Sunday, July 21, 2019

ஒளிர் நிழல் - சுரேஷ் பிரதீப்

அன்புள்ள சுரேஷ் பிரதீப் அவர்களுக்கு 

வணக்கம் 

ஒளிர் நிழல் படித்து முடித்தவுடன் மிகவும் சீண்டப்பட்டவனாகவே உணர்ந்தேன் - சரியான காரணம் எதுவும் இன்றி ஒரு கொந்தளிப்பான மனநிலையை அடைந்தேன் - சற்று சுதாரித்து iஒரு விதமாய் என் எண்ணங்களை தொகுத்து இந்த மின்னஞ்சல் எழுதத் தொடங்குகிறேன், இம்மின்னஞ்சலை தங்கள் நாவல் குறித்த விமர்சனமாகவும் , நாவல் பேசியுள்ள கருத்துக்களை பற்றிய என் அபிப்பிராயமாகவும் கருத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்

 குடும்ப அமைப்பு குறித்த ஒரு அத்தியாயமமும் - குடும்ப மிருகம் என்னும் இந்த சொல்லும் தான் என்னை அலைக்கழிக்கிறது - காரல் மார்க்ஸ் பற்றிய  ஒரு சிறிய கருத்து உண்டு 


ஒரு கருதுகோளை நிரூபிக்க வேண்டி , கருதுகோள் சாரம் மட்டுமே உதவாது என்று தேவைவையற்ற கணக்கைப் (மாதிரி)  போட்டு - இன்று அதன் நீட்சியாக உலகம் முழுவதும் முதலாளிகள் தொடங்கி தொழிலாளி வரை கணக்கு போட்டுக் கொண்டு எவ்வளவு பெரிய விஷயத்தையும் ஒரு எண்ணாக சுருக்கவல்ல பயணம் மார்க்ஸ் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது எனக் கருத வாய்ப்புள்ளதாக மேற்படி சுட்டியில்  முன்னாள் கிரேக்க நிதிஅமைச்சர் குறிப்பிடுகிறார் 
தங்கள் நாவலில் வரும் முப்பது லட்சமும் , குடும்ப கணக்கு வழக்குகளும் , விமர்சன பகுப்பாயும் தொனியும்  - மிகை கற்பனையாலும் பயத்தாலும் பொறுப்பின்மையாலும் ஏற்படும் எண்ணங்களை குடும்ப வன்முறையாக ஒரு எண்ணிக்கையாக நம்மை நாமே ஒரு பொருளாதார மண்டலமாக , கண்டடைந்த தெளிவாக , கால மாற்றமாக சுருக்குவது அபாயகரமானது . கால மாற்றம் தந்த நெருக்கடி என்று நீங்கள் பொத்தாம் பொதுவாக கூறுவது எதை ? விளிம்பில் இருப்பவன் குறித்தப் பதிவு என்றால், வெறுப்பின் வேர் பிடித்து இந்த நாவல் வளர வேண்டிய அவசியம் தான் என்ன ? இத்தனை பகுப்பாயும் தோரணை எதற்கு ? விளிம்பில் உள்ளவனிடன் எப்படி இத்தனை கூர்மை ?  இத்தனை தர்க்கம் ? இத்தனை தெளிவு - இந்தத் தெளிவே ஒரு குறை. 

உலகம் முழுவதிலும் தனி மனிதனுக்கு கொம்பு சீவி விடப் படுகிறது - தனி மனித சுதந்திரம் என்னும் லட்சியத்திற்கு எவ்வளவு நெகிழ்ந்தும் குடும்ப அமைப்பும்  குறைந்தது இன்னொருவராவது   இடறலாக இருக்கிறார். குடும்ப அமைப்புக்கு மாற்றான அமைப்பு சித்தாந்த அளவில் கூட நிறுவப்பட வில்லை  - இப்படி இருக்க, சமூக அவலங்களை எதிர் கொள்ள திராணியற்ற  குடும்ப அமைப்பின் கையாலாகாத்தனத்தை கேள்வி கேட்க முழு சாத்தியங்களும் இருக்க, தங்கள் எதிர் சாத்தியங்கள் வெறும் எண்ணிக்கையாகி போனது  சரியா என்று தெரியவில்லை - குடும்ப அமைப்பின் சாதகமான அம்சங்கள் குறித்து மௌனம் காத்து லாகவமாக கடந்து செல்கிறீர்கள்.  ஒரு மனிதனை விளிம்பின் எல்லையில் தாங்கி நிற்கவல்ல ஆன்மீகமும்  ஆப்சென்ட். ஒரு திருநீற்று கீற்று செய்யக் கூடியதை அறியாதவர் இல்லையே நீங்கள். 

முன் பின் செல்லும் வடிவம் சவாலாகவும்  - அடுத்தடுத்து வரும் கதாப்பத்திரங்கள் அறிமுகமும் முடிவும் என்று நின்று விடுவது ஒரு நிறைவின்மையையம் ஏற்படுத்துகின்றன.

தங்கள் இருமையின் விஸ்தரிப்பு கவர்கிறது - வல்லான் -வீணன், ஒதுங்கி நிற்பவன் -ஒன்றிவிடுபவன், உண்மையும்-பாவனையும், அனுமதிக்கப் பட்டதும் -அனுமதிக்கப் படாததும் இருமை வகைப்பாடுகள்  சற்றே கடுமையானதாக இருக்கின்றன - இந்த பகுப்பாயும் தோரணை நாவலின் பலவீனம் என்றே எண்ணுகிறேன், வாசகனும் விமர்சகனும் செய்திருக்க வேண்டியது - விமர்சன தொனியும் பகுப்பாயும் தொனியும் தங்கள் சொல்ல வந்ததை மேலதிகமாக புரிந்து கொள்ள உதவுகிறது, அதே நேரத்தில் சக்கையாக்கப்பட்ட உணர்ச்சி நடையில்  எந்த கதாபாத்திரத்துடனும் ஒன்ற முடியாது போகிறது. 

இறுதியாக நீங்கள் யாரை வாஞ்சையுடன் நோக்குகிறீர்கள் ? ஆற்றலற்ற கூட்டத்தையா ? யாரை வியக்குகிறீர்கள் ? லகர வாதிகளை யா ? கழிவிரக்கத்தை முன்னும் சாதியை பின்னும் வைக்கும் தெளிவையா ? யார் யாருக்கு அருள வேண்டும் ? எதற்கு இந்த இறைஞ்சல் ? நீங்கள் அள்ளியதும் ஒரு குடம் தானே இந்த வரலாற்று சமுத்திரத்தில் ? நாம், நாம் நினைக்கும் அளவுக்கு நல்லவர்களாக இல்லாது இருக்க வாய்ப்புண்டு ஆனால் நல்லத்தனம் எல்லாமே பாவனை அல்லவே - கழிவிரக்கம் பெருங்காதலாக பேரன்பாக மாறும் "மஞ்சள் வெயில்" நீங்கள் வாசித்திருக்கக் கூடும்.

தங்கள் அடுத்தப் படைப்புகளை ஆவலுடன் எதிர் நோக்கும் 

அன்புடன்
மணிகண்டன் 

அன்புள்ள மணிகண்டன் அவர்களுக்கு 

வணக்கம். தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். ஆறு நாட்களாக உங்கள் கடிதத்தை மீண்டும் மீண்டும் நினைவு மீட்டு பதில் எழுத நினைத்து தயங்கி பின் தொடங்கி பின் அழித்து என்றே நாட்கள் சென்று விட்டன. ஏறக்குறைய அந்த நாவல் எழுதியபோது நான் இருந்த மனநிலையை புரிந்து கொண்டுவிட்டீர்கள். உங்களது கேள்விகள்(குறிப்பாக நீங்கள் யாரை வாஞ்சையுடன் நோக்குகிறீர்கள்? என்ற கேள்வி) அனைத்திலும் உண்மையான சீற்றத்தை நான் உணர்கிறேன். ஆனால் அக்கேள்விகளை எதிர்கொள்ளும் தெளிவும் தீர்க்கமும் எனக்கிருப்பதாக நான் நம்பவில்லை. ஆம் ஆழமாக கற்கவில்லை என்றாலும் சூழல் காரணமாக என்னிடம் மார்க்ஸிய தாக்கம் உண்டு. அது ஒளிர்நிழலில் வெளிப்படவும் செய்திருக்கிறது என்பதை உணர்கிறேன். குடும்ப அமைப்புக்கு மாற்றென இந்த நாவல் எதையும் முன்வைக்கவில்லை. உணர்வுகளின் நிலையின்மை என்பது பெரும்பாலும் நீதியின்மை தான். தஸ்தாவெய்ஸ்கி தன் பாத்திரங்களை கொதிப்பவர்களாகவே கட்டமைத்திருப்பார். தங்களுக்குள் நீதி இல்லை என்பதை உணர மறுக்கும் அளவுக்கு அவர்கள் கொதிப்பானவர்கள். தங்களை சற்று "வெளியே" சென்று பார்த்து நிற்கும் நிதானம் இல்லாதவர்கள். இந்த கொதிப்பையும் நிலையின்மையையும் உணர்ச்சிகரமான சூழல் தான் அமைக்கிறது. குடும்பம் அத்தகைய உணர்ச்சிகளால் கட்டப்பட்ட அமைப்பு. நன்மை தீமைக்குள் நான் செல்லவில்லை. குடும்பத்தை உணர்வுப்பொதி என்று மட்டுமே சொல்கிறேன். இங்கு பேசப்படும் அத்தனை முன்னெடுப்புகளும் குடும்பம் என்ற அமைப்புக்கு வெளியேதான் நிற்கின்றன. ஆகவே அவை அனைத்திலும் ஒரு போலித்தனத்தை இயல்பாகவே நான் உணர்கிறேன். இதுதான் குடும்பத்தை பொருளியல் ரீதியாக வரையறுப்பது குறித்து என்னை எண்ண வைத்தது. அதேநேரம் அந்த அத்தியாயம் அவ்வளவு இறுக்கமானதாக இருப்பதற்கான காரணம் அது சக்தியால் எழுதப்படுகிறது என்பதே. 

தான் நம்பியவற்றை இரக்கமில்லாமல் தன் குடும்பத்தில் செயல்படுத்திய ஒரு மனிதரை எனக்குத் தெரியும். காந்தி. அங்கிருந்து தான் நான் இந்த எண்ணத்தை வந்தடைகிறேன். சுதந்திரம்  சமத்துவம் என வாசல் வரை வந்து நிற்கும் கொள்கைகளை வீட்டுக்குள் அனுமதித்துவிட நாம் தயாரா என்பதே என் கேள்வி. என்னைப் பொறுத்தவரை மனிதன் நல்லவனோ கெட்டவனோ கிடையாது. அவனால் புரிந்து கொள்ள முடியாதவற்றால் அலைகழிக்கப்படும் எளிய மிக எளிய உயிர். நான் இதைத்தான் நம்புகிறேன். இங்கிருந்து தான் மனிதனின் அத்தனை சிந்தனைகளையும் புரிந்து கொள்ள முயல்கிறேன். நீதியுணர்ச்சி அன்பென்று நாம் வகுத்து வைத்திருப்பவற்றுக்கு எதிரானது. நீதியுணர்ச்சி தன்னையே சிதைத்துக் கொள்ள நினைக்கும் வாள். அன்புணர்ச்சி (அப்படி வகுக்கப்பட்டது) தன்னைப்பற்றி மட்டுமே சிந்திக்கச் சொல்லும் ஒப்பனைப் பெட்டி. அந்த ஒப்பனைப் பெட்டியில் இந்த வாளை வைக்க முயல்வது அந்த நாவலை எழுதியபோது என் நோக்கமாக இருந்திருக்கலாம். அன்பு வெறுப்பால் நிகர் செய்யப்பட்டிருக்கும். நீங்கள் நம்பாமல் இருக்கலாம். இது என் கண்டடைதல். 

என் சிந்தனையில் "நேற்றிருந்த" நல்ல சமூகத்தை நோக்கிப் போகும் ஏக்கம் கிடையாது. சமூகத்தில் அன்பு குறைந்துவிட்டது குற்றம் பெருகிவிட்டது என்றெல்லாம் பொதுவாக என்னால் நம்ப முடியாது. காலம் மாறவேயில்லையா? நம் வசதிகள் பெருகவில்லையா? நேற்று போலவா இன்றும் இருக்கிறோம்?மக்கள் தொகை பெருக்கமும் குறையும் வளங்களும் நம்மை வீழ்த்தியிருந்தால் அது இயல்பானது. ஆனால் நேற்றைவிட நல்ல உணவை நான் உண்கிறேன். நேற்றைவிட வசதியாக இருக்கிறேன். இந்த முரண் தான் என்னை வதைக்கிறது. நேற்றின் வாழ்க்கை இன்று இல்லாதபோது இன்றின் அறம் துளிகூட இரக்கமற்றதாகவே இருக்கும் என நம்புகிறேன். இன்றின் வசதிகளை அனுபவித்துக் கொண்டே நேற்றின் நியாயங்களைப் பேசுவதன் முரணை என்னால் ஏற்க முடியவில்லை. ஆம் நான் தொடர்ச்சியாக பாதிக்கப்படும் துன்புறும் எளியவன். கணக்குகளற்ற "நோக்கமற்ற" மேன்மை வெளிப்படும் அளவுக்கு மனிதன் உத்தமன் என நம்பமுடியாதவன். 

அமைப்பு பெரிதாகும் போது அது திடமான விதிகளின் அடிப்படையில் செயல்பட்டாக வேண்டும். அந்த விதிகள் தான் அமைப்பை நீடித்திருக்க செய்கின்றன. அப்படி இருக்கும் போது அடிப்படை "அமைப்பான" குடும்பம் மட்டும் ஐடியல் ஆனதாக இருக்க வேண்டுமா? சொத்து தகராறு வழக்குகள் நம் நீதிமன்றங்களில் இல்லையா? நான் கோருவது எளிய விஸ்தரிப்பு மட்டுமே. அது இன்னும் நீதி நோக்கியதே. அது அன்புக்கு எதிரானது என்றாலும் அப்படியே இருக்கட்டும். இன்று நம்முடைய  ஒவ்வொரு நாள் வாழ்விலும் "பெருஞ்சமூகத்தின்" பங்களிப்பு அதிகரித்தபடியே இருக்கிறது. அப்படியிருக்க பெருஞ்சமூக விதிகளை குடும்பமும் ஏற்க வேண்டும். அது "நேற்றிலேயே" நின்று கொண்டிருக்க முடியாது. 

என்னால் என் பதிலை சரியாக தொகுத்து முன் வைக்க முடியவில்லை. முழு அறிவின்மையாகக்கூட இது இருக்கலாம். ஆனால் இதைத்தான் நான் உணர்கிறேன். உங்கள் கடிதம் என் எழுத்திற்கு மிக அணுக்கமானதாக இருந்ததால் நான் தெளிவடையாத விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 

தொடர்பில் இருக்கிறேன். 

நன்றி 

அன்புடன் 

சுரேஷ் 

No comments: