"ஸ்கூல் அட்மிஷன் ஒன்னு,
EBல யாராவது தெரியுமா? TNPLல? திருவான்மியூர் RTOல? SBIல? ஆள் தெரிஞ்சா ஒரு சின்ன வேலையாவனும். கொஞ்சம் செலவு பண்லாம், தெரிஞ்சா சொல்லுங்க"
- இப்படி சதா யாருக்காவது வலை வீசி,
கெஞ்சி, குழைந்து, சரி கட்டி எதாவது ஒரு புரோக்கரை தேடி, எதாவது ஒரு காரியத்தை சாதித்துக் கொண்டே இருக்கும் பிரஜைகள் நாம். இவ்வகை புரோக்கர்களிலிருந்து சற்றே உயர் ரக, பொருளாதார மேல் தட்டு வர்க்கத்தின், அரசியல் வியாபார கணக்குகளின்,
மறைமுக வலைப் பின்னலின் ஒரு கண்ணி, இளம் அரசியல் புரோக்கர் ஒருவனின் கதா காலாட்சேபம் " ரோலக்ஸ் வாட்ச்.
பணத்தின் நிகர் மதிப்பு என்ன ? தற்காலத்தில் சமூகம் பணத்தை அதன் பாதாளம் வரை பாய அனுமதிக்கிறது என்பதொரு பாவனை பொதுவாக நிலவுகிறது. பணத்தால் ஆகாதது எதுவும் இல்லை என்று திரும்பத் திரும்ப தேய்ந்து போன சொலவடையை உபயோகிப்பதன் மூலம், நமக்கு நாமே எதை நினைவுறுத்திக் கொள்கிறாம்?
தெரிந்த விஷயத்தின் சலிப்பை வெளிப்படுத்தவா? போக்கின் விபரீதம் உணர்ந்து நமக்கு நாமே விடுத்துக் கொள்ளும் எச்சரிக்கை மணியா? இந்தப் புள்ளியில் இருந்து நாம் இந்த நாவலை புரிந்துக் கொள்ள தொடங்கலாம்.
பண வெறி பிடித்த இளம் அரசியல் புரோக்கரின் கதை. நடந்த,
அவ்வளவாக ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பல்வேறு சம்பவங்களின் கவர் ஸ்டோரி தொகுப்பு போல் இந்த நாவலின் சித்திரம் விரிகிறது. பொருளாதார அளவில் கீழ்மட்டத்திலிருந்து, தனது தொடர்புகள் மூலமும், பேச்சு சாதுர்யத்தாலும் பொருளாதார வெற்றி அடையும் இளைஞனின் அந்தஸ்து,
உயர்வர்க்கத்தால் எந்த அளவுக்கு அங்கீகரிக்கப்படுகிறது ? வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் நுட்பமாக அவனது எல்லை சுட்டிக்காட்டப்படுவதின் லாகவம் குறித்த இளைஞனின் கணிப்பே இந்த நாவலின் பக்கங்கள். அதிகார மட்டத்தால் சரிசமமாக நடத்தப்பட்டாலும் முழுமையாக இணைய முடியாத இடைவெளியை நாயகன் உணர்கின்றான்.
இலட்சியவாதம் முற்றாக மறைந்ததாக கருதப்படும் இந்தக் காலகட்டத்தில் இளைஞர்கள் தம் தனிப்பட்ட இலக்குகளை எட்ட காட்டும் தன்முனைப்பும், பணம் சேர்க்க மேற்கொள்ளும் பிரயத்தனங்களும் - இவ்விரு தடங்களில் நாம் நாவலின் சம்பவங்களை வைத்துப் பார்க்க முடியும். இவ்விரண்டும் அமையப் பெற்றும் நாயகனிடம் ஒருவித நிறைவின்மை சூல் கொள்கிறது. மீண்டும் இலட்சியவாதம் துவங்கும் இடமோ ?
நாவல் படிக்கையில் ஒரு அலாரம் அடித்தது - எங்கே
"Celebrating Evil" என்ற அர்த்தத்தில் சமகால யதார்த்த தளத்தில் நாவல் முடியக் கூடுமோ என்று நினைத்தேன்.
"Wolf of the Wall Street" திரைப்படம் என் வரையில்
"Celebrating Evil" தளத்தில் சென்று மனிதன் இறங்கக் கூடிய கீழ்மையின் அளவை உணர்த்த எடுக்கப்பட்டதாகவே உணர்ந்தேன்.
ரோலக்ஸ் வாட்ச் நாவலில் இறுதியில் நாம் காண்பது இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கும் நமது மனசாட்சியை, மீதம் இருக்கும் தர்ம உணர்வை, அணைந்து போனதாகக் கருதப்படும் நெருப்பின் சிறு கங்கினை.
சரளமான, எளிமையான நடை. செய்தித்தாள் வழி அறியும் செய்தி போல, நண்பன் ஒருவன் விவரிக்கும் சுவாரஸ்ய சம்பவத்தைப் போல - வாசக உள்ளம் இன்னும் கேட்கிறது - இன்னும் உண்மை வீச்சுடைய சம்பவங்கள் உரையாடல்கள் நாவலுக்கு வலுசேர்த்திருக்கக்கூடும். நாயகனின் அபரிமிதமான தெளிவு ஒரு வித பீட நிலையை அளிக்கிறது.
""மேல் மட்ட உள் அடுக்குகளில் நடக்கும் விஷயங்களை சொல்கிறேன் கேள்" என்பதான தொனி, நாயகனின் ஆதார தவிப்பின் வீரியத்தை குறைக்கிறது.
தனி நபரின் வெற்றி தோல்வியை எடை போட சமூகம் வைத்திருக்கும் பொருளாதார கணக்கின்படி நாயகன் வெற்றி பெறுகிறான். இருப்பினும் வெற்றி நிறைவை தரவில்லை. அதுவரை அனுபவித்தே இராத விஷயங்களை ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து நுகர்கிறான். உணவு, மது, பெண்கள் என நுகர்வு தளத்தில் முன் சென்றாலும் அதே நிறைவின்மை. இன்னும் நுட்பமாக, பிரதானமாக உடற் தேவையை பூர்த்தி செய்ய ஏற்பட்டுள்ள பிரத்தியேக இடங்களில் கூட மனதின் தீராத வேட்கை, உரையாடலுக்காக ஏங்குகிற விசித்திரத்தை முன்வைக்கிறது இந்த நாவல். இது வெறுமனே பாலியல் தொழிலாளர்களின் முக்கியத்துவத்தை கூட்ட ஆசிரியர் மேற்கொண்ட உத்தி என்று புறம் தள்ளலாகாது. நவீன யந்திரத்தின் அலகாகிப் போன தனி மனித வாழ்க்கை ஒரு சிறிய உரையாடலுக்காக எத்தனை ஏங்குகிறது? திங்கள்கிழமை துவங்கும்போதே வெள்ளிக்கிழமை கனவுகள் சிறகு விரிக்கும். அது வெறும் புலன், போதை சம்பந்தப்பட்ட விஷயம் என்று ஒதுக்கலாகாது. மீண்டும் மீண்டும் உரையாட ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தியபடியே நவீன எந்திரத்தை மேலும் புரிந்துக் கொள்ள முயல்கிறான் . இந்த விஷயத்திலும் வார இறுதி என்னும் ஒரு எந்திர அம்சம் இருப்பது முரணே.
இப்புதினம் எழுப்பும் மற்றுமொரு முக்கியமான கேள்வி ? தனி மனிதனின் சிந்தனைக்கு இன்று இருக்கும் மதிப்பென்ன? நாயகன் தீவிரமாக சிந்திக்கவே தயங்குகிறான் - அவன் இயங்கும் தளத்தில் சிந்தனைக்கு இடம் இல்லை - தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும்படியான கட்டமைப்பில் அவன் ஒரு கண்ணி. இருப்பினும் உள்ளுர அவன் ஏங்கியது?
அவன் வெறுத்தது? சண்டையிட்டது எதனுடன்?
உணர்ந்தது எதை?
ரோலக்ஸ் வாட்ச், சரவணன் சந்திரன்,
உயிர்மை பதிப்பகம்.
No comments:
Post a Comment