இருந்து வருவது குறித்தும்  , இன்றைய சமூக சூழலில் பிச்சை அவமான சின்னம்,  சமூக பிரச்சனையாக கருதப்படுவது குறித்தும் குறிப்பிடுகிறார். தனிமனித பிச்சைகளை  அரசாங்கம் குறைத்து வரும் நேரத்தில்  அரசாங்கம் தரும் பணமும் உணவும் கண்ணிய குறைவாக உணரப்படுவதில்லை என்று கூறி - நிறுவனமயம் வழி இங்கு தர்மமே மாற்றம் அடைந்து விடுகிறது என்று கூறுகிறார்  - இதைத் தொடர்ந்து காந்தி சிறுகதையில் வரும் குறிப்புகளை போலவே இயந்திரமாதல் குறித்த தனது பார்வையை  " நேரடி சம்பந்தம் பொறுப்பு உணர்வு முதலியவற்றை அனுபவிக்கும் தருணங்கள் தவிர்க்கப்பட்டு விடுகின்றன" சாவு வாழ்வு இரண்டும் impersonal ஆகி விடுவதில் குற்றவுணர்ச்சி அகன்று விடுவது போல ஒன்றியுணர்வதற்கு இடமில்லாது  போய் விடும். போய் விடுகிறது.  நிறுவன தர்மமும் அதில் தான் முடிவடைய முடியும்" (1982) 

சராசரி குறித்த இன்னொரு கட்டுரையில்  கட்டிட கலை மேதை Frank Llyod Wright கூறியதாக அமி குறிப்பிடுவது " கற்றுக்குட்டி என்ற நிலையில் தவிர யாரும் எந்தப் போட்டியிலும் கலந்துக் கொள்ளக் கூடாது எந்தப் போட்டியும் உலகத்துக்கு சிறப்பான எதையும் கண்டெடுத்து தந்ததில்லை", " போட்டி நடுவர்கள் எப்போதும் சராசரிகள். இந்த சராசரிகனின் முதல் வேலை சிறப்பானதை களைந்து எறிந்து விட்டு, சராசரியை பொறுக்கி எடுப்பது.  எந்த போட்டியின் விளைவும்  சராசரிகள் சராசரிகளுக்குகாக சராசரிகளை தேர்ந்தெடுப்பது தான் " (1983) 

தலைமுறை இடைவெளி குறித்து " ஒவ்வொரு தலைமுறைக்கும் - அது 33 ஆண்டுகள் இடை வெளியுள்ளதானாலும் ஐந்தாண்டுகள் நீண்டதானாலும் அதனதற்குரிய சிறப்பை காண முடிகிறதோ இல்லையோ, அசட்டுத்தனத்தைக் காண முடிகிறது , இந்த " அசடு" என்பது தமிழ்  மொழிக்கேயுள்ள ஓர் சிறப்பு கருத்து வடிவம். இருபத்திரண்டு ஆண்டுகளாகும் கணையாழிக்கு ஒவ்வொரு ஐந்தாண்டிற்கும் உரிய அசட்டுத்தனத்தை காண முடிகிறது. அசட்டுத்தனம் என்பதை இகழ்ச்சிக்குரியதாக மட்டும் எண்ணக் கூடாது. தனித்துவம் என்று கூறிக் கொள்ளலாமா ? " ( 1986) 

தப்பித்தல் குறித்து - சொல் புதிது ஜெயமோகன் அவர்களுடனான நேர்காணலில் " கதாப்பாத்திரத்தின் -"Sublimation"   குறித்த கேள்விக்கு - அமி அவர்கள் " Evasion" என்பதையே தன் படைப்புகளின் பிரதான அம்சமாக கருதுவதாக கூறுகிறார் - இந்நூலில் தப்பித்தல் என்றொரு அத்தியாயத்தில் சற்று விரிவாகவே இதை புரிந்து கொள்ளும் வகையில் கூறியிருக்கிறார் -    "கதை கவிதை கட்டுரை பிரதானமாக நடுத்தர வர்க்கத்து பிரக்ஞையிலிருந்து எழுந்து, நடுத்தர வர்க்கத்து உணர்வுகளுக்கு ஊட்டமளிப்பதாகவே இருந்திருக்கின்றன. ஒரு  விதத்தில் நடைமுறை வாழ்க்கையில் அடைய முடியாததோர் நிறைவை கற்பனையிலாவது அடைவதற்காக நடுத்தர வர்க்கம் ஒரு தப்பித்தல் சாதனமாக எழுத்தை அதாவது "படைப்பிலக்கிய எழுத்தை உயிரூட்டி வளர்ந்திருக்கிறது என்று கூற வேண்டும் " ......"ஆனால் விடுதலை மீட்சி என்பவை சந்தேகமூட்டும் சொற்கள், வரலாற்றின் கொடூரக் கொடுங்கோலர்கள் அனைவரும் இச்சொற்களை பயன்படுத்தி இருக்கிறார்கள்" ...."முதலில் தப்பித்தல் உந்துதலிலிருந்து நாம் விடுபட வேண்டும் " ... "தப்பித்தல் இயக்கங்களை தெரிந்து கொள்வதற்கும் அவற்றினின்று விடுபடுவதற்கும் உள்ளூர ஒரு உந்துதல் தேவை. அப்படி தோன்றாதபடி அந்தத் தப்பித்தல் மயக்கம் பார்த்துக் கொள்ளும். இலக்கியத்துக்கு இந்த மயக்க அம்சம் உண்டு. கணையாழி வரையில், முடிந்த அளவில் இந்த மயக்கத்தை குறைக்க முயற்சி ஒரு திக்கிலிருந்தாவது தொடர்ந்து இருந்து வருகிறது ..... இலக்கியமே இறுதியும் முடிவும் அல்ல என்பது கணையாழியில் பல முறை கூறப்பட்டிருக்கிறது அல்லவா ? ".... " மயக்கம் தவிர்க்க வேண்டும் .. தப்பித்தல் கூடாது ..... தமிழில் இலக்கியம் என்ற சொல்லையே தவிர்ப்பது நல்லது என்று தோன்றுகிறது (1987) 

***

Friday, December 10, 2021

கடைத்தெருக் கதைகள் - ஆ மாதவன்

கடைத்தெரு பின்புலத்தில் அமைந்துள்ள பதினோரு கதைகள் அடங்கிய சிறுகதைதொகுப்பு இந்நூல். 


சவடால் சாகசம்

சாலை பஜார் கடைத்தெருவின் வகை மாதிரி கதாப்பாத்திரங்களின் சவடால், சாகசம், அனுபவ புதுமைகளே இக்கதைகளை அணுக சுவாரஸ்யமான துவக்கப் புள்ளி. 

இந்த சவடாலும் சாகசமும் வெளித்தோற்றங்கள் மட்டுமே, தினப்படி வருமானத்தை நம்பியிருக்கும் எண்ணற்ற மனிதர்களின் வாழக்கை போராட்டதின் கலை முகப்பாக இந்த சாகசங்கள்

வயிறு இன்னபிற 

பொருளாதார கடை நிலை மனிதர்களின் இவ்வாழ்க்கை போராட்டம் வழி நமக்கு பரிச்சயம் ஆகும் சிறு கடை முதலாளிகள். இவ்விருவருக்கும் இடையே ஏற்கனவே இறுதி செய்யப்பட்ட எல்லைகளை நாம் அறிகிறோம். எல்லைகள் காரியார்த்தமாகவும் அனுபவபூர்வமாகவும் எதேச்சையாகவும் பரஸ்பர தயவில் வெகு சில நேரங்களில் மறைந்து மீண்டும் தோன்றுகிறது. இந்த தருணங்களே கதைகளின் எளிய சாகச சவடால் முகப்புகளை தாண்டி அமைந்துள்ள  குறிப்பிடத்தக்க அம்சம்.( எட்டாவது நாள், உம்மிணி, பாச்சி) 

பெரும் பாதகத்தின் நிழலில்

ஏறத்தாழ அனைத்துக் கதைகளின் நிகழ்வுகளில் ஒரு பெரும் பாதகம் மையமாகவோ கதை ஓட்டத்தின் ஒரு புள்ளியாகவோ வருகிறது. கதை இப்பாதகத்தின் வீச்சை மட்டுமே  நம்பியிருக்காது இந்த பாதகத்தின் அருகே அதை கடந்த செல்லும் வகையில் வேறு சில விஷயங்களை கூறிச் செல்கிறது. நாம் பெரும் பாதகம் என்று எண்ணும் விஷயங்கள் வேறொரு தளத்தில் வேறு ஒரு பொருள் கொள்ளும் வகையில் அமைந்திருப்பது கதைகளின் கலை வெற்றி. ( தூக்கம் வரவில்லை, உம்மிணி) 

அசாத்தியம் 

இவரா இவனா இதை செய்தது ? நானா இப்படி செய்தது ? எனக்கா இப்படி ? (உம்மிணி, காளை, விஸ்வரூபம்) எனும்படியான கதை அமைப்பு கடைத்தெருவின் மற்றுமொரு சாளரத்தை நமக்கு திறந்து காட்டுகிறது. எளிய விளையாட்டுத் தனமான  கதாப்பாத்திர குழப்பங்கள் வேடிக்கை  நிகழ்வுகள்( கோமதி, பறிமுதல்)  முதல்,கதைக்கு முற்றிலும் பூடக தன்மை அளிக்கக் கூடிய நிகழ்வுகள் வரை கதாபாத்திரங்களின் அசாத்திய செய்கைகள் நம்மில் சில நேரங்களில் குறு நகையையும் சில நேரங்களில் பலத்த அதிர்ச்சியையும் ஏற்படுத்துகின்றன (ஈடு, தூக்கம் வரவில்லை ,எட்டாவது நாள்). 

அநித்யம்

தினப்படி சாகசம் , எப்பொழுதோ மறைந்து  உடனே மீண்டும் தோன்றும் சுமூக எல்லைகள், மறக்கவியலாத பெரும் பாதகத்தின் நிழலில் நாம் அனைத்து கதைகளின் மைய இழையாக உணர்வது அநித்யத்தை.  அனைத்து கதைகளின் போக்கு பெரும்பாலும் "முன்பிருந்தவர் இப்போது இல்லை" "முன்பிருந்தது இப்போது இல்லை" என்ற அநித்ய நினைவுகள். காலத்தின் கடைத்தெரு தன்னகத்தே கொண்டுள்ள நிர்தாட்சண்யம் இதன் மூலம் புலனாகிறது. 

Sunday, December 05, 2021

எழுத்தாளர்கள் நூல்கள் நிகழ்ச்சிகள்- அசோகமித்திரன் - சில குறிப்புகள் சில கட்டுரைகள்

 

1999,2000,2001 ல் எழுதப்பட்ட கட்டுரைகள் -  புத்தக அறிமுகங்கள், சுருக்கமான நினைவோடைகள், வெவ்வேறு இதழ்களில் வெளி வந்த கட்டுரைகள் அடங்கிய நூல் 


சுருக்கமான நினைவோடைகள் 

ஜி நாகராஜன் 

நம்பி கிருஷ்ணன் 

ஆர் கே நாராயணன் 

புதுமைப்பித்தனை முன் வைத்த கநாசு

எம் வி வெங்கட்ராம்

இந்திரா பார்த்தசாரதி 

தஞ்சை பிரகாஷ் 

ந பிச்சமூர்த்தி

சிவபாதசுந்தரம்

தி ஜானகிராமன் 


ஜெயமோகன் சொல்புதிது நேர்காணல் 

நல்லி நாராயணசாமி செட்டி - நம்பிக்கை -  அமி தொடர்பான வாழ்க்கை நிகழ்வு பற்றிய குறிப்பு



பிற கட்டுரைகள்

இருபதாம் நூறாண்டு முடிகையில் தமிழ் சினிமா 

உலக தமிழ் மாநாடுகளின் எதிர்காலம் 

இருபதாம் நூற்றாண்டில் தமிழ் படைப்பிலக்கியம் 

அச்சு ஊடக எதிர்காலம்.

அவதூறும் சாதனையும் - கல்கி புதுமைப்பித்தன் 

வசீகரத்தின் இலக்கணம் - டி ஆர் ராஜகுமாரி

குஷ்வந்த்சிங் கின் பல்லக்கு 

ஒரு வசனமில்லா நாடகம் - முட்டாள் சொன்ன கதை  1974 ல் எழுதப்பட்டது 

---

படித்ததில் பிடித்தவை 

" மனிதனை மனிதன் சுரண்டும் தன்மை எந்த மகானை மதித்திருக்கிறது? "

"மறு பிறவி கர்ம பலன் ,விபரீதத்திற்கு வேறு காரணங்கள் வேண்டாம் "

"திராவிட கட்சி பிரமுகர் கமலஹாசன்"

"உலகின் அனைத்து சுற்றுலா இடங்களும் தமிழ் சினிமாவின் பாடல் காட்சிகளுக்கும் நடன காட்சிகளுக்கும் பின்னணியில் பாதாம் அல்வாவில் கடுகு கருவேப்பிலை தாளித்தது போல இருக்கும்."

"இரண்டாயிரமாண்டு பிறக்க போகும் இந்த தருணத்தில் தமிழ் சினிமா ஒரு ரசிக்கத்தக்க இரைச்சலாகவும், அனுபவிக்கதக்க குழப்பமாகவும் இருக்கிறது. "

"இரு பாகவதர்கள் உச்சி வெயிலில் ஒரே இடத்தில் நின்று கொண்டு பாடிய காட்சி இன்னும் மறக்கவில்லை. மறக்கக் கூடாதது அது தானோ ? "

ராஜஸ்தான் மாநிலத்தில் எழுத்தாளர் நைபால் மாநாட்டில் - வாயில் மண்ணெண்ணெய் கலவை ஊற்றி வித்தை காட்டிய ஆண்கள் - நைபால் அந்த ஆண்களுக்கு பல நூறு ரூபாய்க்கு குறையாது வெகுமானம் அளித்தது ! அடுத்த வரி - "பெண்கள் நடனத்தில் பயிற்சிக்கும் தேர்ச்சிக்கும் ஒரு குறைவும் இல்லை. ஆனால், அவர்கள் நெருப்பை ஊதி பரபரப்பேற்படுத்தவில்லை "

--

அமி குறிப்பிட்டிருந்த  சிறுகதைகள் புத்தகங்களில் சில

அட்லாண்டிஸ் மனிதன் - எம்ஜிசுரேஷ்

இயந்திர மாலை ஆர் ராஜகோபாலன் 

நீலக்கடல் , மருமகள் வாக்கு  நம்பி கிருஷ்ணன் 

பைத்தியக்கார பிள்ளை பெட்கி- எம் வி வெங்கட்ராம் சிறுகதைகள்

தி ஜானகிராமன் - நாலாவது சார் சிவஞானம் 



Friday, December 03, 2021

ரத்த உறவு - யூமா வாசுகி

நாவலில் இரு வேறு உலகங்கள் புலனாகின்றன.

பூ, செடி, மரம் இலை விளையாட்டு பொருள் ,பூச்சிகள் பறவைகள், மிட்டாய், தின்பண்டம் உணவு  கல் மண் கனவு  சாகசம் சூழ்ந்த பால்ய காலங்கள். 

குடும்ப கடமைகள்,  வம்பு சீட்டாட்டம், சாராயம், குடும்பம் மனைவி சண்டை, அடிதடி, குரோதம், வீடு, வாசல், சொத்து, பிழைப்பு, சாக்கடை, குழந்தை வளர்ப்பு,  கண்டிப்பு, குடும்ப வன்முறை, ஆபீஸ் மீட்டிங் சூழ்ந்த பெரியவர்கள் உலகு.



இரு உலகங்களின் நுண்ணிய துல்லிய வர்ணனை நாவலின் பலம். பல்வேறு சம்பவங்களின் வழி இரு உலகங்களும் வாசகனுக்கு பரிச்சயம் ஆகையில் பால்ய நினைவுகள் மனதில்  பூரிப்பையும் , பெரியவர்கள் உலகு தாங்க முடியாத கரிப்பையும் சிறுமையையும் ஏற்படுத்தின. பால்ய உலகின் விந்தையும் புதுமையும் நம்மை ஆட்கொள்கையில் பெரியவர்கள் உலகம் முகம் சுளிக்க வைக்கிறது. 

நாவலின் தலைப்பு வழி, "ரத்த உறவு" என்னும் சொல் வழி மீட்சியே இல்லாது காணப்படும் பெரியவர்களின் இருண்ட உலகில் சிறிய வெளிச்சங்கள் கிடைக்கப் பெறுகின்றன. மிகவும் நுட்பமாக அமைந்திருக்கும் விஷயம் இது. தினகரனின் அத்தனை கொடுமைகளை வாசுகி தாங்குவதற்கு காரணம் தன் தந்தையுடனான ரத்த உறவு காரணமா ?  வாசுகி அக்கா மீண்டும் மீண்டும் தம்பிகளை பொத்தி பொத்தி பெரியவர் உலகில் இருந்து காப்பது எதன் பொருட்டு ? ரமணி  சின்ன மாமா இருவருக்கும் இடையேயான சுமூக ரத்த உறவிற்கும்,  பெரியப்பா, தனபால், தினகரன், அங்காளத்தம்மன் இடையேயான பிணைப்பான  ரத்த உறவுக்கும் உள்ள வேறுபாடு என்ன ?  ரத்த உறவு இல்லாத இரு குடும்பங்கள் இணைகையில் ரமணி தினகரன் உறவு சுழிப்பில் நம்பிக்கையின்மை, குரோதம், வன்மம், அடிதடி என சர்வகீழ்மைகளும் வெளி வருகின்றன. வீட்டிற்கு வெளியே அவ்வளவு அன்புடன் மீனாட்சியின் பிள்ளை மாரியாயி யை பரியும் தினகரன் தன் சொந்த மகளிடம் காட்டும் துவேஷம் புரிந்து கொள்ள முடியாதது. ரத்த உறவு இல்லாத தன் இணை ரமணி மட்டும் தான் காரணமா? குடும்பமே சேர்ந்து ரமணி யை துவேஷிக்க தூண்டிய பொறி எது ? கேள்வியை சற்றே நீட்டி யாதொரு குடும்ப சூழலில் ஒருவர் மட்டுமே திரும்ப திரும்ப அவப்பெயர் சுமந்தோ துவேஷிக்கப்படுவதோ எதனால் ? குடும்பத்தை மீறிய பொது நியாயம் என்ற ஒன்று உண்டா ? விவேக் ஷன்பேக் இன் கச்சர் கோச்சர்  (2015) நினைவுக்கு வந்தது. ரத்த உறவு 2000 த்தில் தமிழினி வெளியீடாக  வந்துள்ளது. 

நாவலின் முடிவில் சிறுவர்கள் மகிழ்ந்து இருக்கும் சித்திரம் மன நிம்மதியை அளித்தது. கவித்துவம் மிளிரும் வரிகள் ஆசுவாசபடுத்தினாலும் குடும்ப வன்முறை தருணங்களின் துல்லிய விவரிப்பு பயத்தையும் அருவருப்பையும் ஏற்படுத்தின.