Sunday, July 21, 2019

தாண்டவராயன் கதை - பா வெங்கடேசன்


அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு 

தாண்டவராயன் கதை - வாசித்து முடித்தேன் - மிகவும் நிறைவான வாசிப்பு அனுபவமாக இருந்தது - துப்பறியும் கதையின் சுவாரசியமும் அதே நேரத்தில் எண்ணற்ற கதைகளின் வழி சமூக வரலாறு  , பொருளிய , தத்துவ தளங்களில்  சிந்திக்க, உரையாட அற்புதமான அனுபவமாக அமைந்தது

தங்கள் தளத்திலும்(இரண்டாயிரத்திற்கு பின் தமிழ் நாவல்கள்)  சாரு அவர்களின் தளத்திலும் இந்த நாவல் பற்றி படித்தப் பின்னர் இந்த நாவலை வாங்க நான் மீண்டும் முயற்சிக்கத் தொடங்கினேன்.  ஆழி பதிப்பகம் தற்போது இயங்காத காரணத்தால் எந்த புத்தகக்  கடையிலும் கிடைக்காத பக்ஷத்தில் ஓலைச் சுவடி போன்ற அரிதாகி விட்ட( நன்றி சாரு)   இந்தப் புத்தகத்தை (அகநாழிகை பொன் வாசுதேவன் தயவில்)  கையகப் படுத்தினேன். சிவராம் கரந்தின்  மண்ணும் மனிதரும் , ராஜ் கௌதமனின் சிலுவை ராஜ் சரித்திரம் எங்கும் கிடைப்பதில்லை ( தமிழினி  மீண்டும் பதிப்பிப்பார்களா தெரியவில்லை )       

நீண்ட நீண்ட வாக்கியங்கள் துவக்கத்தில் மலைப்பை ஏற்படுத்தினாலும் பின்னர் ஒரு புதிர் போல் ஸ்வாரஸ்யத்தை தூண்டியது. பரீட்சைக்கு படிப்பதைப் போல் படித்து முடித்தேன். தொன்று தொட்டு வரும் துயரக் கதையை, உணர்ச்சி பூர்வமாக மட்டும் அல்லாது தேர்ந்த சமூக விமர்சகனின், தத்துவ ஆசிரியனின்  கனகச்சிதமான  பார்வையை கொண்டு சொல்லியிருக்கும் பா வெங்கடேசன் அவர்களின் படைப்பாற்றலும் அர்ப்பணிப்பும் அபாரம்

கையகப் படுத்திய நாவலுடன் மயிலை பரிசல் கடையில் செந்தில்நாதன்  ,நண்பர் லியோ , நண்பர் நரேன் மற்றும்  கி சச்சிதானந்தம்  அவர்களுடன் சிறிது நேர உரையாடலுக்கு பின்னர் திரு கி தாண்டவராயன் கதையை வாங்கி "ஓசூர் காரர்" என்று குறிப்பிட்டு நீண்ட நீண்ட வாக்கியங்கள் குறித்து குறிப்பிட்டு "நான் குறையா சொல்லவில்லை முயற்சி வித்தியாசமா இருக்கு ஆனால்  படிப்பதற்கு அசாத்யமாய் இருப்பதாக சொன்னார்" ( கி விரைவில் தாம்பரத்தில் " ஆனந்த் குமாரசாமி நினைவு நூலகம்  துவங்க இருப்பதாகக்  கூறினார் , பீகாக் பதிப்பகம் பெயரைக் குறிப்பிடத்தும் கண்கள் மின்னின - மௌனி சிறுகதைகள் தொகுப்பு

நாவலைப் படித்து முடித்தவுடன் சிறு குறிப்புகள் எழுத முயன்று உதிரி வாக்கியங்களையும் ஓரிரு சொற்றொடர்களையும்  மட்டுமே எழுத முடிந்தது . கதை படிக்கும் நேரங்களில் ஒரிஜினல் வாழ்வில் (?)  நடக்கின்ற   நிகழ்ச்சிகளை கதையுடன் முடிச்சு போட்டு  ( இதற்கு என் ஆணவமே காரணம் எனினும் )  நினைக்கையில் இன்று கபாலீஸ்வர மாட வீதியில்  அத்தனை பொம்மைகளுக்கு நடுவே தேரோட்டுபவனின் சிலை கண்டதில் ஒரு மனத்திருப்தி

தாண்டவராயன் கதையை படித்ததும் " மிலன் குந்தேராவின் Unbearable lightness of being படிக்க  நினைத்திருந்தேன்  இன்று தான் ரியாஸ் கடிதத்தில் பா வெங்கடேசன்  மிலன் குந்தேராவின் பாதிப்பைப் பற்றி சொல்லி இருப்பதைப் பார்த்தேன் - ஒரு சேர அதிர்ச்சியும், என் வாசிப்பின் மீதான மன நிறைவும்    

தங்களுடன் பகிரத் தோன்றியது ஆகவே இந்தக் கடிதம்

அன்புடன்
மணிகண்டன்