Tuesday, July 27, 2021

ஒன்பது குன்று

 



ஆசிரியர் அவர்களின் மலரும் நினைவுகளாக அமைந்திருக்கும் இந்த கதைகட்டுரைகள்  நூல்,  நழுவிக் கொண்டே இருக்கும் விழுமியங்கள் குறித்து அசை போட , குறிப்பாக இந்நூலை வாசிக்கும் இளம் மற்றும் மத்திம வயதினரின் மனதில் லட்சிய வைராக்கியத்தை விதைக்க கூடிய ஒரு நேர்மறை கையேடு. இந்த கதை மனிதர்களுக்கு  அவர் தம் வாழ்வில் வென்று எடுக்க புதிய பொருளோ புதிய நிலங்களோ இல்லை, தாமே கனிந்த அந்த ஒரு கனம் முதல் மனதில் சூல் கொண்ட அந்த வைராக்கிய சுடரை துணை நிறுத்தி பகிர முடியாத ஞானத்துடன் செயல் யோகத்தில் அமர்ந்து விட்டவர்கள், அவர்கள் சுட்டவது எல்லாம் செயலயே , சமுதாயத்தால் வெற்றி அல்லது சாதனை என்று அறுதியிட்டு கூறும் தளங்கள் அல்ல இவர்கள் இயங்குமிடங்கள், தினசரி வாழ்வின் தளத்திலேயே இவர்கள் செயல் யோகம் அமைந்திருக்கிறது , காலத்தின் ஞானம் உணர்ந்து சமுதாய பெரும்போக்கிற்கு இணையான நேர்மறையான ஒரு எதிர்வினை இவர்கள் வாழ்வு , கால மாற்றங்களை தாண்டி நம்மை அழைத்து செல்லும் பகிர முடியாத ஞான சுடரை அணையாது தங்கள் வாழ்வையே செய்தியாக்கிய மாமனிதனின் தடம் பற்றிய வைராக்கிய மனிதர்கள் குறித்த கதைகட்டுரைகள் இந்நூல், எழுத்தாளர் பாவண்ணன் அவர்களுக்கு நன்றி 

Saturday, July 17, 2021

Kasaba - Nuri Bilge Ceylan

 


அலைந்து திரிந்து அயர ஒரு ஊர்,

அயர்ந்து தெளிந்து சொல்ல கதைகள், 

அருகில் அமர்ந்து கேட்க குடும்பம்,

நாளை அசை போடும் தீஜ்வாலைகள், 


இருப்பதியோரம் நூற்றாண்டு நுழைவாயில் அமைந்த 

ஒரு பின்னிரவுக் கவிதை

#Kasaba #NuriBilgeCeylan

Wednesday, July 07, 2021

வேரும் விழுதும் - க சுப்ரமணியன்

வேரும் விழுதும் - க சுப்ரமணியன் 

ஒரு அணை உருவாகும் பின்புலத்தில் எழுதப்பட்டுள்ள நாவல், முதல் பதிப்பு 1970 ல் வைத்திருக்கிறது, திஜா அவர்களின் கவனம்,  சிட்டி வழி ,  வாசகர் வட்டம் வெளியிட்டுள்ளது, தற்போது சிறுவாணி வாசகர் மையம்  சார்பில் 2021 ல் மறு பதிப்பு. நல்ல நாவலை மீள் மறுபதிப்பு செய்ததற்கு  நன்றிகள் 

தனி மனிதன் - நாயகன் 

ஒரு நவீன மனிதன் தனிமையின் பிரதிநிதி , நவீனத்தின் நுழைவாயிலிலேயே தனிமை அவனை வரவேற்கிறது, நம் நகரகங்கள் இவ்வித தனிமைகளின் மலர்,  கிராம தேனீக்கள் மீண்டும் மீண்டும் வந்தமர்ந்து மீள முடியாத  பெரியதொரு சமுத்திர மலர் , நாவலின் நாயகன் அவ்வாறான ஒரு நகரத்தில் வந்தமர்ந்தவன் , நகரத்தின் கடிகாரத்தையும் அதன் எந்திரத்தனத்தையும் உணர்ந்து கொண்டவன், கிராமம் குறித்த பெரிய கனவுகள் இல்லாதவன். நாயகன் கதாபாத்திரம் எழுத்துப்பட்டுள்ள விதம் -  அனைத்து நிகழ்வுகளையும் அதன் போக்கில் நடைபெறுகையில் மௌன சாட்சியாக கடமைக்கும் குற்றஉணர்வுக்கும் கேள்விகளுக்கும் இடையே பெரிய அளவில்  எதையும் மாற்ற முயலாத ஒரு மௌடீகம் அமையப்பெற்றவன், ஒரு நவீன தனியன் சாத்வீகன் கடமையை செய்யக்கூடிய சரி தவறு குறித்து மனதளவில் அலட்டிக்கொண்டு , செயலளவில் கண் முன்னே அமைந்த காரியத்தை முடிக்கும் சமர்த்தன், நாவலின் ஏனைய கதாபாத்திரங்களை இணைத்து  அவர்கள் வாத பிரதிவாதங்களை கேட்டு "ம்" போடும் தத்துவவாதி, அவன் நாம் கதாப்பாத்திரங்களை காண ஒரு கேமரா ஆகவே இருக்கின்றான், இவ்வாறாயின் நவீன மனிதன் என்கிற விஷயத்தின் மீதே ஒரு அதிர்ச்சி தோன்றுகிறது, அவன் காணாமல் போகக் கூடியவன், பார்த்துக்கொண்டே கேட்டுக்கொண்டே இயங்கிக்கொண்டே இருந்தாலும் பார்வையின்மை என்னும் மிகப்பெரிய குழி அவனுக்காக காத்திருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது , தனியன் என்பதால் எளிதில் வேறொருவன் அவனுக்கு பதிலாக அவனை போன்ற ஒரு மாற்றாக வருவதற்கான அத்தனை சாத்தியதையும் அவனே உருவாக்கிக் கொள்பவன் 

வாத பிரதி வாதங்கள் - பார்வைக்கோணம் - பெரியப்பா - டாக்டர் - அறம்வளர்த்தான் 

நாவலின் வீச்சு பெரியப்பா டாக்டர் அறம் வளர்த்தான் என்ற கதாபாத்திரங்கள் வழி பல்வேறு எல்லைகளில் வாசகனின் பார்வையை சீண்டியபடியே வருகின்றனர், அறிவின் எல்லையை, மனோதிடத்தின் எல்லையை, மண் மீதான பிடிப்பின் எல்லையை, வளர்ச்சியின் எல்லையை பக்தியின் எல்லையை  வாத பிரதி வாதங்கள் வழி வாசகன் உணர்கிறான், பழமைக்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன ? தேங்கி போன பழைய விஷயங்கள் என்று சொல்லப்படுபவை அறிவுக்கு ஒவ்வாதவையா ? நடைமுறைக்கு சரியாக வரும் சட்டங்கள் தர்மப்படி சரியானதா ? உணர்ச்சி வேகத்திற்கும் அறிவிற்கும் சம்பந்தம் இருக்கிறதா ? அறிவு எப்போதுமே வளர்ச்சியை மட்டும் தான் கொண்டு வருகிறதா ? இவை அனைத்தையும் நாயகன் வழி நாமும் அசைபோடுகிறோம், நாயகன் அனைத்திற்கும் ஒரு பார்வையாளனாகவே இருக்கின்றான் மௌனத்தையே பதிலாக வைத்திருக்கிறான் 

நாவலின் நடை - உத்தி 

நாவல் விறு விறுப்பான சுவாரஸ்யமான வாசிப்பாகவே அமைந்தது, சற்றே துள்ளும் நடையில் அடுத்த அடுத்த விஷயங்களுக்கு தாவித்தாவி செல்லும் பாங்கு, " அந்நியன் மற்றும் "பிளேக் " நாவல் ஆசிரியரை மிகவும் கவர்ந்ததாக சொல்கிறார் - அதன் பாதிப்பு நாயகன் பாத்திர படைப்பிலும் தாவித்தாவி செல்லும் நடையை அமைக்க ஏதுவாக உள்ள ஒரு வித "சுருங்கச் சொல்லி விலகும்" தொனியும் அடிப்படையாக அமைந்திருக்கிறது, சில இடங்களில் "லாசரா " அவர்களை நினைவூட்டும் தொனி, நகரத்தை வளர்ச்சியை ரசிக்கத் துவங்கி இருக்கும் மனிதன் நிறைய கேள்விகளுக்கு அளிக்கும் பதில் "......." , இந்த "......."  நாவலில் அநேக இடங்களில் வருகிறது. ஒரு வகையில் நாவலின் பாவம் /தொனி  மௌனமே, புதிய அணையின் மீது நின்று நாயகன் தனது கிராமத்தை நோக்குகையில் அவன் காண்பது தான் என்ன ? 

Tuesday, July 06, 2021

மர்ம காரியம் - போகன் சங்கர்

 

    குறுங்கதைகளின் கோலாட்டம் 



Monday, June 21, 2021

பாலை நிலப் பயணம் - செல்வேந்திரன்

கானுயிர், தொல் சின்னங்கள், நிலக்காட்சி, வழிப்பாட்டுத் தலங்கள்,  வரலாற்று தகவல் கள், ஊர் பெயர்கள், குடும்ப பெயர்கள் என ஒட்டுமொத்த அடையாளங்களையும் தெரிந்துக் கொள்ள, நிறைவான வாசிப்பு 

Saturday, June 19, 2021

கூந்தப்பனை- சு வேணுகோபால்

 

2001 ல் வெளிவந்த சிறுகதைத் தொகுப்பு, நான்கு சிறுகதைகளையும் இணைத்து என் எண்ணங்களை தொகுத்துக் கொள்ள முயன்றிருக்கிறேன், "கண்ணிகள்" சிறுகதை நான்கு கதைகளுக்கான பொதுவான பின்புலத்தை குறிக்க - "வேதாளம் ஒளிந்திருக்கும்" கதை ஆண்-பெண் டவுன்-கிராமம் இடையேயான இடைவெளி மற்றும் அலைச்சல் குறித்த வாசல்கள் திறக்க, அந்த சிறிய டவுனில் புதிய பொருட்களுக்கும் பொருள்வயின் பிரிவும் ஏற்படுத்தும் பொருந்தாத விளைவுகள் குறித்த "அபாயச் சங்காக" மூன்றாவது கதை, அனைத்தையும் உள்வாங்கி நகரமயமாக்கம் தன்னகத்தே கொண்டுள்ள மலட்டுத்தனத்தை எதிர்கொள்ளக் கூடிய தரிசனத்தை அளிக்கும் தொகுப்பின் சிறந்தக் கதையான கூந்தப்பனை.


ஆண் பெண் உறவுகள் குறித்த நிகழ்வுகளே மூன்றில் நான்கு கதைகளுக்கான அடிப்படையாக அமைந்துள்ளன, கதையின் முடிச்சுகள் வலுவானதாக இருந்தும் அவற்றை வெறும் அதிர்ச்சி மதிப்பீட்டிற்காகவும் பாலுணர்வு சார்ந்த அவதானிப்புகளாக மட்டும் காணாது "என்றுமுள்ள ஒன்றின் புதிய அர்த்தமாகக் கருதி, புதிதாக வந்தடைந்துள்ள காலத்தை அந்த அடிப்படை உணர்வுகளின் திரிபுகள்  கொண்டு விளக்குவதையே உட்பிரதியாக வாசிக்க வாய்ப்பிருக்கிறது. 


உடலுழைப்பை பெரிதாக கோராத புதிய பயிர்களின் வருகையால் உருமாறிக் கொண்டே இருக்கும் கிராமம் , புதிய பொருட்களின் வருகையால் உருமாறும் சிறிய டவுண்கள், மேலும் பணம் மேலும் ஆசை என்ற சின்னஞ்சிறு வருகைகள் ஏற்படுத்தும் விவசாயம் Vs பட்டப்படிப்பு என்னும் இருமை நகரமயமாக்கலுக்கு தீனி போட்டபடி இருக்கும் காலகட்டத்தை படம் பிடித்துக்காட்டும் கதைகள் இவை.


தனிமையின் சிக்கலை ஊதிப் பெரிதாக்கி விடை தெரியாது மௌனத்தில் ஆழ முயலும் நவீன நகர போக்கின் எதிரில் மைசூர்பாக் கேட்டு அழும் சிறுவனின் முதுகில் பதிந்த அன்னையின் விரல்கள் காலம் நமக்கு அளித்துள்ள மூதுரை. சிறிய பயணமோ சரியான சொல்லோ கடந்து செல்லுதலோ ,  எப்போதும் நம்மை மீட்டுக் கொண்டே இருக்கிறது. அனைத்திலும் ஒன்றையே காண அனைத்து ஜீவன்களும் ஒன்றின் இன்னொன்று என உணர்கையில் தனிமையும் குற்றஉணர்வும் என்ன செய்து விட முடியும்.

Tuesday, June 15, 2021

வேள்வித்தீ - எம்.வி வெங்கட்ராம்


வேள்வித்தீ எதன் சாட்சியாக இருக்கிறது ? ஸ்தூலமில்லாத விழுமியங்கள் சாட்சியாகவா? அவ்விழுமியங்களை கட்டிக் காக்க போராடும் மனிதர்களின் அகத்தின் நிழலாகவா? இந்த வேள்வித்தீயின் நாக்குகள் எதை நோக்கி நீண்டு செல்கின்றன ? வழி தவறுபவனை சுட்டுரைக்கவோ ? இடித்துக் கூறி வழி நடத்தவோ ? எல்லைகளை வெல்ல முடியாதவனின் கடைசி புகலிடமோ இந்த வேள்வித்தீ ?


குறிப்பிட்ட வயது கடந்த பின்னர் நமக்கும் பணத்துக்கும் ஒரு மானசீக விளையாட்டு துவங்குகிறது, கவனித்து பார்க்கையில் பிகு செய்து அலட்சியம் செய்கையில் முன்னின்று வந்து ஒரு நியாயமான விளையாட்டாக தொடரும் , இதன் நடுவே தேவைக்காக பணம் பணத்துக்கான தேவை என்கிற தான்தோன்றி விளையாட்டும் நம்மை முடிந்தவரை ஆட வைக்கும், இவ்வாட்டத்தின் விதிமுறைகள் படி நாவல் நாயகன் கண்ணன் கடமை, நேர்மை, விசுவாசம், மானம், உழைப்பு முதலிய   விழுமியங்களுடன் தனது விளையாட்டை விளையாடுகிறான், நம் அனைவரையும் போலவே முழு தொழிலாளியாகவும் முடியாது முழு முதலாளியாகவும் முடியாத திரிசங்கு தளத்தில் தனது ஆட்டத்தை நடத்துகிறான் கண்ணன். 


இந்த ஆட்டத்தின் விதியை மாற்ற விழுமியங்களை உரசிப் பார்க்க காலம் என்னும் எதிராளி காய் நகர்த்துகிறான், கண்ணனின் பதில் ஆட்டங்கள்  விதிகளுக்கு உட்பட்டு தானா ? சங்கமிக்கும் கடலில் கலக்கையில் சாக்கடையும் நன்னீரும் ஒன்று போல் தோன்றினாலும் அவை ஒன்றாகுமா? கண்ணனின் குரலில் ஒன்று முடிந்து இன்னொன்று துவங்குகிறதே என்று கேவுகையில் வாசகன் தனக்கான விடையை அறியலாம். வேறொரு தளத்தில் கண்ணன் அடைந்த்திருக்கும் திரிசங்கு நிலையே விழுமியங்கள் குறித்த நமது பார்வையை விஸ்தரிக்க வல்லது. முதலாளி தொழிலாளி இடையே நடக்கும் பேரத்தின் நடுப்புள்ளியைப் போல் தனி ஒருவன் கைக்கொள்ள விழுமிய வேள்வித்தீ சங்கல்பங்களில்  ஏதெனும் உண்டோ ?


சிறிய வழு அல்லது சந்தர்ப்ப சறுக்கல் என்ற உத்தியை தவிர்த்ததன் மூலமும் மேலதிகமாக நம் விழுமியங்களை சோதிக்க இயங்கிக் கொண்டிருக்கும் ஏதோ ஒரு விசை குறித்த அவதானிப்பாகவே இந்த தேர்வைப் புரிந்து கொள்ள முடிகிறது


இவை தவிர நெசவாளர் குடும்பங்களின் பொருளாதார சூழல், குடும்ப வழக்கங்கள் குறித்தும் , 1970 களின் அரசியல் கட்சிகள் குறித்த நுண்பகடிகளும் , நடுத்தர குடும்ப  நிகழ்வுகளின் மென் தருணங்கள் என விரிகிறது நாவல். 


புறமும் அகமும் சரிந்துக் கொண்டே முழுகிக்கொண்டே சென்றாலும் எங்கிருந்தோ முளைக்கும் சமாதானமும் வைராக்கியமும்,  மனிதனால் தாங்க முடியாத ஒன்று என்கிற விஷயம் இல்லவே இல்லை, விதியின் அத்தனை கேள்விகளுக்கும் பதிலாக தன்னையே அளிக்கும் மனிதனை தீண்டிப் பார்க்கும் வேள்வித்தீ.

Sunday, June 13, 2021

கங்காபுரம் - அ வெண்ணிலா

ராஜேந்திர சோழனின் அகமும் புறமும் பற்றி காலப்பயணமாகவும் நிகழ்வுகளின் தொகுப்பாகவும், சோழ சாம்ராஜ்யத்தின் வெற்றி முரசாகவும்  அமைந்து வந்திருக்கும் நூல் கங்காபுரம்


பொன்னியின் செல்வனும் உடையாரும் வாசித்திராத எனக்கு நிறைவான வாசிப்பாகவே அமைந்தது கங்காபுரம், மதுராந்தகன் என்று அழைக்கப்படும் ராஜேந்திரன் தனது தந்தை ராஜராஜனின் போர் வெற்றிகளுக்கு முக்கியமான காரணமாக இருந்தவன், அவனது காலகட்டத்தின் சோழ சாம்ராஜயத்தின் வெற்றிகள், போர் முறைகள், ஆட்சி நிர்வாக அணுகுமுறைகள், கோவில் நிர்வாக அணுகுமுறை, ராஜேந்திரனின் தனிப்பட்ட மனநிலை , அவன் ஆளுமை குறித்த குறிப்புகள் என விரிகிறது கங்காபுரம். 


ராஜராஜன் காலத்தில் சோழ சாம்ராஜ்யம் அடைந்த புகழ்களின் வெற்றிகளின் உச்சம் , வீழ்ச்சி குறித்த தவிர்க்க இயலாத அச்ச உணர்வை நிழலாக பிடித்து வாசகன் நாவலை வாசிக்க துவங்குகிறான். இந்த நிழலிலேயே  துர்சமிக்ஞைகள் தொடர சோழ சாம்ராஜயத்தின் வெற்றி முரசு தொடர்ந்தபடி இருக்கிறது, நாவலின் இறுதியை அடைகையில் அரசன்-இறைவன்  என்கிற இருமை அழியும் தருணமதில் , ராஜேந்திரன் - சோழப்பேரரசன் என்கிற வேற்றுமையை உணர்ந்த ராஜேந்திரன் என்கிற ஆளுமையை நாம் அறிகிறோம், 


ஒரு மார்க்க்சிய முற்போக்கு பிடிப்புகுரிய விவரிப்புகள் , வரலாற்று ஆசிரியரின் கவனம் பெற்ற உப வராலற்று நிகழ்வு தொகுப்புகள் என புனைவு தாண்டிய எல்லைகளை தொட்டாலும் அதையும் தாண்டி நாவலை அர்த்தமுள்ள வாசிப்பாக்குவது ராஜேந்திரனின் ஆளுமை குறித்த ஆசிரியரின் பார்வையே, மத்தவிலாசம் ஹாஸ்ய இணைப்பு அபாரம் ,ஆதித்தியன் தில்லையழகி கதை மனதை தொடுவதாக அமைந்தது. ஒரு கலைஞனின் பார்வையில் சோழ சாம்ராஜ்யத்தின் இரு மாபெரும் அரசர்கள் அவர்களின் தனிப்பட்ட நெறி காரணமாக  விளக்காகவும் அகலாகவும் அமைந்து நூற்றாண்டுகள் தாண்டியும் மனதில் நீங்காத ஒளியை ஏற்படுத்துகின்றனர்.

Saturday, May 15, 2021

Nomadland

 





Nomadland


With Handful of Memories Dear

I can get past this day

Move past Seasons

To cherish a Lifetime

Grieve an inevitable Separation

To Meet you again down the road

To Unite back as One


To Drink the nectar of Solitude

Sit around the Fire and Talk about you

We get past Today Seasons and Life

Continuing Our Journey to Eternity 


We Grovelled the Earth Dear 

Looking down to build all we want 

A Roof Above, Walls to Hide and Seek A Carton Box which is yet to arrive

Only to miss The Show

Going on above Since.

Sunday, April 25, 2021

ராஜவனம் - ராம் தங்கம்

 முதல் பகுதியின் அட்டகாசமான வரிக்கு வரியான சுவாரஸ்யம் எப்படி நாவல் நெடுக நீளும் என்று எண்ண வைத்த எழுத்து, அவ்வாறு நீளவில்லை எனினும் விரைவில் வரும் படைப்புகளில்  இவை மிளிரும் என்ற நம்பிக்கை விதைத்து அத்தனை அழகுடன் துளிர்த்திருக்கிறது ராஜவனம் 


அழகியல் சார்ந்து நாவலின் தொனியில் உள்ள மூன்று வெவ்வேறு கூறுகள் குறித்து; நாவலில் வரும் கானுயிர் வரிசை கண்டு பூரித்து வரும் சூழலியல் ஆர்வலர்கள் காட்டும் வழி, வனம் சூப்பர் மார்க்கெட்டில் கிடைப்பதை மூர்க்கத்துடன் அள்ளிப் போடும் தினசரி நிகழ்வாக சூறையாடலை

பதியும் நாளிதழ் வழி, தினசரி கொடுக்கல் வாங்கல் வழிமுறைகளையும் உபயோக பொருட்களின் வரிசைகளையும் சிரமேற்கொண்டு பதியும் புறமார்க்சியம் காட்டும் வழி, இவ்வழிகள் அறிந்தே அதனை தவிர்த்து ஒரு இலக்கிய ஆசிரியன் தனது ராஜபாட்டையில் நடக்கத் துவங்குகிறான், அந்த வழியில் மேற்சொன்ன மூன்று வழிகள் குறித்த அக்கறை இருந்தாலும் இவ்வனைத்தையும் உள்ளடக்கிய ஒரு சமகால உண்மை குறித்த தரிசனத்தையோ தனிப்பட்ட அனுபவத்தின் குரலையோ சாகசத்தையோ முன் வைப்பதில் ஆர்வம் கொண்டவனாக இருப்பான். கோபால் ஆன்றோ ராஜேஷ் மேற்கொண்ட சாகசம் ஒரு முடிவில்லாத பயணமாக நீண்டு கொண்டே இருக்க வேண்டும் என்பதே ஒரு இலக்கிய வாசகனாக எனது விருப்பம்.

மேலதிகமாக இயற்கை வழிபாட்டு முறையை முற்றிலும் கைவிட்ட சமூகங்களின் மதிப்பீடுகளுக்கும் இன்றைய தனி மனிதனின் ஸ்தூலமில்லாத வெற்றி களிப்பிற்கும் தோல்வியின் தனிமைக்கும் சிறிதளவு சம்பந்தம் இருக்கக் கூடும். 


Thursday, April 08, 2021

சேவாசதனம்-பிரேம்சந்த்

 

நூறாண்டுக்கு முன்னர் காசி பட்டணத்தில், கங்கை நதிக்கரையில் நடந்த கதை, ஒருவர் மாற்றி ஒருவர் என கதை மாந்தர்கள் செய்யும் தவறுகளினின் சரிவில் செல்லும் கதை அவர்கள் அனைவரின் மீட்சியின் பாதையில் வாசகனுக்கு கால பிரவாகத்தின் நுண்ணிய நெளிவு சுழிவுகளை அர்த்த அனர்த்தங்களை பழைய புதுமைகளை கூறியபடி செல்கிறது பிரேம்சந்த் அவர்களின் சேவாசதனம் என்னும் இந்தப் புதினம்.

கிருஷ்ண சர்மாவின் முதல் தடுமாற்றம் குடும்பத்தை கைவிட , உமாபதி சர்மாவின் அசிரத்தை ஈஸ்வர சர்மா சுமதி மணப்பொருத்தத்தில் வந்து முடிகிறது, சுமதியின் சஞ்சலம் மற்றும் ஈஸ்வர சர்மாவின் கோபம் போட்டி போடுகின்றன, விட்டல் தாஸின் புரளி பத்மநாபரின் முடிவுக்கு காரணம் , அம்முடிவே சுமதியை தவறான பாதையில் செல்ல நெருக்கடி அளித்தது, சுமதி க்ருஷ்ண சர்மா தவறுகளின் பாதிப்பு சாந்தையை வந்தடைகிறது, மோகனுக்கு இரு வாய்ப்புகள், களங்கமான சுமதியை அடைவதில் அவனுக்கு ஊர் வாய் குறித்த சிக்கல் இருக்கிறது, சாந்தையை அடைவதன் மூலம் சிறிதளவு பழையதை மீறி தன் இலக்கற்ற வாழ்விற்கு பொருள் தேடுகிறான், உமாபதிக்கு தன் கீர்த்தி பெரிது, பத்மநாபருக்கு தன் குடும்ப கடமைகள் சமூக அந்தஸ்துபெரிது, விட்டல்தாஸின் அளவான தர்ம சிந்தனை , பத்மநாபர் விட்டல்தாஸ் இருவரும் தங்கள் எல்லையை நீட்டித்து பழையனவற்றை எதிர் கொண்டு மாற்றத்தை உருவாக்க முயல்கின்றனர், உமாபதிக்கு பழையதை விட முடியவில்லை, அத்தனை கதைமாந்தர்களையும் கடந்து நாம் ஈஸ்வர சர்மா சுமதி இருவரின் முடிவுகளை சற்று ஆராய்ந்தால் நாம் இந்நாவலின் ஆன்மாவை தொட்டுவிட முடியும்.

ஒருவரது அல்லது சமூகத்தின் தவறுகளுக்கு போதாமைகளுக்கு இயலாமைக்கு காலம்தொறும் மனித சமுதாயம் கண்ட விடை, "விட்டு விலகுவதும்" ,ஊக்கம் மிகுந்த தன்னலமற்ற சேவையும்" - ஒரே நாணயத்தின் இரு பகுதிகள் இவை, விட்டு விலகுவதில் , விலகுபவனுக்கு நிம்மதி எனினும் காலத்தின் மதிப்பில் அது வெறும் தப்பியோடுதல் அதே நேரத்தில் விலகாது நான் நான் என்று செயல்பட்டுக்கொண்டே இருக்கையில் நம் ஆணவம் வளர்கிறது, விட்டு விலகி ஊக்கத்துடன் நாம் அடுத்தவருக்காக வாழத் தொடங்குகையில் நாம் ஸம்ஸார சாகரத்தில் இருந்து விலகி கலியுக வாழ்வில் மீட்சி அடைவதாக முடிக்கிறார் பிரேமசந்த்.

சிறிதளவு புரட்சி செய்து பெரும் பாலனோர் தங்கள் கணக்குகளை நேர் செய்து அமைதி அடைந்து விடுகின்றனர், புரிதல் காரணமாகவோ அல்லது வேறு வழியின்றி ஒரு சிலர் மட்டுமே சிலுவையை கால மாற்றத்தின் பாரத்தை சுமக்க நேர்கிறது, அவற்றை பார்க்கும் பெரும்பாலானோர் அதை பிராயச்சித்தம் என்றும் , விதி என்றும், மகான் என்றும் கூறி மன சமாதானம் அடைகின்றனர் , இந்த சமாதானம் இந்த நாவலுக்கும் பொருந்தும் எனினும் மனிதனின் அசாத்தியமான அற்பத்தனத்தையும் , எளிமையான மகோன்னதத்தையும் அற்புதமாக படம் பிடித்துக் காட்டும் நாவல் சேவாசதனம்

உண்மைகள் பொய்கள் கற்பனைகள்

 அரிசங்கர் எழுதி நான் வாசித்த இரண்டாவது நாவல் இது. பாரிஸ் வாசித்து முடிக்கையில் முழுமை பெறாத அதே நேரத்தில் குறிப்பிட்டு கூறும்படியான முனைப்பும் வடிவ நேர்த்தியும் பாரிஸில் இருந்ததாக தோன்றியது,  அவ்வகையில்  உண்மைகள் பொய்கள் கற்பனைகள் சற்றே அதிக காத்திரத்துடன்  தன் உணர்நிலைகளை முன் வைக்கிறது, 


பெயருக்கு ஏற்றாற் போலவே மூன்று வெவ்வேறு உணர்நிலைகளின் அவதானிப்பாகவே நாவல் நகர்கிறது, குறிப்பிட்டு சொல்லும் படியான புற நிகழ்வுகள் இல்லாத காரணத்தால் வாசகன் சற்று மெனக்கிட்டு கதை மாந்தர் தம் சூழலில் அவனை பொருத்திக் கொள்ள முயன்றால் நாவல் கூற வரும் தனி மனிதன் மற்றும் அவனது சுற்றம் பங்கு கொள்ளும் ஏராளமான உராய்வுகளை கண்டு கொள்ள முடியும். 


மூன்று உலகங்களை நிதர்சனம் லட்சியவாதம் கற்பனாவாதம் என்று தகவமைத்தால் இம்மூன்றிலும் ஒருவனுக்கு கிடைக்கப் பெறும் சமகால அனுபவம் என்ன என்று சற்று யோசித்தோமெயானால் , நிதர்சனம் மௌடிக துயரத்தையும் லட்சியவாதம் பொய்ப்பதையும் , கற்பனாவாதம் முழுமை பெற முடியாது தவித்து  உடைமையை நோக்கி நகர்வதையும் உணரலாம், 


மஞ்சள் வெயிலில் தனிப்பெரும் காதல் சிறுக சிறுக வளர்ந்து முழு மானிட அன்பின் சாத்தியமாக ஆகிறது அதே உணர்வு இந்நாவலில் உடைமையை நோக்கி நகர்கிறது, கற்பனா தளத்தில் நடப்பதெனினும் கால மாற்றத்தின் ஒரு துகள் பிரபஞ்சத்தை நாம் புரிந்து கொள்ள இந்த "உடைமை" தேர்வு உதவியாக இருக்கிறது, விட்டு விடுதலையாகி வாழ முயலும் மரபின் ஆன்மீகத்தின் சுவடே இல்லாத தன்முனைப்பின் ஆன்மீகம் மிகுந்த ஒரு சக்கையான சுரணையற்ற நகர வாழ்வை படம் பிடிக்க இந்த நாவல் முயல்கிறது, சில இடங்கள் அபாரமான குறுங்கதைகளாக அமைந்து வந்திருக்கிறது. வெள்ளைகள் நிதர்சனத்தில் மிகவும் துயருகிறார்கள், அந்த துயரங்களின் குரலாக குரலாக இருப்பதாலேயே முக்கியமான வாசிப்பாக அமைகிறது " உண்மைகள் பொய்கள் கற்பனைகள்"

Sunday, March 07, 2021

நெஞ்சம் மறப்பதில்லை - செல்வராகவன்

 முதல் மூன்று துண்டு காட்சிகளிலேயே முழு படத்தின் தோராயமான  கதையை கூறி விடுகிறார்,அந்தக் கதை எப்படி நிகழ்கிறது என்பதில் முழு ஸ்வாரசியமும் அடங்கி இருக்கிறது , கூடவே உட்பரதிகளின் தோரணமும் குறியீடுகளின் அலங்காரமும். 

ஏழை வேலைக்காரி Vs பணக்கார வீட்டுக்காரன் என்ற எளிய பழகிப்போன டெம்ப்ளேட் என அஞ்ச வைத்து மெல்ல மெல்ல அனைத்து கதவுகளையும் திறக்க மறக்க முடியாத திரை அனுபவமாக முடிகிறது நெஞ்சம் மறப்பதில்லை, 

போதும் என்ற மனம் ஒரு புறம்,தனக்கு கிடைத்தது போல் எல்லாருக்கும், அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று எண்ணும் பணக்காரன் என்று சுவாரஸ்யமான பீடிகை சட்டென போதும் என்ற தூய இதயம் தவிர்க்கப்பட ஆப்பிளை கடிக்கத் துவங்குகிறது , அத்தனை முன்னெச்சரிக்கைகள் இருந்தும் விகாரமான ஆட்டங்கள் துவங்குகின்றன, முன் சொன்ன பீடிகை உடைகிறது.

திரிந்த சொர்கத்தில் திரண்ட அமுதென வரும் ரிஷி , செவி வழி துவங்கிய பயணம் நீண்டு களைத்து உறக்கத்தில் இருந்த பாலகன் உண்மைத் தேடலின் மென் வருடலில் திருப்பள்ளியெழுச்சி. திருநீராட்டின் நீர்குமிழிகளூடே தெரிந்த அன்னை முகங்களை நெஞ்சம் மறப்பதில்லை

மீண்டும் மீண்டும் ஆப்பிளை நாடுகையில் பொய்யின் நாடகத்தை உண்மையென நம்ப வைக்கும் வலிமை ஆப்பிளுக்கு உண்டு என்று அறியும் முன்னர் மீள முடியாத உலகத்திற்கு தூய இதயங்கள் சென்றிருக்கும், அங்கிருந்து தங்கவொண்ணா துயரங்கள் இம்மண்ணில் நடக்கத் துவங்குகையில் தன் மொத்த சொரூபத்தை ஆற்றலை வெளிப்படுத்தும். 

பாடல்கள் வழி புதிய பாதைகளில் நாம் நம்மை கண்டுக் கொள்ளும் விதமாக தீமையின் கீழ்மையும் சேர்ந்து ஆடும் மென் நடன அசைவுகளை நாம் ரசிக்கத் துவங்குகையில் தீமை மற்றும் கீழ்மைகள் நம்மிடம் உள்ள மிகவும் பழகிய பழக்கங்கள் என்று நாம் கண்டு கொள்கையில் சற்றே கசப்புணர்வோம்.  இவ்விஷயத்தில் மாளிகை அருகேயுள்ள குடிசை என்னும் தேர்வு  , இரண்டும் வேறு கதைகளாக இருப்பினும் இரண்டிலும் ஒரே கதை தான் என்பதும் நமக்கு புலனாகிறது.

முடிவில் சற்றும் அரளாது நேருக்கு நேர் நாம் கேள்விகளை எதிர் கொள்கையில் நம் காலம் முடியும் நேரம் வந்திருக்கும் , பதவி அந்தஸ்து, சொத்து பரம்பரை பெருமை அரசியல் கோஷம் இத்தனையையும் நம் வாழ்வில் நிரப்பி வழித்து வைத்தாலும் என்றோ ஒரு நாள் நாம் அரளாது நேருக்கு நேர் நாம் கேள்விகளை எதிர் கொள்கையில் நிழலாடும் அன்னை முகங்களை நெஞ்சம் மறப்பதில்லை. 

Sunday, December 27, 2020

புது வீடு புது உலகம் - கு அழகிரி சாமி

கு அழகிரிசாமி அவர்களின் இந்த நாவல் முதலில் சுதேசிமித்ரனில் தொடராக வந்து 2018ல் தான் முதல் முறையாக நாவலாக வெளிவந்துள்ளது. மிகக் குறைந்த புற விவரிப்புகளுடன் மன ஓட்டங்களுக்கும் நிகழ்வுகளும் நிறைந்த பெரிய நாவல். குடும்பத்தின் வறிய பொருளாதார சூழல் அழுத்தம் காரணமாக பணம் சம்பாதிக்க சரி மற்றும் தவறான வழிகளுக்கு இடையேயான போராட்டம், தனிப்பட்ட ஒருவனின் லட்சியம் குடும்பத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகள், லட்சியவாதத்தின் நடைமுறை செல்லுபடி எனும் தளங்களில் நாவலை பொருத்திப் பார்த்து வாசிக்க வாசகனுக்கு வாய்ப்பிருக்கிறது, நாவலின் இலக்கிய உட்பிரதி குறித்து நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய இம்மூன்றுமே. ஜெயகாந்தன் அவர்களின் அக்னிபிரவேசம் அ சிலநேரங்களில் சில மனிதர்கள் கதையை இணைத்து வாசிக்கத் தகுந்த படைப்பு புது வீடு புது உலகம் - ஜெகே அவர்களின் ஆர்பாட்டமான மொழியில் அமைந்த சிலநேரங்களில் சில மனிதர்கள் நாவலின் முன் சன்னமான குரலில் ஆனால் அதே தளத்தில் அமைந்துள்ளது புது வீடு புது உலகம் நாவல், தனிப்பட்ட ஒருவனின் சுதந்திரத்தை மட்டும் மையப்படுத்தாது சரி தவறு என்ற மனப்போராட்டத்தின் வீச்சையும் , லட்சியவாதம் மீண்டும் மீண்டும் வந்து சீண்டும சலிப்பான இடங்களையும் தொட்டு செல்கிறது.

பாகீரதியின் மதியம் - பா வெங்கடேசன்

https://solvanam.com/2020/09/12/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0/ பாகீரதியின் மதியம் வாசித்து முடிக்கையில் , அவ்வளவு தானா முடிந்து விட்டதா என்று நம்ப முடியாமல் திரும்ப கடைசி அத்தியாயத்தின் சிலப்பக்கங்களை வாசித்தபடியே இருந்தேன் , ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்த நிகழ்வுகளின் சரத்தையும் , அந்த நிகழ்வுகளை சதா உந்தி கொண்டே இருக்கும் கனவுகளின் வலியையும், வசீகரத்தையும் மனதில் பதிய வைக்க முயன்றபடி இருந்தேன்,நாவலின் மைய சரடு என்ன ? நாவலின் முடிவு உணர்த்துவது என்ன ? நாவல் கூற விரும்பும் கருத்துக்கள் என்ன ? போன்ற டெம்ப்லேட் கேள்விகள் மனதில் எழுந்த வண்ணம் இருந்தன. நாவலின் அசாதாரணமான கேன்வாஸ் ஒரு மையத்தில் நாவலை பற்றிய ஒற்றை கருத்தை அடையவிடாது அலைக்கழித்தபடியே இருந்தது., ஒரு பிராமணனுக்கும் திராவிடர் கழகத்தை சேர்ந்தவனுக்குமானா பெரியார் குறித்த ஒரு உரையாடல் (“இறை மற்றும் இறைமை என்பதன் விண்டு சொல்ல முடியாத அனுபவத்தை ஈவெரா தெரிந்து தான் வைத்திருந்தார் ... என்று இவனும் இறையனுபவம் என்று பிதற்றப்படுவதெல்லாமுமே சூழலால் திணிக்கப்பெறும் அறிவின்பாற் பட்டது என்று அவனும் …” ),ஒரு ஓவியனின் வாழ்நாள் படைப்புகளின் சாரத்தை அறியும் முயற்சி, காதலின் உன்மத்த தனிமையை நீடிக்க விரும்பும் உயிர்களின் அவஸ்தை, பெண் விடுதலை குறித்த ஒரு அறைகூவல் , மனித சமூகமாக நாம் தேர்ந்தெடுத்த பாதையை குறித்த ஒரு விசாரம்,( “சமவெளி மனிதர்கள் தந்திரசாலிகள் ... வர்க்கங்களை ஒழிப்பதும் சாதிகளை ஒழிப்பதும் காடுகளை ஒழிக்கும் குற்றவுணர்விலிருந்து தங்களைத் தப்புவித்துக் கொள்ளும் பிரயத்தனமேயன்றி வேறொன்று என்பதாக நான் நினைக்கவில்லை “) அரசியல் கோட்பாடுகள் சூழ்நிலைகள் தனிமனித விருப்பு வெறுப்புகளுடன் இணைந்து உருவாக்கும் விளைவுகள், கலைவெற்றி Vs களசெயல்பாடு என்கிற இரண்டும் விளிம்புநிலை மக்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் குறித்த ஒரு பார்வை (“நம்பிக்கை களப்பணியென்றால் அவநம்பிக்கை கலையின் ஆதாரம் ) (உலகத்தின் கண்களுக்குக் தன் மக்களின் எந்த முகத்தைக் காண்பிக்க வேண்டுமென்பதை தேர்ந்து கொள்ளும் சுதந்திரமும் அவனுக்கு தேவைப்படுகிறது. உண்மையான கலைஞன் தன் ஜனங்களை ஒரு போதும் கைவிடுவதில்லை என்பதை ஜனங்கள் நம்ப வேண்டும். அழகை மட்டும் தேர்ந்து கொண்டு அவலத்தை அவன் மறைக்கிறானென்பதல்ல அவனுடைய அழகியலின் அடிப்படை, மாறாக எந்த அவலத்தினுள்ளிலிருந்தும் மரணத்தின் விளிம்பிலிருந்தும் ஒரு மின் வெட்டைப் போல மின்னி தெறிக்கும் அழகை இனங்கண்டுகொண்டுவிடும் நிதானம் தான் ஒரு கலைஞனுக்குரிய தகுதியாக அவனுக்குக் கடவுளால் அருளப் பட்டிருக்கிறது என்பது தான் அதன் அர்த்தம்”) கிளைக்கதைகள் கூறும் அற்புதமான கதையாடல்கள், நினைவுகள், என்று பல தரப்பட்ட கோணங்களில் இந்த புதினத்தை நாம் அணுக முடியும். நாவலின் நடை தாண்டவராயன் கதையை போலவே நீண்ட நீண்ட வாக்கியங்கள், முதலில் கொஞ்சம் தடுமாறி ,இழுத்து பற்றுகையில், கடற்கரை குதிரை சவாரி போன்று மிதமான வேகத்தில் சென்றபடி துவங்கிய இடத்திற்கே திரும்ப வந்து, மீண்டும் வெவ்வேறு பாதைகள் பற்றி முற்றிலும் புதியதோர் கனவினை கண்டு நீண்டு கொண்டே சென்ற ஒரு முடிவில்லாத பயணம். விவாதம் -நாவலின் நெடுக வரும் சரடு விவாதத்தன்மை.பல்வேறு இடங்களில் இரு கதாப்பாத்திரங்கள் தங்களுக்குள் உணர்ச்சிகரமான ஆழ்ந்த விவாதங்களில் ஈடுபடத் துவங்குகின்றனர் , நாவலின் விஸ்தாரமான கதைக்களத்தை இந்த உரையாடல்கள் வழி மேலும் நெருங்க முடிகிறது வாசுதேவன் - உறங்காப்புலி பெரியாரை குறித்து விவாதித்தல் , வாசுதேவன் - ஹாலாஸ்யம் பெரியார் குறித்த விவாதம் (“சாதி - உணவு ,உடை, வாழ்முறை ,பாஷை ,சிந்தனை அனைத்திலும் ஒரு தனித்துவத்தை கொடுத்திருக்கிறது , சாதியை இழக்கிறேனென்று ஏன் இத்தனையையும் இழந்து சரித்திரமற்றவனாக வேண்டும் “), வாசுதேவன் - பாகீரதி "பெண்" குறித்து பேசுமிடங்கள், (“திருட்டு எலியை பிடிக்கும் விளையாட்டாகத் தானே எப்போதுமே அமைவது வழக்கம் .... ஆனால் .. அது நேருக்கு நேராக ஒரு புலியை சந்திக்கும் சம்பவமாக இருக்கிறது , அது தைரியமாக அவன் முன் நின்று தன் இருப்பை அறிவிக்கிறது அதற்கான நியாயத்தை சொல்கிறது”)உறங்காப்புலி - சவிதா தேவி பகிர்ந்து கொள்ளும் காதல் நினைவுகள், உறங்காப்புலி - இங்களய்யா உரையாடல்கள் , விபின் பஸ்வான் உறங்காப்புலியிடம் சவிதா தேவி குறித்து கூறுவது , வாசுதேவன் ஓவியர் ஆதிமூலம் சந்திப்பு(“சுருக்கங்களினால் பிடிவாதத்தையும் நிழலினால் தப்பித்தலையும் சட்டையற்ற உடலினால் நினைவுகளோடான நெருக்கத்தையும் கோடுகளினால் மனித நேயத்தையும் அந்த மனித உருவம் வெளிப்படுத்திக் கொண்டிருப்பதாகக் கூறி.”.)என பல குறிப்பிடும்படியான விவாதங்கள் நாவலை அதன் கட்டற்ற கதைகளின் வண்ணங்களை ஒருங்கிணைத்து புரிந்து கொள்ள வாசகனுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கிறது, இல்லையென்றால் அந்த கட்டற்ற கதைகளின் பாதைகளில் அவன் தொலைந்து விடக்கூடும். தருணங்கள்- இன்னவென்று குறிப்பிட்டு சொல்ல முடியாத உணர்வுகள் மற்றும் , பகுத்தறிவு இன்னதென்று வரையறுக்க முடியாத அபூர்வ உணர்வுகள் குறித்து இந்த நாவல் எண்ணிப் பார்க்கிறது, குறிப்பாக காதல். பகுத்தறிவு காதலை வரையறுக்க முயல்கையில் தோல்வியுறுவதாகவே ஆசிரியர் கூறுகிறார்,( “அது வரை அவரால் ஆபாசம் என்று விமர்சிக்கப் பட்டு கொண்டிருந்த புராணங்களிலும் சரித்திரங்களிலும் நிகழ்ந்த எந்த ஒரு மாபெரும் நிகழ்வையும் போலவே திமுக என்கிற ஒரு பெரும் அரசியல் நிகழ்வுக்குக் காரணமாயிருந்த ஒரு மகத்தான காதலின் புதிர்….”) மேலும் அந்த காதல் கிளர்த்தும் பகுத்தறிவால், பைத்தியக்காரத்தனம் என்று வரையறுக்கப்படும் அனைத்து செயல்களையும் அலைச்சல்களையும் மதிப்பான ஒரு இடத்தில வைக்கிறார், காரண காரியங்கள் தாண்டியும் சில விஷயங்கள் ஒருவருக்கு உயிராக இருக்க முடியும் என்றும் , அவ்விஷயங்களுக்காக எத்தகைய எல்லை வரையும் எந்த எதிர்பார்ப்புமின்றி மனிதன் முயல்வான் என்பதையும் கதையின் போக்கில் நாம் உணர்கிறோம்.அந்த தருணங்கள் குறித்து ஒரு வித பயத்துடனும் அனுமானங்களுடனும் கதாபாத்திரங்கள் நினைவு கூறுகின்றன , "இப்படி தான் நினைத்தேன்", என்னை மீறிய ஒரு உணர்வு என்றும் என்றோ நடந்த நிகழ்வுகளை பல வருடங்கள் தாண்டி ஒரு சிறிய தருணம் மீண்டும் கிளறுகையில் கதாபாத்திரங்கள் வார்த்தைகளில் புகலிடம் தேடுவது வியர்த்தம் என்ற முடிவுக்கு வந்து அற்புதம் என்றோ பயங்கரம் என்றோ நினைவு கூறுகின்றனர்.( “மதுபானி ஓவியங்கள் குறித்து - " பார்த்தாயா ஜெமினி .. நாம் பொத்தி பொத்தி பாதுகாத்து வைத்திருக்கும் கலை எத்தனை சாதாரணமாக சளியும் கரிப்புகையும் தீற்றிக்கொள்ளும் சுவர்களில் பெரிய பெரிய பூகம்பங்களைத் தாண்டித் தப்பித்து மூச்சு விட்டு கொண்டிருக்கின்றன பார் என்றார் பில் துரை”),.. (ஜெமினி .. ஆயிரக்கணக்கான புத்தகங்களில் ஒன்றை கூட பிரதிபலிக்காத புத்தம் புதியதான சித்திர புதையலின் முன் சற்றும் எதிர்பாராத வெட்ட வெளியில் திடீரென்று கண் கூச நின்று விட்ட திகைப்பிலிருந்து மீள முடியாதவனாயிருந்தான்”), ( “துஸ்ஸாத் ஓவியங்கள் முன் "அவன் கண் முன் குட்டி சுவர்களில் கரித்துண்டுகளால் இழுக்கப்பட்டிருந்தவை நினைவு தெரிந்த நாளிலிருந்து தன் தகப்பன் முதுகில் வாங்கிய சவுக்கடி தழும்புகளுடன் உடல் நாற நாற மாடுகளை ஒட்டி கொண்டிருந்த வயல்வெளியின் வெறுப்பூட்டும் பச்சை விளைச்சலுக்கு நடுவிலும் வீட்டினுள் இறைந்து கிடைக்கும் உடைசல் மண் கலையங்களின் விளிம்புகளில் ஊர்ந்து கொண்டிருந்த புழுக்களின் எலும்பற்ற உடல்களிலும் , சாணியை தெளித்துத் தெளித்துக் களிம்பேறிப் பிசுபிசுத்துக் கொண்டேயிருந்த மண் தரையின் பச்சை மணத்திலும் அவன் தேடிக் கொண்டேயிருந்த கோடுகளே தான் ") இருமை விளையாட்டு -விஷயங்களை புரிந்து கொள்ள நமக்கு என்றுமே இந்த இருமை கதையாடல்கள் அவசியமான ஒன்றாக இருக்கிறன , கிழக்கு - மேற்கு , பிராமண -பகுத்தறிவு , ஆண்- பெண் , ஆதிவாசி சமூகம் - வேளாள சமூகம், வேளாள சமூகம் - இயந்திர சமூகம், பகுப்பாய்வது - பூரணமாய் உணர்வது காரணம்- விதி , காந்தி – பெரியார் ("அதே வேளையில் சத்தியாகிரகம் , அஹிம்சை, கதர் என்று அந்த கிழவரின் புத்தியிலிருந்து ஒன்றன்பின் ஒன்றாக பிறந்து ப்ரவாகமெடுத்துக் கொண்டேயிருக்கும் கற்பனைகளின் நதியில் துரும்பைப் போல் விழுந்து கை நழுவி போய்கொண்டேயிருக்கும் புத்திரர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டே கரையில் நின்று புலம்புவதை தவிர வேறெதுவும் செய்யவியலாதவர்களாயிருந்த லட்சக்கணக்கான இந்திய பெற்றோர்களை ப் போலவே ") , காமம் - காதல் , யதார்த்தம் - கனவு , சிறு தெய்வம் - பெருந்தெய்வம் , மேட்டிமை - விளிம்பு நிலை , அஹிம்சை - ஆயுதம் , இயற்கை - வளர்ச்சி; கலைஞன் - களப்பணியாளன் ,இவ்விரு எல்லைகளும் ஒரு மனிதனுக்கு தேவைக்கேற்ப பயன்படும் கதையாடல்களாக இருந்து கொண்டே இருக்கின்றன. இந்த நாவலில் கதாபாத்திரங்கள் ஒரு எல்லையை மட்டும் தங்கள் பார்வையாய் கொண்டிருக்கையில், நிகழ்வகளின் தடம் மற்றும் அவர் தம் கனவுகளின் உந்துதல் கூடிய விரைவிலேயே அவர்களை மறு எல்லையில் மறுக்க இயலாத வண்ணத்தில் நிறுத்தி, அரற்ற வைத்து அழகு பார்க்கிறது. வாசுதேவனிடத்தில் சீறும் உறங்காப்புலி பாகீரதியினிடத்தில் தோற்கிறான், புகழேந்தியிடம் சவடால் விடும் வாசுதேவன் பிறிதொரு தருணத்தில் தனித்து இருக்கையில் தனது கீழ்மை குறித்து திடுக்கிடுகிறான், ஜமீன்தாரின் கேள்விக்கு பதிலளிக்க முடியாத இங்கள்ளயா பிறிதொரு காலத்தில் வேறொரு ஜமீன்தாரிடத்து செய்து கொள்ளும் ஒப்பந்தம், காலாதீதமாய் இருந்து வரும் கோடுகளின் வழி பிரபஞ்சம் அறியும் ஜெமினி என்னும் கலைஞன் குறிப்பிட்ட காலத்தின் கேள்விக்கு பதிலளிக்க இயலாத மௌனம் என இரு எல்லைகளில் வாசகனும் தவிக்க விடப்படுகிறான்.( “ஜமீன்தாருடைய பேச்சே தன் மார்பில் தோட்டாவாய்ப் பாய்ந்து விட்டதை போல மயங்கி விழுந்த இங்கள்ளய்யா அதை பற்றி என்ன நினைக்கிறானென்று நம்மிடம் எதையுமே பகிர்ந்து கொள்ளவில்லையென்பதை கவனித்தாயா , என்னுடைய தூரிகைக்கு அது முக்கியம், அந்த மௌனம் என் கித்தானில் ஒரு வண்ணமாக கரைய வேண்டும்” ) கலைஞன் தன் நுண்ணுணர்வின் வழி வர இருக்கும் காலங்களை குறித்த அனுமானங்களை வைக்கிறான். ஜெமினியின் "மிதக்கும் வண்ணங்கள்" என்று அறியப்படும் அந்த கலை உச்சம் சமூகத்தின் சரிவை , கடந்து வந்த மனிதனின் பாதையின் அபாய விளைவை குறித்ததா? , பாவனைகளை சூடியபடி வெறிக்கூத்தாடிய உறங்காப்புலியின் உடம்பில் வாசுதேவன் கண்ட வண்ணக் கலவை ஒரு வேளை " மிதக்கும் வண்ணங்களோ ?", களப்பணியாளனின் வலிந்து சூடிய அந்த பாவனை என்றென்றும் உண்மையை நெருங்கவியலாத ஒரு வறட்டுத்தனத்தின் எல்லையை , குற்ற உணர்வை மட்டுமே தூண்டவல்ல ஒரு செயல்பாட்டை குறிக்கிறதோ? இங்கிருந்து நாம் உறங்காப்புலியின் கனவில் வரும் உருவக கதைக்கு செல்வோமென்றால் , ஆதி இயற்கையை அந்த மாசற்ற நாட்களை , நிலங்களை, போராபுடிமா என்னும் அந்த ஆதிக்கடவுளின் உருவத்தை இக்காலத்திலிருந்து நாம் பின்னோக்கி நமது பொந்திலிருந்து நம்மை ஒரு பூச்சியாக நாமே பாவித்து ,காண்கையில் ஏற்படும் திடுக்கிடல் ஒரு களப்பணியாளனுக்குரியதா , கலைஞனுக்குரியதா ? (“அவையனைத்தும் நிஜமான ஓரறிவு ஈரறிவு ஜந்துக்களல்ல , எப்போதாவது படையல்களோடு தாக்குருக்கு வந்து இருட்டுக்குள்ளிருக்கும் பெரியவளை சம்பிரதாயமாக உற்றுப் பார்த்து விட்டுத் திரும்பி சென்று விட எத்தனித்த மனிதர்கள் தான் அவை,..”) பத்துக்கும் மேற்பட்ட கிளைக்கதைகள் வழி மைய க் கதை செல்கிறது, தனித்து பார்க்கையில் கூடஅந்த கிளைக்கதைகளின் வீச்சு தன்னளவில் முழுமை கொண்டுள்ளது, ஜெமினியின் இளமை கால ஓவிய பயணம், ஜெமினி ஆதிமூலம் அவர்களின் ஓவியம் குறித்த ஸ்திரமான கருத்துக்களை கூறும் இடங்கள்(“ஜெமினியின் முகத்தை மட்டுமே கவனித்தபடி முன் அவர் (ஆதிமூலம் )கடைபிடித்துக் கொண்டிருந்த மௌனத்தில் , ஒரு கலைஞனுக்கு இன்றியமையாத தேவை என்று ஜெமினி கருதிய பெண் தன்மையுடைய ஸ்ருஷ்டிபூர்வமான, கர்வமில்லாமல், சட்டென எதன்மேலும் வியப்படையத் தன்னை அனுமதித்து கொள்ளும் வெகுளித்தனமும் ( அது அறியாமையல்ல) லஜ்ஜையற்ற அபத்தமான புரிதல்களால் வடிவங்களின் சாரத்தை நேரடியாக தொட்டு விடும் தன்னுணர்வற்ற இயல்பான மேதைமையும் இருந்ததாக அவருக்கு தோன்றியிருக்கிறது “) மதுரை இருப்புப்பாதை போராட்டம் குறித்த விசாரணை கதை, சுருளிநாதனின் மொழி போராட்ட கால காதல் கதை (“தனிப்பட்ட உணர்ச்சிகளின் துணையில்லாமல் ஒரு பொதுப் புரட்சியை நடத்தி விட முடியுமா முடியும் என்று இப்போது தோன்றுகிறது , காந்தி அதை செய்தாரென்றும் நான் நம்புகிறேன்”), ஐராவதம் தனது மகள் பாகீரதி மேல் கொண்டிருந்த பாசம் குறித்த கதை, சாம்புவைய்யர் - அரங்கநாதன் நம்பி உரையாடல்கள்,உறங்காப்புலி - பிரமீளா பெயர் விளையாட்டு உறங்காப்புலியின் விசாரணை நாட்கள் ஆகியவை குறிப்பிடும்படியானதாக இருந்தன. இக்கதைகளின் பின்னணியில்1934 பீகார் பூகம்ப சூழல் , சாருமஜும்தார் கால வங்காளம் , திக திமுக பிரிவு காலங்கள், எமெர்ஜென்சி காலகட்டம் என வரலாற்று நிகழ்வுகள் திரைகளாக அமையப்பெற்று பல்வேறு வரலாற்று சாத்தியங்களை நம் கண் முன்னே எழுகின்றன. கட்டற்ற கதைவெளியை, உரையாடல் மற்றும் அற்புத, பயங்கர ,உணர்ச்சிமிகு தருணங்கள் வழி, வரலாறு என்னும் பின்னணி திரை கொண்டு இணைக்க முயன்று, குறிப்பிடத்தக்க வெற்றியும் பெற்றிருக்கிறது "பாகீரதியின் மதியம்". தற்சுட்டும் ஆன்மீகமும் , இடுக்கண் களையும் கையும் , பங்கிட்டாலும் குறையாத அன்பின் விடுதலை ஊற்றும் இணைந்த ஒரு புறப்பாடு நிகழ்ந்திருக்கிறது.

Sunday, July 05, 2020

காளி

நாம் ஆற்றலின் மீது எவ்வளவு நம்பிக்கை வைக்கிறோமோ அதே அளவு தியாக உணர்வுக்கும் இடம் இருக்கிறது என்றுணர்த்திய நாவல் ,

எல்லை கடந்தால் ஆற்றல் ஆணவமாகலாம், தியாகம் எல்லை கடந்தால் தன்னிரக்கம் மற்றும் வெறுப்பை தூண்டலாம். ஆனால் நாம் ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும் எல்லைகளை வகுப்பது மானிடனே, இறைவனின் சித்தத்தில் இவற்றுக்கு எல்லை இல்லை.

அளவிட முடியாத பிரபஞ்ச ஆற்றல் எல்லையில்லாத தியாக உணர்வு. சக்தி Vs சிலுவை என்னும் கருத்தாக்கங்களின் நடன மேடை பால் வான் ஹேய்ஸெ எழுதியுள்ள "காளி" என்னும் இந்தப் புதினம். கநாசு வின் நல்ல மொழிபெயர்ப்பு.

மனிதனின் பார்வையை மட்டுமே கணக்கில் கொள்வோமானால் அளவு கடந்த ஆற்றல் சில நேரங்களில் துயர விளைவுகளை ஏற்படுத்தும், அவ்விளைவுகளை கண்டு ஏற்படும் குற்றவுணர்வு, அக்குற்றத்தை சுமக்கும் சிலுவையாக மனதை மாற்றும். இது ஒரு புறம் இருக்க தன் தவறுகளை உணர்ந்த அளவில்லாத ஆற்றல்  குற்றவுணர்வை  காலத்தின் பாரத்தை சுமக்காது தன்னம்பிக்கை குறையாது  தொடர்ந்து வாழ்வை நடத்தி செல்லும்.

Monday, June 29, 2020

தனி வழி - ஆர் ஷண்முகசுந்தரம்


பழங்கனவின் உண்மை

லட்சிய உணர்வுடன் கூடிய இந்த கனவை நீங்களும் கண்டிருக்கக் கூடும் , இயற்கை கேடில்லாத சூழல் , வாஞ்சையான சுற்றம், உடல் உழைப்புடன் கூடிய ஒரு தொழில் , பெரிய கனவுகள் இடம்பெறாத சீரான, ஆதியிலிருந்து இப்படி தான் வாழ்ந்து வருகிறோம் என்ற எண்ணத் தொடர்ச்சியில் மாறாத காலத்தில் இயற்கையுடன் கலந்து இருக்கும் ஒரு கனவு வாழ்வு , கதையின் நாயகன் நாச்சப்பன் கிட்டத்தட்ட இந்த கனவின் அருகில் வாழ்ந்து வருபவன். அந்த கனவு வாழ்வின் அசலில் ஜாதி உண்டு சுரண்டல் உண்டு, அந்த கனவின் சுவடை அழிக்க வல்ல எல்லாம் உண்டு என்றாலும் அந்த கனவிலும் ஒரு நியாயம் உண்டு, நவீனத்தின் ,இயந்திரத்தின் வேகம் அறிய வைக்கும் காலக் கண்ணாடியாகவும் அந்த கனவு தொடர்ந்து கொண்டே இருக்கிறது, நவீன உலகத்தின் பதட்டத்தில் இருந்து விடுபட ஆசையாக அந்தக் கண்ணாடியை எடுத்து நாம் கண்டு அக்கனவினை மீட்டி மகிழலாம்.இந்த தொடர்ச்சியான கனவு வாழ்வில் நவீனமும், இயந்திரமும், வாங்கிக் குவிக்கும் பண்பாடும்,குறுக்கிடுகையில் ஏற்படும் மாற்றங்களை குறித்து,இயல்பான தொனியில் எந்த வித மட்டையடி கருத்துக்களுமின்றி, நாம் அறிந்து கொள்ள இந்நாவலை வாசிக்கலாம்.


தீர்க்கதரிசனம்

இது யதார்த்த பாணி நாவல். நாவல் நடக்கும் காலத்திற்கும் இப்போதைய காலகட்டத்திற்கும் இடையே எழுபது ஆண்டுகள் இடைவெளி. நாவலின் இறுதியில் கதை மாந்தர் எடுக்கும் முடிவுகளாக ஆசிரியர் அமைத்து இருக்கும் விஷயங்கள் தீர்கதரிசனமாக அமைந்து விட்டது , அவ்விஷயங்கள் கொங்கு வட்டாரத்தின் தொழில் முனைப்பிற்கு சான்றாக அமைந்திருக்கிறது. அதே நேரத்தில் அம்முனைப்பின் வெறியின் நிழலில் உள்ள இன்றைய  சூழலியல் யதார்த்தம் முகத்தில் அறைகிறது.

நேரம் குறித்த பிரக்ஞை

மெதுவாக நகர்ந்து செல்லும் காலத்திற்கு கொடுக்கப்பட்ட சாட்டையடி மணிக்கூண்டுகள் எனக் கூறலாம், நொடிக்கு நொடி மக்கள் வாழ்வின் நேரம் குறித்த பிரக்ஞை வளர்வதற்கு நவீனம் தான் காரணமாக இருந்திருக்கிறது, நேரமும் அது குறித்த பதட்டமும் நவீனத்தின் கூடப் பிறந்த குழந்தையாகவே இருக்கிறது, இந்த நேரம் குறித்த பிரக்ஞை இந்த நாவலில் மில் சங்கின் அலறல் என்ற வகையில் பதிவாகி இருக்கிறது, சங்கொலியை தொடர்ந்து சாரை சாரையாக மக்கள் வெளிவரும் அல்லது மில்லுக்கு உள்ளே செல்லும் சித்திரம் மாடர்ன் டைம்ஸ் படத்தில் கண்ட சித்திரம், அப்படம் குறித்து ஒரு திரையிடல் போது ஒருவர் கேட்டார், "படம் வந்து நூறாண்டுகள் ஆகிவிட்டது , அப்போது இருந்ததை விட இப்போது இயந்திர மயம் அதிகமாகி விட்டதே என்று ? "

முதலாளித்துவத்தின் கேள்விகள்

உடல் உழைப்பையும் முதலையும் ஒரு கணித சமன்படாக கருத துவங்கியத்தில் முதலாளிக்கு ம் தொழிலாளிக்கும் எதிர்பாராத சவால்கள் ஏற்பட்டு விட்டன , தொழிலாளியும் இயந்திரமும் ஒன்றாகியதில் ஒருவருக்கொருவர் முடிவுறாத யுத்தம் தொடங்கி நடைபெற்று வருகிறது, முதலாளியின் தன்முனைப்பும் தொழில் ஆர்வமும் வெறும் பணத்தாசையாய் சுருக்கும் உரையாடல் தொழிற்சங்கங்களின் நங்கூரமென ஆகிவிட்டது, மில்லின் அலகாக சேரும் தொழிலாளிக்கு எதிர்வினை ஆற்றும் வாய்ப்பாக  அமையும் வாய்ப்புகள் குறித்து சற்று அறியலாம், ஒன்று இடையறாத அந்த கணக்கு குறித்து முதலாளிகளுடன் பேரம் பேசும் தொழிற்சங்க பிரதிநிதி, இரண்டு அத்தொழிலை பயின்று தானே ஒரு முதலாளி ஆவது, இவ்விரு வாய்ப்புகளின் வார்ப்பாக கருபண்ணனும் கிட்டப்பனும் வருகிறார்கள்.

வரிசை

கநாசு இட்ட நவீன இலக்கிய வரிசையில் ஆர் சண்முகசுந்தரம் அவர்களின் பெயர் இருந்தது, இன்று நவீன இலக்கியம் குறித்து விமர்சகர் எவரும் வரிசை இடுகையில் சண்முகசுந்தரத்தின் பெயர் விடுபடுவதற்கு வாய்ப்பிருக்கிறது,  எழுத்தாளர் எஸ் செந்தில்குமார் கூறி வரும் " பொதுக் குரல் சாதியத்திலிருந்து வராது" என்னும் வரியை நினைவுக்கு கொண்டு வருகிறேன், எளிய புற காட்சிகளோடு   சாதி தவிர்த்து சமூகத்தின் குறுக்கு வெட்டு தோற்றத்தை விவரிக்கும் படைப்புகளை இக்காலத்தில் எவரும் விரும்புவதில்லை, மனம் உறவு சிக்கல் குறித்த தீவிரமான படைப்புகள் , சாதி வட்டார படைப்புகள், வரலாற்று படைப்புகள் முதலியவையே வாசகன் மத்தியில் அதிக கவனம் பெறுகின்றன. சிக்கல் இல்லாத ஆனால் சாதாரண வாழ்வின் கணங்கள் அவதனிப்புகள்  தற்கால இலக்கியத்தில் மிகவும் அரிதாகவே இடம் பெறுகின்றன, "தனி வழி"  அப்படிபட்ட  பொதுப்படைப்பாக அமைந்துள்ளது.


Friday, June 26, 2020

காற்றோவியம் - ரா கிரிதரன்

அன்புள்ள கிரிதரன் அவர்களுக்கு,

காற்றோவியம் புத்தகம் வாசித்தேன், தங்கள் பரந்துப்பட்ட இசை அனுபவம் மிகவும் சிறப்பு , அடிப்படைகள் முதல் சாதனைகள் வரை உங்களுக்கு விஷயம் புரிந்திருக்கிறது, சம கால ஆளுமைகள் குறித்து நீங்கள் எழுத வேண்டும்.

நான் இன்று வரை வெறும் இசை நுகர்வோனாகவே இருந்து வருகிறேன், முதல் அறிமுகம், எஸ்ரா ஒரு கட்டுரையில் "tchaikovsky" waltz of flowers இசை தட்டு ஒன்றை gramaphone வழியாக, ஒரு வாழ்ந்து முடிந்த வீட்டில், கேட்டதை பற்றிக் குறிப்பிட்டிருப்பார், சுவற்றில் மலர்கள் மலர்ந்தது போல் இருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

ஒரு எளிய இலக்கிய வாசகனாகவே இந்தப் புத்தகத்தை வாசித்தேன், மனதுக்கு நெருக்கமானதாக  இருந்தது pau casals மற்றும் zubin mehta கட்டுரைகள், pau casals அந்த மலையடிவார கிராமத்தில் இருந்து கொண்டு போரிலிருந்து தப்பி வரும் மக்களை எதிர் கொண்டு வினவும் சித்திரம் அவர் வாழ்நாள் சாதனையின் குறியீடு போல் அமைந்துவிட்டது , வடிவ தேர்வின் மூலம் zubin mehta குறித்த கட்டுரை மனதை பாதித்தது, குறிப்பாக அவர் தந்தையின் வாசனையை உணரும் தருணங்களை நீங்கள் அமைத்திருக்கும் விதம் இசை பொழிவின் நடுவில் நாம் ரசிக்கும் நிசப்தத்தை நினைவூட்டும் கணங்கள் 

சில கட்டுரைகள் விஷயம் தெரிந்தவர்களுக்கானது , என் தலைக்கு மேலே சென்று விட்டது, நீங்கள் இதற்கு மேல் எளிமையாக்க முடியாது, மீண்டும் படிக்க வேண்டும் 

அன்புடன்
மணிகண்டன்




Monday, June 22, 2020

மனம் - பெரியசாமி தூரன்

அறிமுக நூல்களை படிக்கையில் அடுத்து அடுத்து புதிய கலைச்சொற்கள் தோன்றியபடி இருந்து வாசிப்பவர் மலைத்து போவும் விதமாக அமைந்து இருக்கும் ஆனால் தூரன் அவர்கள் நூல்களில் குறைவான அளவே புதிது புதிதாக கலைச்சொற்கள் வருகின்றன,அதே நேரத்தில் மீண்டும் மீண்டும் அந்த ஒரு கலை சொல் குறித்த விளக்கம் வெவ்வேறு இடங்களில் வந்தபடியே இருக்கிறது. இந்த நடைத்தேர்வின் மூலம் விஷயங்களின் அடிப்படை குறித்த தெளிவான புரிதல் கிடைக்கிறது. 


எளிமையான விளக்கங்களின் இன்னொரு ஆபத்து சிக்கலான நுட்பமான இடங்களை எவ்வாறு விவரிப்பது என்பது ? அத்தகைய இடங்களில் தூரன் விஷயங்கள் அவ்வளவு எளிமை அல்ல என்று வெளிப்படையாக ஒப்பு கொள்கிறார், அதே நேரத்தில் பல்வேறு கோணங்களில் அவ்விஷயம் எவ்வாறு பார்க்கப்படுகிறது என்பதை விவரிக்கிறார், " என்று கூறுவாறும் உண்டு" , என்று கூறுவாறும் உண்டு"  என பல்வேறு ஆராய்ச்சிகளின் முடிவுகளை கோடிட்டு காட்டி  விஷயத்தின் நுட்பங்களை எடுத்துரைக்கிறார்.

விஷயத்தின் தோற்று வாய் குறித்து தொடங்கி மேலும் விவரிக்க அவ்விஷயம் தொடர்ந்து எப்படி பயணப்பட்டு வருகிறது என்பதை கவனமாக பதிவு செய்கிறார் , குறிப்பிட்ட நபரையோ, சாராம்சத்தையோ தூக்கிப் பிடிக்காது, அவ்விஷயம் குறித்த புரிதலில் ஏற்பட்டுள்ள கால வாரியான மாறுதல்கள்,  அவ்விஷயம் குறித்த வெவ்வேறு நபர்களின்  பார்வைகளை குறித்து கூறி அவ்விஷயத்தை முழுமையாக புரிந்து கொள்ள உதவுகிறார்.

எப்படி  மன ஆராய்ச்சி துறையில் ஒரு சிறிய புரிதலை அடைய தொடர் ஆராய்ச்சிகளும், தரவுகள் சேகரித்தலும், பல்வேறு நபர்களின் பங்களிப்பும் கூடி வருகிறது என்பது இந்நூலை வாசிக்கையில் புலனாகிறது.
________

கநாசு " பிராய்ட் கும்பல்" என்று எழுதியதை வாசித்தது நினைவில் இருக்கிறது , இது மனதில் எப்படியோ தங்கி விட்டது, பிராய்ட் குறித்த விட்டேத்தியான மனநிலையை தோற்றுவித்துவிட்டது, தொடர்ந்து டாக்டர் ஷாலினி கூறி வரும் விளக்கங்கள் என்னுள் ஒரு வித ஒவ்வாமையை ஏற்படுத்தியது,  இந்நிலையில் தான் பிராய்ட் கூறிய பெரும்பாலான கருத்துக்கள் தாங்கிய பெ தூரன் அவர்கள் எழுதிய மனம் குறித்த நூல்களை வாசிக்க நேரிட்டது ,இந்த ஒவ்வாமை பாலுணர்வு சார்ந்தது , அனைத்து மன சிக்கல்களுக்கும் பாலுணர்வே அடிப்படை என்பது பிராய்ட் சித்தாந்தம், இங்கே ஒரு சிறிய பெயில் விண்ணப்பம் உண்டு, பாலுணர்வு என்பது காமம் சார்ந்தது மட்டுமல்ல அன்பும் சேர்ந்தது தான் அது என்று பிராய்ட் கூறியதாக தூரன் எழுதி இருப்பது. எனது இந்த ஒவ்வாமை க்கு  வலு சேர்க்கும் விதமாக எந்த அறிவியல் தரப்பு இருப்பதாக நான் முன்னர் அறிந்தத்தில்லை ஆனால் தூரனின் நூல்கள் வழி அட்லெர் மற்றும் யுங் பரிச்சயம் ஆகிறார்கள், archetype யுங் என்று அரைகுறையாக தெரிந்திருந்தாலும் பிராய்ட் அவர்களின் தொடர்ச்சியாய் அட்லெர் மற்றும் யுங் வருகிறார்கள் என்பது இந்நூல் வழியே தெரியவந்தது, பிராய்ட் பாலுணர்வை இன்னொரு வகையில் லிபிடோ என்றும் இத் Id என்றும் கூறுகிறார். யுங் லிபிடோ காம இச்சைகள் மட்டும் நிறைந்த இடம் கிடையாது என்றும் மூதாதையர் சரடு மற்றும் ஆற்றலின் உறைவிடம் என்றும் கருதினார் , இப்படி புரிந்து கொண்டேன் காமம் அல்லாத நடவடிக்கைகள் மூலம் நாம் லிபிடோ வை ஆற்றுப்படுத்த முடியும் இத் ன் இச்சைகளை ஆற்று படுத்த முடியும், 

இவ்விடங்களில் இரு இலக்கிய துணுக்குகள் , தி ஜானகிராமனின் "சக்தி வைத்தியம்" சிறுகதை , சில நாடுகளில் தாயை கண்டே பிள்ளைகள் பாலுணர்வை அறிந்து கொள்ள துவங்குவது குறித்து நான் எங்கோ படித்த ஞாபகம். .இரண்டும் இரு எல்லைகள்.யுங் மற்றும் பிராய்ட் குறித்து புரிந்து கொள்ள இவை உதவும். சக்தி வைத்தியம் கதையில் அடங்காது கத்தி கொண்டே இருக்கும் சிறுவனுக்கு ஓவியத்தை பரிந்துரைத்து லிபிடோவை ஆற்றுப்படுத்தும்  திறமையான ஆசிரியரை , அவரது தாய், ஆசிரியர்த்தனத்தை கணக்கில் கொள்ளாது அவருக்கு சமைக்க தெரியாது என்ற புள்ளியின் வழி எடைபோடுவார் , ஆற்றலின் சக்தியின் வழியை அறியும் வண்ணம் அமைந்த கதை. யுங் இந்தியாவிற்கு வந்திருக்கறார், யோகம் குறித்து அறிந்திருக்கிறார்.

அட்லெர் தாழ்வு மனப்பான்மை என்ற புள்ளியில் இருந்து துவங்குகிறார், வாழ்நாள் தொடங்கிய நாள் முதல் பெற்று கொண்டே இருக்கும் குழந்தை திருப்பி கொடுக்க நினைக்கும் எண்ணத்தை உயர்வு உந்துதல் என்று கூறுகிறார், மனம் கொடுக்கும் உயர்வான இடத்தை விரும்பிகிறது, இவ்விஷயம் குறித்து தூரன் இந்நூலில்  பெரிதாக விளக்கவில்லை ஆனால் அட்லெர் குறித்து தாழ்வு மனப்பான்மை என்னும் நூலை எழுதியுள்ளார்.

அதீத அகத்தை  (Super Ego) என்னும் மனதின் ஒரு பகுதியை போலீஸ் ஆசிரியர்  லட்சியம் என்கிற இடத்தில் வைக்கிறார், லிபிடோவை இத்தை (Id)மிருகங்கள் இடத்திலும் அகத்தை (Ego) நடைமுறை மனதின் இடத்திலும் வைக்கிறார், கூத்தாடும் இத்தும் கண்டிக்கும் அதீத அகமும் அகத்தை ஒரு வழி பண்ணுகின்றன. 

Trance திரைப்படம் இக்கோட்பாடுகளை தொட்டு செல்வதாக திரை விமர்சகர் சுதிஷ் காமத் கூறுகிறார் 

சதா நம் மிருக இச்சைகளை மட்டுமே நினைவுபடுத்தி கொண்டிருக்கும் மன பகுப்பாய்வு முறை  அவை சார்ந்த கலைப்படைப்புகள், உலக நிகழ்வுகள் குறித்த குற்ற உணர்வை தூண்டியபடி இருக்கும் அதீத அகம் என்கிற பிணைப்பு நம் காலத்தில் எப்படியோ அமைந்து விட்டது, இவ்விடத்தில் நாம் நம் மூதாதையர் விதித்துள்ள லட்சியம் குறித்து பேச வேண்டி இருக்கிறது, புலனடக்கம் மன ஓட்டத்தை நிறுத்தும் ஆற்றல் இவையே பூமியில் பிறந்தவர்க்கு இலக்காக லட்சியமாக பெரும்பாலும் கிழக்கில் கூறப்படுகிறது
இச்சைகளை ஆற்றுப்படுத்தி குறைத்து, ஆதி பயம், கவலை , நடைமுறை பொய் மூன்றும் பூச்சியமாகி இருக்கும் இடம் தான் லட்சியமான யோக நிலையா என்று அறிய ஆவலாக உள்ளது.

அடிமனம் மற்றும் மனமும் அதன் விளக்கமும் என்கிற இரு நூல்கள் குறித்த மனப்பதிவு இந்தக்கட்டுரை.