Sunday, July 21, 2019

பின்தொடரும் நிழலின் குரல் - ஜெயமோகன்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

வணக்கம்

பின்தொடரும் நிழலின் குரல் – வாசித்து முடித்தப் பின் தங்களுக்கு எழுதுவது. ஒரு நூற்றாண்டு கால நிகழ்வுகள் சிதறியும் சேர்த்தும் பொருள் கொள்ள தக்கதாய் வெவ்வேறு வடிவ  சாத்தியங்களில், முடிவுரை எழுதப்படாத  ஒரு பெரும்  உரையாடலில் பங்கு கொண்டது போன்ற ஒரு பேரனுபவம்.

கௌரியிலிருந்தே நாவலை புரிந்து கொள்ளத் துவங்குகின்றேன். குழந்தைகள் நம்மை இந்த கணத்தில் நிறுத்தியபடியே இருக்கின்றனர். கடந்த காலத்தின் சுமையோ எதிர்காலம் குறித்த அச்சமோ அவர்களை எளிதில் தீண்டுவதில்லை – நிகழ்காலத்தில் வாழ்வை எவ்வளவு எளிதாக்க முடியுமோ எந்த அளவு எளிதாக்க முயல்கின்றனர் –  சொற்களின் கோட்டையை எளிய கேள்விகள் மூலம் தகர்க்கின்றனர். நாவல் நெடுக வரும் குழந்தைகள் அவர்களுக்குரிய பூரண அழகுடன் உரையாடுகின்றனர் – அவர்கள் முன் டால்ஸ்டாயும் தாஸ்தொயேவ்ஸ்கியும் ஏசுவும் புகாரினும் தடுமாறுகின்றனர்.

பன்முகங்கள் கொண்ட கம்யூனிசம் குறித்த விரிவான சித்திரம் நாவலை வாசிக்கையில் கிடைக்கிறது. கட்சியின் அகிலஇந்திய தலைவர் தொடங்கி கட்சியின் கடை ஊழியன் வரையிலான கட்சி நிர்வாக அமைப்பின் அத்தனை பிரதிநிதிகளின்   பேரங்கள், சண்டைகள், சமாதானங்கள், யதார்த்தங்கள் என நாவல் விரிகிறது.

இந்தியாவை பொறுத்த வரை , கதிர் போன்றவர்களின் சஞ்சலம் இல்லாத நிச்சயமே பயம் கொள்ள வைக்கிறது, தன்னுணர்விற்கும் ஆதித்  தொடர்ச்சிக்கும் மதிப்பளிக்காத யந்திரத்தனமான அறிவின் வழி  சாமர்த்தியமான உரையாடல்கள் வழி, நிரூபணம் ஒன்றே குறிக்கோளாய் இயங்கும் ஆளுமைகளை எதிர் கொள்வது நவீன காலகட்டத்தின் சவால். தர்க்கம் வழியே  பேரங்கள் வழியே  முழுமையை அடைய முடியும் என்றால்  மதங்களின் தோற்றங்களுக்கு என்ன தான் பொருள் ? சடங்குகளுக்கு என்ன மதிப்பு ? ஆழ் மனது என்ற ஒன்றை ஒரு பல்லாண்டு கால நினைவின் தொடர்ச்சியை கணக்கில் கொள்ளாது அரசியல் தளத்தில் மாத்திரம் மார்க்சியம் இயங்குவதால் பெரிய மாற்றங்கள் நிகழவில்லை அதே நேரத்தில் தொழிற் சங்கங்களின் வாயிலாக ஒரு வலுவான பேர அமைப்பாக சுருங்கி இருக்கிறது,

தனிப்பட்ட முறையில் தோழர்களின் தலைவர்களின் தியாகங்கள் பெரிதாக மக்களை அசைக்கவில்லை. தனிப்பட்ட முறையில் நேர்மையான ஒரு குழு திரளான மக்களின் உணர்வுகளை மதிப்பீடுகளை மாற்ற இயலவில்லை – கடவுள் பயத்தினால் தான் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை இல்லாது காலத்தின் சுழற்சிக்கு அடிபணிந்து மனிதன் வாழ்ந்து வருகிறான் – கடவுள் என்ற கருதுகோளை எதன் பொருட்டு இடதுசாரிகள் எதிர்த்தனர் ? கடவுள் குறித்தோ  கடவுளுக்கு நிகரான சொல்லாடல்களான ஊழ்வினை குறித்தோ பாவ புண்ணியம் குறித்தோ உரையாடுவதற்கு இன்றைய கம்யுனிஸத்தில் இடம் இல்லை ? “ஒளிர் நிழல்” நாவலில்வரும் ஒரு குடும்ப கணக்கு என்னை மிகவும் சீண்டியது – சீண்டல் மட்டுமே , இன்றளவும் கட்சி மீட்டிங் முடிந்த பிறகு அவரவர் சாதிக்கும் அவரவர் வழிபாட்டுக்கும் திரும்புகின்றனர். ஒரு வித சீண்டலாக , குற்ற உணர்வின் கட்டமைப்பாக அதே கட்டமைப்பின் வடிகாலாக, புலம்பலாக, நம்மில் எஞ்சும் ஒரு தார்மீகமாக ஒரு எட்டாகனவாகவே கம்யூனிசம் இருக்கிறது –

நாவலில் பகுதியாக வரும் நாடகங்களும் சிறுகதைகளும் தன்னளவில் தனித்தும் வடிவமைதி கொள்கின்றன. குறிப்பாக   ” ரகசிய பேச்சாளன் ஒரு அற்புதமான சிறுகதை. ” புனிதரும் மனிதரும் & உறைபனி  அற்புதமான நாடகங்கள். நாவலில் கட்டற்ற பகுதிகளே சிறப்பாக அமைந்துள்ளன, கச்சிதமான தத்துவ அரசியல் விவாதங்கள் நன்றாகவே அமைந்திருந்தாலும், ஓநாயும் மனிதர்களும் நாடகத்தில் வரும் சில பகுதிகளில் உள்ள சொல்பெருக்கு பிரவாகம் இப்படைப்பின் உச்சம். ஒரே  நேரத்தில் சிரிப்பையும் ஆற்றாமையும், இரக்கத்தையும் எள்ளலையும் கொணர்ந்தன. நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள நாடக வடிவம் இப்பிரவாகத்திற்கு சரியான ஈடு – வரலாற்று பாயில் அமர்ந்திருக்கும் வரலாற்று நாயகர்களின் நனவோடை போல

கெகெஎம் மற்றும் அருணாச்சலம் கண்டடையும், பற்றும் இடங்கள் வீரபத்திரனுக்கும் கதிருக்கும்  புலப்படாதவை – வீரபத்ரபிள்ளை கைபிரதியில் புகாரின் அடைந்த மீட்சி பற்றி கூறுகிறது. ஆனால் வீரபத்திர பிள்ளைக்கு மிஞ்சியது வார்னிஷ். கதிர் சொற் கோட்டையின் சிம்மாசனத்தில் அமரப் போகிறான். அய்யன் பிள்ளை எளிதாக நுழைந்து வெளியேறுகிறார். எஸ் எம் ராமசாமி அவர்களை பொய்த்த கனவின் பாரம் அழுத்துகிறது. ஜெயமோகன் முடிவுரை எழுதாது அருணாச்சலத்தை மீண்டும் சீண்டுகிறான் , நேசன் இசக்கி சுட்டெரிக்கும் வெயிலில் ஒரு கந்தர்வன் போல் நடை பயின்று வருகிறான்.

தற்கால அரசியலில் ஈடுபாடு உள்ள எவரும் படிக்க வேண்டிய முக்கியமான படைப்பாக பின்தொடரும் நிழலை கூறுவேன்

அன்புடன்,

No comments: